ஆர்.ரஞ்சன், வல்லம்: நடிகைகளின் தொப்புளை இன்னும் எவ்வளவு காலம் காட்டுவர்?
உங்களது ஆதங்கம் புரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட பாகத்தைத் தாண்டியும் படம் எடுக்க சினிமாக்காரர்களுக்கு ஆசைதான். ஆனால், சென்சார் என்ற, 'ஸ்பீடு பிரேக்கர்' உள்ளதே... அதனால், அத்துடன் நிறுத்திக் கொள்கின்றனர்.
வி.பாலகணபதி, புதுப்பேட்டை: பால்ய திருமணங்கள் நம் நாட்டில் இன்னும் நடக்கிறதா?
வட மாநிலங்கள் பலவற்றிலும் இக்கொடுமை இன்றும் நடந்து வருகிறது. 10ல் ஒரு பெண்ணுக்கு, அவள், 13 வயதை அடையுமுன்னே திருமணம் செய்து வைத்து விடுவதாக, 'பாப்புலேஷன் கவுன்சில்' கூறுகிறது. இதுவே, 15 வயதுக்கு முன், நாலில் ஒரு சிறுமிக்கு நடப்பதாகவும் கூறுகிறது.
ம.விஜயன், செய்யார்: நம்மவர்கள் இன்று மகிழ்ச்சியை இழந்து, துன்பத்துடன் அல்லல்படுவது ஏன்?
போலி கவுரவம் - ஆரம்பர வாழ்க்கை. இவ்விரண்டால் மகிழ்ச்சியைத் தொலைத்து, தலை குனிந்து நிற்கிறான். எளிய பழக்கங்களும், உணவும், கடன் வாங்காத குணமும் மட்டுமே மகிழ்ச்சியை கொண்டு வரும்!
பொ.ஜீவானந்தன், பெரியகுறிச்சி: தப்பே செய்யாத மனிதர் உண்டா?
இல்லை. ஆனால், 'போகும் பாதை தப்பு' என்று தனக்காவது தெரிய வேண்டும் அல்லது பிறர் சொல்வதையாவது கேட்க வேண்டும். தப்பையே வாழ்க்கையாய் கொண்டுள்ளனரே சிலர், இப்படிப்பட்டவர்கள் கடைசி மூச்சுவரை திருந்த மாட்டார்கள்.
கே.எஸ்.வேணுகோபாலன், துடியலூர்: மெகா தொடர்கள் என்றாலே அழுகைதான் என்ற நிலை எப்போது மாறும்?
மாறவே மாறாது. நம் தாய் குலங்களுக்கு இளகிய மனது; சோகங்களையும், இன்னல்களையும், துன்புறுத்தல்களையும் தாள முடியாத பூஞ்சைகள். இருப்பினும், அவற்றை பார்க்க வேண்டும்; மனம் விட்டு அழ வேண்டும் என்ற அபிலாஷை கொண்டவர்கள். எனவே, இவர்கள் மனம் மாறாத வரை, அழுகைத் தொடர்கள் வந்து கொண்டே தான் இருக்கும்!
தி.சிவசங்கரன், விளாமரத்துப்பட்டி: உலகில், பிறப்பு விகிதம் குறைந்து வருவதாகப் படித்தேன். அது பற்றி...
ஐரோப்பிய நாடுகளில் பிறப்பு விகிதம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை; திருமணம் செய்யாமல்,'சேர்ந்து' வாழ்பவர்கள், 'தவிர்த்து' விடுகின்றனர். 2050ல் மனித சரித்திரத்தில், குழந்தைகளை விட, முதியோர் அதிகம் இருப்பர் என, ஐ.நா.,வின் மக்கள் தொகை தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது!
எம்.முகம்மது இஸ்மாயில், கண்டமனூர்: உங்களுக்கு நெருங்கிய நண்பராக இருக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?
நான் அழைக்கும் போது மட்டுமே வந்து பார்ப்பவராக இருக்க வேண்டும்; பிளேடு போடுபவராக, அடுத்தவரை பேச விடாது அல்லது குறுக்கே பேசுபவராகவோ, கடன் கேட்கவோ, டுபாக்கூர் அடிக்கவோ கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக என் நேரத்தை, தின்பவராக இருக்கக் கூடாது!
எஸ்.மனோகரி, ராமநாதபுரம்: ஒருவனின் கொடிய விரோதி யாராக இருக்கும்?
வெளி ஆட்கள் யாருமே இல்லை; அவனிடம் இருக்கும் அறியாமையே கொடிய விரோதி. இது, அவனை பல வழிகளிலும் தொல்லைக்குள்ளாக்கி விடும்!
எல்.பாக்கியலட்சுமி, கவுண்டம்பாளையம்: உலகமெங்கும் குடியேறியுள்ள மலையாளிகள் போல, வேறு மொழி பேசும் இந்தியர் எவர் வெளிநாடுகளில் அதிகம் குடியேறியுள்ளனர்?
பஞ்சாபிகள். ஆங்கிலம் பேசும் நாடுகளில் மட்டுமல்லாமல், மொழியே தெரியாத இத்தாலியில் கூட, 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குடியேறி, அம்மொழியைக் கற்று, அங்கே வாழ்கின்றனரே!