அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

அன்புள்ள சகோதரி வணக்கம் —
மிகுந்த மன வருத்தத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
என் கணவரின் உடன் பிறந்தோர் நான்கு பேர். இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்; எல்லாரும் நல்ல நிலையில், வசதி வாய்ப்போடு உள்ளனர்.
மாமனார், பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மாமியார் இறந்து, ஆறு ஆண்டுகள் ஆகிறது. மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாகி, பல துயரங்களை அனுபவித்து இறந்தார் என் மாமியார். அவர் நல்ல மனதுக்கு அப்படி இறந்திருக்கக் கூடாது. மிக நல்லவர்; தெய்வ பக்தி மிக்கவரும் கூட!
அவருக்கு சுய நினைவு இல்லாத நிலையில் தான் வீடு பாகப்பிரிவினை நடந்தது. அவரது மூத்த மகன், இரண்டு பெண்களுக்கு இளையவர். அவர் ஆட்சி தான் வீட்டில். நான் திருமணமாகி வந்த போதிலிருந்து பார்த்திருக்கிறேன்... இவரது கோபத்துக்கு முன், துர்வாசர் தோற்று விடுவார். இவர் படுத்திய பாடு தாங்க முடியாமல், மாமியார் இருக்கும்போதே, ஒரே வீட்டில் அனைவரும் தனித் தனியாக பிரிந்து இருந்தோம்.
பாகப்பிரிவினையின் போது, தான் குடும்பத்துக்கு அதிகமாக கஷ்டப் பட்டுள்ளதாக சொல்லி, அவரே அதிக இடம் எடுத்துக் கொண்டார். அதுவும், பத்தாது என்று, மொட்டை மாடியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அவரின் இரு மகள்களும் காதலித்து, வீட்டை விட்டு ஓடி விட்டனர். அது பற்றி, நான் என் கணவரிடம் சொல்ல, அவர், அவர்களை கண்டித்து வைக்கச் சொல்ல, அது பெரும் விரோதமாக மாறி, அன்று முதல் நாங்கள் அவருக்கு விரோதிகளாகி போனோம்.
தற்போது, அவர் மகள்கள் வாழாமல், வாழாவெட்டிகளாக உள்ளனர். ஆனாலும், அவர் அடங்கவில்லை. அந்த விரோதத்தால் தண்ணீர் மோட்டார் போட்டால், வால்வை திருப்பி தண்ணீர் வராதபடி செய்து விடுவார். தினமும் காலை எழுந்தால், 'கடவுளே... இன்று தண்ணீர் கிடைக்குமா...' என்று காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. துணி காய போட்டால் அவற்றை கிழித்து, சைக்கோ போல நடந்து கொள்கிறார்.
அவரிடம் சண்டை போடவோ, நல்ல புத்தி சொல்லவோ யாரும் விரும்புவதில்லை; என் கணவரோ, 'அவன் செய்தா அவன் அனுபவிக்கட்டும்...' என்று கடவுளிடம், பாரத்தை போட்டு விடுகிறார்.
என் மகளுக்கு திருமணம் முடித்ததால், நாங்கள் பணக் கஷ்டத்தில் உள்ளோம். போர் போடணும்ன்னா, செலவு ஆகுமே என்று பயந்து, கார்ப்பரேஷன் பம்பில் தண்ணீர் அடித்து பயன்படுத்துகிறோம்.
என் மகள் திருமணம் முடிந்து, ஒரு ஆண்டு கழிந்த பின், குழந்தை பேறு முடித்து அவர்கள் வீட்டுக்கு, அனுப்பியதுதான். 'ஒரு வாரமாவது நம் வீட்டில் தங்கிப் போ...' என்றால், 'தண்ணீர் இல்லாத வீட்டுக்கு எப்படி வருவது...' என்கிறாள்.
என் மகன் பிளஸ்1 படிக்கிறான். அவன், மிகுந்த மனவருத்தம் அடைந்து, 'இப்படிப்பட்ட சொந்தங்களுடன் எப்படி வாழ்வது...' என்கிறான்.
இப்பிரச்னையால், சில சமயம், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும், அவனை கொன்று விடலாமா என்றும் அடிக்கடி தோணுகிறது. நீங்க ஒரு சகோதரியாக நல்ல வழி காட்டுங்கள். ப்ளீஸ்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


அன்புள்ள சகோதரிக்கு —
மாமியாரின் மரணத்துக்கு அதிக வருத்தப்படும் மருமகளாய் இருக்கிறாய். அது, மனதிற்கு இதமாய் உள்ளது.
சகோதரி... அதிக உறுப்பினர்களை கொண்ட கூட்டு குடும்பத்தில், இம்மாதிரி பிரச்னைகள் நிகழ்வது சகஜம். கூட்டுக் குடும்பம் என்றாலே, பல நல்லது, கெட்டது இருக்கும். ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்று போலவா இருக்கு... அப்படியே இருந்தாலும் ரசிக்குமா?
ஐவரில் ஒருவர், அடுத்த நால்வரை, 'டாமினேட்' செய்ய முயற்சிப்பது இயல்பாய் நடப்பதே! பணத்தாசை, இடத்தாசை தற்காலத்தில் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது. உன் கொழுந்தனார் பாகப்பிரிவினையில் அடித்து பிடித்து, தனக்கு அதிக இடத்தை பெற்று விட்டார் என்பதும், மொட்டை மாடியில் வீடு கட்டி, வாடகைக்கு விட்டுள்ளார் என்பதும் உன் ஆவலாதி.
அவரது இரு மகள்கள் காதலித்து, வீட்டை விட்டு ஓடியதும், ஓடியவர்கள், வாழா வெட்டிகளாய் வீடு திரும்பியதும், உனக்கு ரகசிய சந்தோஷம். 'வீட்டை விட்டு ஓடி, காதல் திருமணம் செய்து கொள்...' என்று, எந்த தகப்பனாவது தன் மகளிடம் கூறுவானா? அத்தகப்பனுக்கு நீயும், உன் கணவனும் அறிவுரை கூற புகுந்தது அபத்தம்.
குடும்பத்திற்குள் பற்பல பிரச்னைகள் எழும். உன் பிரச்னை அதில், தனி விதம். மோட்டார் வால்வை திருகி, உனக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுகிறார் உன் கொழுந்தனார். தண்ணீர் பிரச்னைக்கு பயந்து, குழந்தை பெற்றுக் கொண்ட உன் மகள், தாய் வீடு வர மறுக்கிறாள் என்பது, மிகப் பெரிய அவலம்.
வாழ்க்கையில், நூற்றுக்கணக்கான பிரச்னைகளை போராடி ஜெயிப்பவர் பலர். நீயோ ஒற்றை பிரச்னைக்காக தற்கொலை செய்ய துணிகிறாய். கோழைத்தனமாக யோசிக்கக் கூடாது. இப்பிரச்னையை வென்று, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போக முயற்சிக்க வேண்டும். கொழுந்தனாரை கொன்று விட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா? பரம்பரை பகையாக மாறும். நீயும், உன் கணவனும் பல ஆண்டுகள் ஜெயிலில் களி தின்ன வேண்டும்; உன் குடும்பத்துக்கு அவப்பெயர் வந்து சேரும். இதெல்லாம் தேவையா?
அதற்கு பதில், மாமியாரின் படத்துக்கு முன் ஐந்து சகோதர, சகோதரிகள் குடும்பமும் அமர்ந்து பேசி, மனக்குறைகளை களைய முயற்சிப்பது உத்தமம். 'தெரிந்தோ, தெரியாமலோ உன் மனதை புண்படுத்தியிருந்தால், மன்னித்து விடு...' என, ஒருவருக்கொருவர் கூறி, சமாதானம் செய்து கொள்ளலாம். தண்ணீரை ஐவரும் சமமாய் பங்கிட்டு கொள்ள இதம், பதமாய் பேசி தீர்க்க வேண்டும்.
வீம்பு, வறட்டு பிடிவாதம், பழி வாங்கும் உணர்ச்சி, மன்னிக்க மறுத்தல் குணங்களை விட்டொழித்தல், கூட்டுக்குடும்ப நலனுக்கு மிகவும் நல்லது. பேச்சு வார்த்தையில், உன் கொழுந்தனார் ஒத்து வராவிட்டால், போலீசில் புகார் செய். போலீசுக்கு போனால், பிரச்னை, சிந்துபாத் கதையாய் நீளும் என கருதினால், அதை செய்ய வேண்டாம்.
எத்தனையோ செலவுகளுக்கு இடையில், இந்த செலவும் செய்வோம் எனக் கருதி, உன் போர்ஷனுக்கு தனியாக போர் போட்டு, மோட்டார் மூலம் தண்ணீர் டாங்குக்கு தண்ணீர் ஏற்று. உன் மகளையும், உன் பேத்தியையும் வரவழைத்து பல மாதம் தங்க வைத்து உபசரி.
'நமக்கு தீங்கிழைத்தவரை தண்டிக்க சிறப்பான வழி மன்னித்தலே' என்பர் சான்றோர். அதனால், தற்கொலை மற்றும் கொலை உணர்ச்சிகளை விட்டொழி.
தனியாக போர் போட மனமில்லா விட்டால், உன் போர்ஷனை வாடகைக்கு விட்டு, தண்ணீர் வசதி உள்ள வீட்டிற்கு வாடகைக்கு குடி போ!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
malar - chennai,இந்தியா
26-ஏப்-201508:34:28 IST Report Abuse
malar பெண்ணே, கவலை ப்படாதே. சகோதரி சகுந்தலா சொல்வதே மிகவும் சரி. கோபத்தில் அல்லது வருத்தத்தில் எதாவது செய்து விட்டு உன் குடும்ப அமைதியை நிரந்தரமாக இழந்து விடாதீர்கள். வீடே இல்லாதவர்கள் நிலைமையை யோசித்து பாருங்கள். மற்ற சகோதர சகோதரிகளிடம் பேசி பாருங்கள். அவர் பெண்கள் வாழாமல் வந்தது பற்றி மகிழ்ச்சி அடையாமல் கடவுள் கொடுத்த தண்டனை என்று எண்ணாமல் அந்த பெண்களும் உங்கள் பெண்கள்தானே , அவர்கள் வாழ் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். . மச்சினருக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கவேண்டும் என்று இறைவனிடம் கெஞ்சி பிரார்த்தனை செய்யுங்கள் . எழுந்தி ருக்கும்போது தண்ணீர் வருமா என்று யோசிக்காமல் ஆண்டவரே இன்று அவர் தண்ணீர் விடும்படியாக அவரோட நீர் பேசும் என்று வேண்டுங்கள் . சமாதான தூதர்களை அனுப்பும் என்று கேளுங்கள். நீங்கள் வேண்டுமானால் நான் சொன்னதை செய்து பாருங்கள் நிச்சயமாக அவர் மனம் மாறும் உங்கள் பிரச்னைகள் தீரும் நானும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன் உங்கள் பெண் கணவர் வீட்டில் சந்தோஷமாக இருப்பதே உங்களுக்கு பெரிய சந்தோசம் தானே :>)
Rate this:
Cancel
Ramesh - Chennai.  ( Posted via: Dinamalar Android App )
26-ஏப்-201506:50:22 IST Report Abuse
Ramesh This is not Andharangam. This is Nondharangam.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X