வீடு புகுந்து குட்டிக் கலகம் செய்கிறவர்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
வீடு புகுந்து குட்டிக் கலகம் செய்கிறவர்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

நாம் நினைத்து இருக்க மாட்டோம், நம்மால் ஒரு குடும்பத்திற்குள் பெரிய குழப்பமோ அல்லது கிட்டத்தட்ட ஓர் அடிதடியோ நிகழப் போகிறது என்று!
சும்மா இருக்க மாட்டாமல், சாதாரணமாக ஒருவர் கூறிய தகவல்களை, 'எனக்கும் தெரியுமாக்கும்...' எனப் பரிமாற, அது, சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர் குடும்பத்திற்குள் பிரளயத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு.
பழைய நண்பர்கள் சந்திப்பில், உடல்நலக் குறைவான ஒருவர் தவிர்க்கப்பட்டார். இதை, இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர், அவரிடம் போட்டுக் கொடுக்க, 'என்னை ஏன் தவிர்த்தீர்கள்?' என்று கேட்டு, பெரிய சண்டையாகி விட்டது.

'கொஞ்ச நேரத்துக்குள் வீடு புகுந்து, குட்டிக் கலகம் செய்துட்டாருய்யா... பாவி மனுஷன்...' என்பது, வீட்டிற்கு வந்த விருந்தினர் ஒருவர், எடுக்கக் கூடாத கெட்டப் பெயர்.
பயணக் கட்டுரை எழுதுகிறேன் பேர்வழி என்று ஓர் எழுத்தாளர், ஒரு வெளிநாட்டுத் தமிழர் வாழ்வில், பெரிய பூகம்பத்தையே உண்டாக்கி விட்டார்.
யார் வீட்டில் தங்கினாரோ, அவர் வீட்டில் ஒரு பெண்ணும் இருக்க, இதை, எழுத்தாளர் பத்திரிகையில் எழுதிவிட, குடும்பத்தில் சண்டை.
வந்த இடத்தில், தங்கிய வீட்டினரின் உபசரிப்பில் குறை கண்டு, அதை குடும்பத் தலைவரிடம் போட்டுக் கொடுக்க, அங்கே, ஒரு குட்டிக் கலகம் அரங்கேறி முடிந்தது.
நண்பரின் மனைவி, தன் கணவருக்கு மிக வேண்டியவர் என்கிற வகையில், சில மனக் குறைகளை வெளியிட, 'ஏண்டா இப்படிச் செய்றே... உம் பொண்டாட்டி ரொம்ப வருத்தப்பட்டு பேசுறாடா..' என்று, ஒன்றிற்கு இரண்டாக உளறி வைக்க, கணவன் - மனைவிக்குள் பெரிய சண்டை.
நண்பரின் மனைவி, 'ஆத்த மாட்டாம (ஆற்றிக் கொள்ள இயலாமல்) உங்ககிட்ட மனசில இருக்கிறதைப் சொல்ல, நீங்க ஏண்ணா அதை அப்படியே அவர்கிட்ட சொன்னீங்க... நான் சொல்லாததையும் சேர்த்து சொல்லியிருக்கீங்களே அண்ணா... இப்போ ரொம்பப் பிரச்னையாயிடுச்சு...' என்று அவர் புலம்ப, 'இது உங்களுக்குத் தேவையா...' என, இந்தப் பக்கத்து மனைவி கத்த, ஒரே களேபரம்.
எவரிடமும் பேசாத அந்தப் பெண்மணி, தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மூலம், தன்னை பெரிதும் மதிக்கிறார் என்று எண்ணி, தன் முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டதன் விளைவு, கணவன் - மனைவிக்குள் சண்டை!
'உங்க பொண்ணை ஈ.சி.ஆரில் (கிழக்குக் கடற்கரைச் சாலையில்) பைக்கில் பாத்தேன்...' என்று ஒருவர், அவளது தாயிடம் போட்டுக் கொடுக்க, இது, பெரிய விவகாரமாகி விட்டது.
'காலேஜ்ல பிக்னிக் போனோம்; பஸ்சை தவற விட்டுட்டேன். என் கூட படிக்கிறவன் தான், 'வா வீட்டுல கொண்டு வந்து விடுறேன்'னான். இதில என்ன அங்கிள் தப்பு... என்கிட்ட விளக்கம் கேட்காம, நேரே அம்மா கிட்ட போய் சொல்லிட்டீங்க. இப்ப ரொம்ப பிரச்னையாகி, வீட்டையே ஜெயில் மாதிரி ஆக்கிட்டாங்க...' என்று அவள் கண் கலங்க, இந்தக் கலகக்காரர் ஆடிப் போனார்.
சில நேரங்களில், நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள். எந்த உள்நோக்கமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள, அதன் பின் விளைவாக, ஒரு தாக்கம் விளையப் போவதை!
இன்று, வாயைத் திறந்தாலே வம்பு என்று எண்ணும் அளவுக்கு பல விஷயங்கள் ஆகிவிட்டன. தண்ணீர் வேண்டும் என்று கிணறு வெட்டினால், பல நேரங்களில் பூதம் கிளம்புகிறது. எதையும் விளைவுகளுடன் சேர்த்துச் சிந்திக்க வேண்டும்.
முடியவில்லையா... மவுனமே நல்லது!

லேனா தமிழ்வாணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X