கோடைக்காலம் துவங்கிவிட்டது. சூரிய வெப்பம் அதிகரிக்கும் போது, நம் உடல் வெப்பமும் அதிகரிக்கும். ஆகவே கவனமாக இருப்பது நல்லது. வெப்பம் அதிகரிக்கும்போது, மூளையில் உள்ள 'ஹைப்போதலாமஸ்' எனும் பகுதி, வியர்வையை பெருமளவில் சுரக்கச் செய்து, உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஆனாலும் இம்முயற்சிக்கும் ஓர் எல்லை உண்டு. அக்னி நட்சத்திர வெயிலின்போது ஹைப்போதலாமஸ் தன்னுடைய முயற்சியில் தோற்றுப்போகிறது.
உடலின் வெப்பத்தை ஓரளவுக்குத்தான் குறைக்கிறது. இதனால், வியர்க்குரு, வேனல்கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு எனப் பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன. அதே வேளையில் நம் உணவு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தால், வெப்ப நோய்களை வெல்லலாம்.
வெப்பத் தளர்ச்சி: மனித உடலின் இயல்பான வெப்பநிலை, 98.4 டிகிரி பாரன்ஹீட். வெயில் அதிகரிக்கும்போது இது, 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும். அப்போது உடல் தளர்ச்சி, களைப்பு உண்டாகும். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக, உடலிலிருந்து சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல உப்புகள் வெளியேறி விடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion) என்று பெயர்.
வெப்ப மயக்கம்: நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர், சாலையில் நடந்து செல்பவர் திடீரென மயக்கம் அடைவதை காணலாம். இது வெப்ப மயக்கத்தின் (Heat Stroke) விளைவு. வெய்யிலின் உக்கிரத்தால், தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மயக்கம் ஏற்படுகிறது.
வெப்ப மயக்கத்துக்கு முதலுதவி: மயக்கம் ஏற்பட்டவரை, குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்றுபடும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கி வைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளுக்கோஸ், சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுநீர்க் கடுப்பு: தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதன் விளைவால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். அப்போது சாதாரணமாக காரத் தன்மையுடன் இருக்கின்ற சிறுநீர், அமிலத்தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவுதான் சிறுநீர்க்கடுப்பு. வெயிலில் அலைவதைக் குறைத்துக்கொண்டு, நிறைய தண்ணீர் குடித்தால், இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.