பருக்கள் ஏன் வருகின்றன? அவற்றை தடுக்க முடியுமா?
-ஜெனித், தென்காசி
சருமம் , எண்ணெய் பசையுடன் இருக்க காரணம், சீபம் என்ற எண்ணெய் உடலில் சுரப்பதுதான். ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால், சீபம் எண்ணெய் சிலருக்கு அதிகமாக சுரக்கும். இந்த சுரப்பிகளில் தடை ஏற்படுவது அல்லது சீபம் எண்ணெய் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால், முகத்தில் பருக்கள் போல சிறு கட்டிகள் உருவாகின்றன.
அதுமட்டுமின்றி, அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல், மனநல கோளாறுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், சுற்றுச்சூழல், தலையில் பொடுகு பாதிப்பு இருத்தல், போன்ற காரணங்களாலும் பருக்கள் வருகின்றன.சருமத்திலுள்ள எண்ணெய் பசையை குறைக்க, சருமம் எந்த வகை என்பதை அறிந்து, அதற்கான 'பேஷ்வாஷ்'களை வாங்கி, ஒரு நாளுக்கு இரண்டு, மூன்று முறை முகத்தை கழுவலாம். முகத்தை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளை தவிர்ப்பதன் மூலம், பருக்கள் வருவதை தடுக்கலாம்.
-திலகா, அழகு கலை நிபுணர், வளசரவாக்கம், சென்னை
சர்க்கரை நோய் கண்களை பாதிக்குமா?
-சிரோன்மணி, மாதவரம், சென்னை.
சர்க்கரை நோயாளிகள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம், சர்க்கரை நோய், கண்களில் உள்ள பார்வை நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கிறது. இதனால், கண்கள் பாதிப்புக்கு உள்ளாகி, அசைக்கவே சிரமமாக இருக்கும். சர்க்கரை நோய், விழித்திரையை பாதித்தால், 'டயபடிக் ரெட்டினோபதி' பிரச்னை ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.விழித்திரையில், நிறைய ரத்த குழாய்கள் உண்டு. சர்க்கரை நோய் உள்ளோருக்கு, அந்த ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், விழித்திரையில் நீர் அல்லது ரத்தம் கசிந்து, மூளையில் உருவம் பதியாமல் போய் விடுகிறது; பார்வை இழப்பு
ஏற்படுகிறது.
-நமீதா புவனேஸ்வரி, கண் மருத்துவர், எழும்பூர், சென்னை
எனக்கு வயது 43. தினமும் மூட்டு வலியுடன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறேன். மூட்டு வலி ஏன் வருகிறது?
-காயத்ரி, கடையநல்லூர், திருநெல்வேலி
மூட்டு வலியை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று 'ஆர்த்ரைடிஸ்;' இரண்டு, 'ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்.' இவற்றில், எந்த வகை தாக்கியிருக்கிறது என்பதை, மருத்துவ பரிசோதனைகள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மூட்டு வலி வருவதற்கு, 'வைட்டமின் டி,' கால்சியம் சத்துகள் போதிய அளவு இல்லாததும், உடற்பயிற்சி செய்யாததுமே காரணம். நமது மூட்டு இணைப்புகளில், 'ஹயலின் காட்ரிலேஜ்' என்ற வழவழப்பான பொருள், எலும்புகளின் மேல் இருக்கும். மூட்டுகள் மூலமாக செய்யப்படும் எந்தவொரு செயலுக்கும், இந்த 'காட்ரிலேஜ்' அவசியம். அது பாதிக்கப்படுவதாலும், தசைகள் வலுவிழக்கும் போதும், மூட்டு வலி வரும்.
-ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி, எலும்பு நிபுணர், சென்னை