எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை (11)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

ரயில் நிலையமெங்கும் கறுப்புச் சட்டைக்காரர்கள் குழுமியிருந்தனர். கழகக் கொடியை கையில் எடுத்த ராதா, அதை இன்ஜினின் முன்புறம் கட்டச் சொன்னார். ரயில் கிளம்பும் நேரம் நெருங்கியது; அப்போதும் அண்ணாதுரை வரவில்லை.
தூத்துக்குடியில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார் கே.வி.கே.சாமி. மாநாடு ஆரம்பமாகவிருந்தது; அதுவரை அண்ணாதுரை வராமலிருந்தது, ராதாவுக்கு உறுத்தலாக இருந்தது.
மாநாடு துவங்கி, ஒவ்வொருவராகப் பேசிக் கொண்டிருந்தனர். ராதாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை; ஈ.வெ.ரா.,வின் காதருகே சென்று, 'ஐயா... இன்னும் அண்ணாதுரை வரலீங்களே...' என்றார்.
'என்ன அண்ணாதுரை... அவர் என்ன பெரிய கே.பி.சுந்தராம்பாளா... அந்த அம்மா வரலன்னா தான் பாட ஆள் இல்லாம கச்சேரி நின்னு போகும்; இங்கே இருக்கிறவங்க எல்லாருமே அண்ணாதுரை தான்; எல்லாருமே தம்பிகதான்...' என்று சத்தமாக கூறினார். அப்போதுதான் ஏதோ பிரச்னை என்று ராதாவுக்கு புரிந்தது. பின், மற்றவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டவருக்கு அண்ணாதுரை மேல் கோபம் வந்தது.
அதன் பின், ஒரு நாள் மாலையில், நாடகத்தை முடித்த பின், மைக் பிடித்த ராதா, 'மாநாடுகளுக்கு தலைவர் வராம இருக்கலாம்; தளபதிகள் வராமல் இருக்கலாமா... அண்ணாதுரை தளபதி பதவிக்குத் தகுதியற்றவர்...' என்றார்.
ராதாவின் பேச்சு கருணாநிதிக்கு சுரீரென்றது. தன், முரசொலி பத்திரிகை மூலம் எதிர்வினை ஆற்ற முடிவு செய்தார் கருணாநிதி... 'மாநாட்டில், நடிகவேள் நஞ்சு கலந்தார்...' என்பது தான் கருணாநிதி எழுதிய கட்டுரையின் தலைப்பு.
'அண்ணாவின் அவசரம்' என்ற புத்தகத்தை தயாரித்து, அதை கழக தொண்டர்களிடையே பரப்பினார் ராதா. அண்ணாதுரையிடமும் கொடுத்து படித்து பார்க்கச் சொன்னார்.
ராதாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால், 'இந்த புத்தகத்தை யார் எழுதி கொடுத்தது?' என்று கேட்டார் அண்ணாதுரை.
'யார் எழுதினா என்ன... நான் சொல்றத, படிச்சவன் ஒருத்தன் எழுதினான்...' என்றார் ராதா.
அதற்குபின், பொதுக்கூட்டங்களிலும், நாடக வசனங்கள் மூலமாகவும் அண்ணாதுரையை கடுமையாக திட்டினார் ராதா. இருப்பினும், அவர்களுக்கிடையே இருந்த நட்பு அப்படியே இருந்தது.

அண்ணாதுரை, திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்திருந்த சமயம், காஞ்சிபுரத்தில் திராவிடர் கழக மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற ராதா, அண்ணாதுரையின் வீட்டில் தங்கினார்.
'என்ன... திராவிடர் கழக மாநாட்டுக்கு வந்திருக்கீங்க?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அண்ணாதுரை. 'எனக்கு வேறென்ன வேலை...' என்றார் ராதா.
ஒருமுறை ஈரோடு சென்றிருந்த ராதா, அங்கு ஈ.வி.கே.சம்பத் வீட்டில் தங்கினார். சம்பத் அப்போது தி.மு.க.,வில் இருந்தார் என்றாலும், எல்லாரும் பழைய நண்பர்கள் தானே! ஆனால், அப்போது தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சம்பத் வீட்டில் கூடுவதாக இருந்தது. வெளியாளான ராதா இருப்பதை, மற்றவர்கள் விரும்பவில்லை. ராதாவை வெளியே போகச் சொன்னார்கள்.
'யாரும் இருக்க கூடாதுன்னா சதி நடக்கிறதுன்னு தானே அர்த்தம்; என்னய்யா சதி செய்யுறீங்க? இங்கே நடப்பதை அங்கே சொல்ல மாட்டேன்; அங்கே நடப்பதை இங்கே சொல்ல மாட்டேன். என்னைப் பற்றி அண்ணாதுரைக்கு தெரியும்...' என்றார் கோபமாக ராதா.
'ராதா எங்கேயும் இருக்கலாம்; அதில் ஒன்றும் தவறில்லை...' என்று அண்ணாதுரை குரல் கொடுக்க, சலசலப்பு அடங்கியது.

தூக்கு மேடை நாடகத்தில் ராதாவும், கருணாநிதியும் இணைந்து நடிக்கும் ஒரு காட்சியில், ராதா, அண்ணாதுரையை விமர்சிப்பது வழக்கம். அதிலும், அண்ணாதுரையின் விசுவாசியான கருணாநிதியை பக்கத்தில் வைத்து பேசுவது என்றால் கேட்கவும் வேண்டுமா? அபிநய சுந்தர முதலியாருடன், மாணவர் தலைவர் பாண்டியன் வாக்குவாதம் செய்வது போல அமைந்திருந்த அக்காட்சியில், நாடகத்தில் இல்லாத வசனம் ஒன்றைப் பேச ஆரம்பித்தார் ராதா...
'ஏன்டா... ரொம்ப பேசுறியே... நான் ஒரு கேள்வி கேட்குறேன் பதில் சொல்லு பாப்போம்...'
'என்ன கேள்வி?'
'என்னமோ உங்க அண்ணாதுரை அப்படிப்பட்டவரு, இப்படிப்பட்டவரு, 'தளபதி' ன்னு சொல்றீங்களே... அவரு எந்தப் போர்க்களத்துக்கு போனாரு; யாரை வெட்டுனாரு, எங்க ஜெயிச்சாரு, எப்படிடா அவரு தளபதி ஆனாரு...'என்றார்.
இதைக் கேட்டதும் கூட்டத்தில் சலசலப்பு. கருணாநிதி வசனத்தில் சளைத்தவரா என்ன? உடனடியாக பதிலடி கொடுத்தார்...
'வீணை மீட்டப்படாமல் இருந்தாலும், கை விரல்கள் பட்டதும் நாதம் எழும்; வாள் வெட்டாமல் இருந்தாலும், ஒருவர் எடுத்து வெட்டினால் மற்றவர் உடம்பில் ரத்தக்காயம் ஏற்படும். அப்படித்தான் போர்க்களம் என்று ஒன்று வராமல் இருந்தாலும், எங்கள் அண்ணாதுரை, தளபதி தான். மீட்டப்படும் போது, வீணை நாதம் இசைக்கும்; வெட்டும் போது, வாள் தன் கூர்மையை காட்டும்; போர்க்களம் என்று வரும் போது, எங்கள் தளபதி, தான் தளபதி என்பதை நிரூபிப்பார்...' என்றார்.

இழந்த காதல், விமலா, தூக்கு மேடை, லட்சுமி காந்தன் மற்றும் போர்வாள் போன்ற நாடகங்களே மீண்டும் மீண்டும் போடப்பட்டன. ரசிகர்களும் சலிக்காமல் கண்டு களித்தனர் என்றாலும், புதிது புதிதாக கொடுக்க வேண்டியது ஒரு கலைஞனின் கடமை என்பதால், ரத்தக்கண்ணீர் நாடகம் உருவானது. திருவாரூர் தங்கராசுவின் வசனங்கள், நாடகத்துக்கு வலு சேர்த்தன.
கடந்த, 1949ல் தமிழர் திருநாளில் நாடகத்தை அரங்கேற்றினார் ராதா. வெளிநாட்டிலிருந்து திரும்பும் செல்வச் சீமான் மோகன், தன் ஆணவத்தாலும், பெண்ணாசையாலும் அழிந்து போவது தான் கதை. மோகன் கதாப்பாத்திரத்தில் குஷ்டரோகியாக நடித்திருப்பார் ராதா. ஆரம்பத்தில், நாடகம் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கவில்லை.
குஷ்டரோகி வேடத்தில் நடித்தால் குஷ்டரோகம் வந்துவிடுமோ என பயந்த ராதாவின் குடும்பத்தினர், 'குஷ்டரோகி வேடமெல்லாம் வேண்டாம்...' என்றனர்.
தன் நடிப்பில் வித்யாசத்தை காட்டினால் தான், இக்கதை மக்களிடம் எடுபடும் என்று நினைத்த ராதா, இதற்காக பல நாட்கள் சிந்தித்தார். ஆரம்பத்தில் வரும் மோகனின் தோற்றம், எவ்வளவு அழகாக, டாம்பீகமாக இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக குஷ்டரோகியின் தோற்றம் குரூரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக ஒப்பனையில் சில மாற்றங்களை செய்து, நடிப்பில் சில புதிய உத்திகளை யோசித்து வைத்திருந்தார்.
ரத்தக்கண்ணீர் நாடகம் அரங்கேறிய போது ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. குஷ்டரோகி மோகனை காணவே, ஏராளமான பெண்கள் வரத் துவங்கினர். ஆண்கள் பலர், பயந்து, நாடகம் பார்க்க வரவில்லை என்பது வேடிக்கை.
ஒருநாள் பாகவதர், ரத்தக்கண்ணீர் நாடகத்துக்கு தலைமை தாங்கினார். நாடகத்தை வெகுவாக ரசித்துப் பாராட்டிய அவர், மேடையில் ராதாவை தொட்டுப் பேச பயந்தார். எல்லாம் குஷ்ட ரோகத்தின் மீதிருந்த பயம். பெண்களுடன் முறைகேடான உறவு வைத்தால், குஷ்டம் வந்து விடும் என்ற கருத்து, அக்காலத்தில் எல்லார் மனதிலும் ஆழமாக விழுந்தது. அது உண்மையில்லை என்றாலும், அதன் பாதிப்பு, பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
கூடவே, பகுத்தறிவுடன் கூறிய நகைச்சுவை காட்சிகளை, மக்கள் பெரிதும் ரசித்தனர். போகும் ஊர்களிலெல்லாம் கூட்டம் குறையவே இல்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள நடிகர்களும் தங்கள் மாநிலங்களில், ரத்தக்கண்ணீர் நாடகத்தை போட்டனர். ஆனால், அவர்கள் யாருக்கும் குஷ்டரோகியாக நடிக்கும் தைரியம் வரவில்லை.
ரத்தக்கண்ணீர் நாடகம் துவங்குவதற்கு முன், அன்றைய செய்தித்தாளை படிக்கச் சொல்லி கேட்பார் ராதா. பின், 'மேக்-அப்' அறைக்கு சென்று, 'மேக்-அப்' போட்டு முடித்தவுடன், உட்காராமல் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பார். அப்போது, அவருக்குள், புதிய வசனம் ஒன்று உருவாகியிருக்கும்.
அதற்கு, 'நியூஸ் பேப்பர் காட்சி' என்று பெயர். காந்தா வீட்டு வேலைக்காரன், மோகனிடம் நியூஸ் பேப்பரை கொடுப்பான். அதிலுள்ள செய்தியை படித்து கருத்து சொல்வான் மோகன். அது, அன்றைய செய்தியாக இருக்கும். அதற்கு ராதா அடிக்கும் கமென்ட், சம்பந்தப்பட்டவர்கள் நாக்கை பிடுங்கிக் கொள்வது போல இருக்கும். இந்த, 'நியூஸ் பேப்பர் சீனை' காண்பதற்காகவே, தினமும், நாடகத்துக்கு வந்த ரசிகர்களும் உண்டு.
— தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


தன் நடிப்பு பற்றி ராதா கூறியது: சினிமா உலகம், முன்பு இயக்குனர் கையில் இருந்தது. இப்போது, கதாநாயகன் கையில் உள்ளது. கதை, பாட்டு மற்றும் வசனம் எழுதுகிறவன் எல்லாருமே கதாநாயகனிடம் அடைக்கலம்.
கதாநாயகன் தன்னைப் பற்றி தானே சொல்கிறான்; கதை எழுதுகிறவனும், பாட்டு எழுதுகிறவனும், அவனையே புகழ்ந்து எழுதுகின்றனர். திருட்டுத்தனம் செய்வதற்கு தமிழ் தான் இடம் கொடுக்குமே! நல்ல டயலாக் எல்லாம் கதாநாயகன் பேசுகிற மாதிரியும், மற்றவர்கள் பேசுகிற, 'டயலாக்' டல்லாக இருக்கணும் என்கிறான்.
இதனால் தான், என் வசனத்தை என் பாணியிலேயே பேசறேன்; அது, 'சக்ஸஸ்' ஆகி விட்டது.

- முகில்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X