சூட்கேசிலிருந்த மொத்த துணிகளையும் எடுத்து வெளியே கொட்டித் தேடினேன். குளியல் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர்ன்னு எல்லாமே இருக்கு! ஷேவிங் ரேசரை மட்டும் காணோம். அப்பறம் தான் எடுத்து வரவில்லை என்பது ஞாபகம் வந்தது.
மனைவி ஜோதி படிச்சுப் படிச்சு சொன்னா... 'கேம்ப்' போறதுன்னா, கொஞ்சம் முன்னாடியே எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கங்க. கடைசி நேரத்துல, ஏதாவது ஒண்ணு மறந்துரும்; அப்புறம், போற எடத்துல சிரமப்படணும்'ன்னு! நான் தான் கேட்கலை. இப்ப, ஷேவிங் ரேசரை மறந்துட்டு வந்து முழிக்கறேன்.
அந்த கிராமத்திலிருக்கும் எங்கள் வங்கியின் கிளைக்கு, ஆடிட் பணி நிமித்தமாய், 'கேம்ப்' வந்த நான், வங்கி அலுவலகத்தின் மேல் மாடியிலிருக்கும் தங்கும் அறையில் தங்கினேன்.
'இப்ப என்ன செய்யறது... சரி... நாலஞ்சு நாள்தானே அப்படியே ஷேவிங் செய்யாமலேயே இருந்திட வேண்டியது தான்...' என, முடிவு செய்தபடி தாடையை தடவினேன். ரோம முட்கள், என் உள்ளங்கையைப் பதம் பார்த்தது.
'ம்ஹூம்... இப்பவே ஏகமாய் வளந்து கெடக்கு; இன்னும் நாலஞ்சு நாள்ன்னா ரொம்ப அதிகமாயிடும். ஒரு ஆடிட் ஆபீசர் தாடியோட இருந்தா அவ்வளவு நல்லாயிருக்காது. இங்கேயே ஏதாவதொரு சலூன் கடைல போய் ஷேவிங் செய்துக்க வேண்டியது தான்...' என்று நினைத்தபடியே, சட்டையை மாட்டி அறையைப் பூட்டி, படியிறங்கினேன்.
பொதுவாகவே, எனக்கு சிட்டியில் உள்ள சலூன்களில் சவரம் செய்வது என்றால் அலர்ஜி. அதற்கு, பல காரணங்கள் உண்டு. பீடி மற்றும் சிகரெட் நாற்றம், டெட்டால் வாடை, அங்கு கூடியிருக்கும் வேலை வெட்டியில்லாதவர்களின் அரசியல் மற்றும் சினிமா சம்பந்தமான அநாகரிக வாதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, அரைகுறை ஆடை அழகிகளின் காலண்டர்கள். இதுபோன்ற ஒவ்வாத சமாசாரங்களிலிருந்து தப்பிக்கவே, 'ஹேர்கட்' செய்வதற்கு மால்களில் உள்ள உயர்ரக ஆண்கள் அழகு நிலையத்திற்கு செல்வேன்.
'சிட்டியில இருக்கிற சலூன்களே சகிக்காது; இதுல, இந்தக் கிராமத்து சலூன் எப்படியிருக்குமோ...' என எண்ணியபடி, சலூன் கடையைத் தேடி மூன்று தெருக்கள் சுற்றி விட்டேன். ஒரு கடையும் இல்ல.
'என்ன இது... இந்தக் கிராமத்துல யாருமே கட்டிங், ஷேவிங் செய்யறதில்லயா... பேன்சி ஸ்டோர் இருந்தாலாவது, ஒரு ரேசர் வாங்கலாம். அதுவும் கூட இல்ல...' என்று நினைத்தபடியே நடந்தேன். எதிரே வந்த கோவணக்காரரிடம், ''அய்யா... இங்க சலூன் கடை எங்க இருக்கு?'' என, விசாரித்தேன்.
நான் கேட்டது அவருக்குப் புரியவில்லையோ என்னவோ, சில நிமிடங்கள் யோசித்து, பின், ''பலூன் விக்கற கடையையா கேட்கறீங்க?'' என்று கேட்டார்.
''சலூன் கடை... ஷேவிங் செய்யணும்,'' என்று, என் தாடையைத் தேய்த்துக் காட்டினேன்.
''ஓ... சவரக் கடையா... இப்படியே நேராப் போயி, அப்படியே பீச்சாங்கைப் பக்கம் திரும்பினா, மூணாவதா இருக்கும் ராசய்யன் கடை,'' என்றார் திரும்பி நடந்தவாறே!
அந்த கோவணக்காரரின் கறுத்த மேனியில், துளிர்த்த வியர்வைத் துளிகள் கொடுத்த நறுமணம், என் நாசியை உறுத்த, அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
எப்படியோ ஒரு வழியாய், ராசய்யன் சலூன் கடையை அடைந்ததும், பலத்த ஆச்சரியத்துக்குள்ளானேன்.
சலூன் கடை வாசலில் ஒரு கரும்பலகையில், இன்றைய செய்திகள் என்று குறிப்பிடப்பட்டு, அதன் கீழே அன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நாட்டு நடப்பு குறித்த சிறப்புத் தகவல்கள் எழுதப்பட்டிருந்தன.
ஆடம்பர அலங்காரங்கள் இல்லாத பழைய ஓட்டுக் கட்டடத்தில், பத்துக்குப் பத்து என்ற அளவில் அமைந்திருந்தது அந்த சலூன் கடை. உள்ளே மிதமான ஊதுபத்தி மணமும், லேசான சந்தன வாசனையும் ஒரு பூஜை அறைக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தின.
தயக்கமாய் உள்ளே நுழைந்த என்னை, ''வாங்க சார்... வணக்கம்,'' என்று இயல்பான புன்னகையுடன் வரவேற்ற அந்த இளைஞன், கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்து, சந்தனப் பொட்டுடன், 'பளிச்'சென்றிருந்தான். நாகரிகம் அவனை எள்ளளவும் சிதைக்கவில்லை. அநேகமாய், அவன் தான் ராசய்யனாய் இருக்கக்கூடும் என்று யூகித்த நான், ''தம்பி... உன் பேரு தானே ராசய்யன்?'' என்று கேட்டேன்.
மெலிதாய் முறுவலித்தவன், ''இல்லே சார்... என் பேரு குமரன்,'' எனச் சொல்லியவாறே இருக்கையைத் தட்டி, ''உட்காருங்க சார்,'' என்றான்.
உட்கார்ந்தபடியே, ''அப்ப ராசய்யன்ங்கறது...'' என்றேன்.
''என் உயிர் நண்பன்; கார்கில் சண்டையில உயிரிழந்த நம் ராணுவ வீரர்களில் ஒருத்தன் தான் ராசய்யன். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன்; நாட்டுக்காக தன் உயிரைத் தந்து, தான் பிறந்து, வளர்ந்த இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவன். அவனோட ஞாபகமா தான் இக்கடைக்கு, அவன் பேரை வெச்சிருக்கேன்.
''நியாயப்படி பாத்தா, அவன் வீடு இருக்கற தெருவுக்கே அவன் பேரை வைக்கணும்; அது என்னால முடியல. அதான், என் கடைக்கு வெச்சிட்டேன்,'' என்றவன், ''சாரு வெளியூரா?'' மிக நேர்த்தியாக முகத்திற்கு ஷேவிங் கிரீம் தடவியபடியே கேட்டான்.
''ஆமாம்... இங்க, 'பேங்க் ஆடிட்'டுக்கு வந்திருக்கேன்,'' என்றேன்.
''அதனால தான், உங்களுக்கு ராசய்யனைப் பற்றித் தெரியல. இந்தக் கிராமத்துக்காரங்க எல்லாருக்கும் தெரியும்,'' என்றான்.
''ஓ... அப்படியா,'' என்றவாறே, என் பார்வையை சுவர்களின் மீது திருப்பினேன்.
புராண, இதிகாசங்களில் வரும் நன்னெறிகளை போதிக்கக்கூடிய காட்சிகள் ஓவியங்களாய் அங்கு தீட்டப்பட்டிருக்க, 'சலூனில் இப்படிப்பட்ட ஓவியங்களா...' என நினைத்து, வியப்பில் ஆழ்ந்தேன்.
மேலும், அங்கிருந்த சிறிய மேஜை மேல், 'சிகரங்களைத் தொடுவோம், வெற்றியின் வாசல் முன்னேற்றச் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களே ஏணிப்படிகள்' என, தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய, சுய முன்னேற்றக் கருத்துகளை கூறும் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும், என் கண்களையே நம்ப முடியவில்லை.
அங்கிருந்து பார்வையை திருப்பிய நான், 'இங்கே புகைபிடிக்கக் கூடாது!' என்று எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து, மேலும் ஆச்சரியத்திற்குள்ளானேன்.
''ஓ... இங்க புகை பிடிக்கவும் தடையா,'' என புன்சிரிப்புடன் கேட்டேன்.
''ஆமாம் சார்... புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவங்களும், குடிப்பழக்கம் இருக்குறவங்களும் இந்த கடைக்கு வர அனுமதி இல்ல. அது மட்டுமல்ல, இங்க அவங்களுக்கு கட்டிங், ஷேவிங் எதுவுமே செய்ய மாட்டேன்,'' என்றான்.
''இதென்னப்பா ரொம்ப அநியாயமா இருக்கு... இப்படியொரு கண்டிஷனப் போட்டா, ஆட்கள் வர்றது குறைஞ்சு, அதனால, உனக்கு வருமானம் குறையுமே...''
''பரவாயில்ல சார்... வருமானம் தானே குறையும்; தன்மானம் குறையாதில்ல...''
எல்லா விஷயங்களிலுமே, ரொம்ப வித்தியாசமாக இருந்த அந்த இளைஞனிடம், ''அது சரி... கடைக்குள்ளார ஸ்க்ரீன் போட்டு மறைச்சு வெச்சிருக்கியே, அது என்ன உன் ரெஸ்ட் ரூமா?'' என்று கேட்டேன்.
''இல்ல சார்... கிளாஸ் ரூம்!''
''கிளாஸ் ரூமா! ஓ... இங்க டியூஷன் வேற நடக்குதா... மாஸ்டர் வெளியிலிருந்து வருவாரா?'' எனக் கேட்டேன்.
''எதுக்கு சார் வெளியில இருந்து வரணும்... அதான் நான் இருக்கேன்ல்ல...'' என்று அவன் தன் பணியை முடித்து, என் முகத்தில் தண்ணீரைப் பீச்சியடித்து, அதை துடைத்தான்.
''நீயே கிளாஸ் எடுக்கறேன்னா... நீ படிச்சவனா...''
''ம்...'' என்றான், ஒற்றை வார்த்தையில்.
''எதுவரைக்கும் படிச்சிருக்கே?'' என்று கேட்டேன். என் கணிப்பு, பத்தாவது வரை படித்திருப்பான் என்று சொல்லியது.
''எம்.ஏ., இங்கிலீஷ் லிட்ரேச்சர்; யுனிவர்சிடி பர்ஸ்ட்!''
ஆடிப் போனேன். ''தம்பி... நெசமாவா சொல்றே... எம்.ஏ., இங்கிலீஷ் லிட்ரேச்சர், யுனிவர்சிடி ரேங்க் ஹோல்டர்... இப்படி, 'பார்பர் ஷாப்' வெச்சு நடத்திட்டு இருக்கியே... ஏம்பா?'' என்னால் நம்பவே முடியவில்லை.
''டவுன் பக்கம் போனா என் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும்ன்னு எனக்குத் தெரியும். ரெண்டு, மூணு கல்லூரிகளிலிருந்து, விரிவுரையாளர் வேலை வந்தும், நான் தான் போகல,'' என்றான்.
''ஏன்?''
''ஏன்னா, அது என் குறிக்கோள் இல்ல!''
''பிறகு?''
''எங்க ஊர்லயிருந்து மேல் படிப்புக்காக, டவுன் பக்கம் போன பல பிள்ளைக, அங்க இருக்கற ஆங்கில கல்வி முறைய எதிர்கொள்ள முடியாம, படிக்காம ஓடிவந்துடறாங்க. ஏன்னா, இங்க இருக்கற பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல, ஒரே ஒரு வாத்தியார் தான் இருக்காரு. அவரு தான் எல்லா பாடங்களையும் எடுப்பாரு. அதனால, அவர்கிட்ட படிச்சிட்டுப் போற பிள்ளைகளோட கல்வித் தரமும், ஆங்கில வெளிப்பாடும் ரொம்பச் சாதாரணமாக இருக்கும்.
''உண்மையைச் சொல்லணும்ன்னா, இங்க இருக்கற வாத்தியாருக்கே ஆங்கில இலக்கணத்துல ஏகப்பட்ட தகராறு. அப்புறம், அவருகிட்ட இங்கிலீஷ் படிச்சா அந்த மாணவர்கள் எப்படியிருப்பாங்க... அதனால தான், அவங்க நகரத்துல இருக்குற ஆங்கில வெளிப்பாட்டை பாத்து பயந்து, படிக்காம திரும்பி வந்திடறாங்க.
''வலியை உணர்ந்தவனுக்குத் தான், அதை நீக்கும் வழியை அறிய முடியும்ன்னு சொல்வாங்க. நானும் ஒரு காலத்துல அந்தக் கஷ்டத்தை அனுபவிச்சவன். அதனால தான், 'நாம் ஏன் இதை மாற்றக் கூடாது'ன்னு நெனைச்சேன். உடனே என் கடையிலேயே, ஒரு ஆங்கில பயிற்சி வகுப்பைத் துவக்கி, பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை ஆங்கில இலக்கணத்தை, என்னால முடிஞ்ச அளவுக்கு இலவசமா சொல்லித் தரேன்.
''எதிர்காலத்துல என் கிராமத்தச் சேர்ந்த இளைஞர்கள் நாட்டின் பல்வேறு உயர்ந்த பதவிகள்ல அமரணுங்கிறது தான் என்னோட குறிக்கோள்,'' என்று கூறியபடியே, எனக்கு சவரம் செய்ய உபயோகித்த உபகரணங்கள் ஒவ்வொன்றையும் நிதானமாகக் கழுவி, அந்தந்த இடத்திலேயே வைத்து, தொடர்ந்தான்...'
''நான் படிச்ச இங்கிலீஷ் லிட்ரேச்சர் எனக்கு சம்பாதிச்சுக் குடுக்க வேணாம். அதுக்கு இதோ இந்த தொழில் இருக்கு. என் படிப்பு, இந்த கிராமத்துப் பிள்ளைகளுக்கு பயன்பட்டு, அது, அவங்க எதிர்காலத்துக்கு உதவினா போதும்,'' என்றான்.
மிகப் பெரிய விஷயத்தை வெகு சாதாரணமாக சொல்லும் அவனை பார்க்கும்போது, வியப்பாக இருந்தது.
நகரத்தில் அவன் வயதொத்த பல இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட, டீ-சர்ட் போட்டு, டூவீலர்களில் தேவையில்லாமல் பறப்பதும், மொபைலில் அவசியமே இல்லாமல் மணிக்கணக்கில் பேசித் திரிவதும், மால்களில் உருப்படியே இல்லாதவற்றை அதிக விலைக்கு வாங்கி மகிழ்வதும், மினரல் வாட்டர், கிரடிட் கார்டு, லாப்டாப், ஆங்கிலப் படங்கள், கேர்ள் பிரெண்ட். என்று வாழ்க்கையை அனுபவிப்பதாய் நினைத்து, அழிவை நோக்கிச் செல்லுவதை பார்த்து நொந்திருக்கின்றேன்.
ஆனால், அதே காலக்கட்டத்தில், இங்கே ஒரு இளைஞன் இப்படி வாழ்வது என்னை மிகவும் பெருமிதப்பட வைத்தது. 'இவன் தான் விவேகானந்தர் கேட்ட இளைஞனோ...' என்று நினைத்தேன்.
அப்போது, 'நீ கூட பெரிய படிப்பு படித்து, ஒரு வங்கியில் பெரிய பதவியிலிருக்கிறாய்... ஒரு நாளாவது, ஒரு நிமிடமாவது பொது நல எண்ணத்தோடு எதையாவது சிந்தித்திருக்கிறாயா...' என்று, என் மனம் என்னைக் கேட்டது.
நான் தலை குனிந்தேன்.
''சார்... உடன்பாடு இல்லாத உத்தியோகம், பயன்பாடு இல்லாத ஒரு சமன்பாடு. இது, நான் உடன்பட்டு ஏத்துக்கிட்ட உத்தியோகம். அதனால, மன நிறைவோட, சந்தோஷமா இருக்கேன்,'' என குமரன் இயல்பாய் சொல்ல, அவனிடம் விடை பெற்றுச் செல்லும்போது, 'இவன் எல்லாருடைய முகத்தை மட்டும் அல்ல; மனத்தையும் மழித்துப் பளபளப்பாக்கும் மாமேதை...' என்று எனக்குள் சொல்லி, வணங்கி விடை பெற்றேன்.
எம்.டி. கரண்