'ஒட்டக்கூத்தர்' (செண்பகா பதிப்பகம்) நூலிலிருந்து: ஒட்டக்கூத்தர், தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளுக்கு அவரது நூல்களே சான்று. கடைசி காலத்தில் முதுமை காரணமாக, பார்வை மங்கி, உடல் தளர்ந்து போனாலும், வயது முதிர முதிர அவரது அறிவு விசாலமடைந்தது. விபூதி, உத்ராட்சம் அணிந்து, ஐம்புலன்களை அடக்கி தெய்வ சிந்தனையில் ஈடுபட்ட அவர், சைவப் பழம் போல இருந்தார்.
மடம் ஒன்றை ஏற்படுத்தி, அங்கே தனித்து வாழ்ந்தார். சமையல்காரன் ஒருவன் மட்டும் அவருக்கு துணையாக இருந்து, அவரைக் கவனித்து வந்தான். அவருக்கு பார்வை போய் விட்டதால், அவர் கூறும் பாடல்களை, 'கற்றுச் சொல்லி' என்போர் ஏட்டில் எழுதிக் கொள்வர்.
இந்நிலையில், இரண்டாம் ராஜராஜன் பிறந்த நாள் வந்தது. அரண்மனை மற்றும் நாடு முழுவதும் ஒரே கொண்டாட்டம். முதுமை காரணமாக, வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்ட ஒட்டக்கூத்தர், தம் பிறந்தநாளன்று அரண்மனைக்கு வர மாட்டார் என்றே நினைத்திருந்தான் மன்னன் ராஜராஜன். அதனால், தன் பிறந்த நாளின் பொருட்டு, ஒட்டக்கூத்தருக்கு செய்ய வேண்டிய சிறப்புகளை, அவர் இருந்த மடத்துக்கே அனுப்பி வைத்தார்.
மன்னன் அனுப்பிய பரிசுகளைப் பெற்ற கூத்தர், சமையல்காரனை அழைத்து, 'நாம் அரண்மனைக்குச் சென்று நீண்ட நாட்களாகி விட்டது; மன்னரைப் பார்க்கக்கூட தவறி விட்டோம். நாளை அவரது பிறந்த நாள் என்பதால், நாம் அரண்மனைக்கு சென்று, மன்னரை நேரில் வாழ்த்துவது தான் முறை. அரசவையில் கூட்டம் சேர்ந்து விட்டால், பார்வையிழந்த நான் சென்று வருவது கஷ்டம். அதனால், அதிகாலையிலேயே எனக்கு வெந்நீரும், பூஜைப் பொருட்களும் தயார் செய்து வை...' என்று முன்னதாகவே கூறி விட்டார்.
மறுநாள் அதிகாலையில், அரண்மனைக்குச் செல்பவர் உடுத்த வேண்டிய முறையில் ஆடை மற்றும் பிற ஆபரணங்களை அணிந்து புறப்படத் தயாரானார்.
கைத்தடியையும், திருநீற்றுப் பையையும் அவரிடம் எடுத்து கொடுத்த சமையல்காரன், அரண்மனைக்கு செல்ல வண்டி கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றவன், திரும்ப வேண்டிய நேரத்தில் வரவில்லை. 'நாழிகை கடந்து கொண்டே இருக்கிறதே... போனவனைக் காணோமே...' என்று நினைத்துக் கொண்டிருந்த போது, வண்டி ஒன்று வீட்டு வாசலில் வந்து நிற்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் காலடி ஓசையும் கேட்டது.
''தம்பி... நேரமாகி விட்டது; சீக்கிரம் அரண்மனை செல்வோம். கொஞ்சம் கையைக் கொடு; மெதுவாக எழுந்திருக்கிறேன்...' என்றார் கூத்தர்.
ஒரு கரம் கூத்தரைப் பற்றியது; அந்தக் கரத்தின் பிடிப்பு, கூத்தரை வியப்பில் ஆழ்த்தியது. உடனே கூத்தர், தம் இரு கரங்களால் அந்தக் கரத்தைப் பற்றி, 'இந்தக் கரம் வாழ்க... வெல்க! கங்காபுர மாளிகைக்கு நான் வருவற்கு முன், கங்காபுர மாளிகையின் பரிசும், எனக்குக் கிடைத்து விட்டதே...' என்று குதூகலித்தார்.
கங்காபுரம் என்பது கங்கைகொண்ட சோழபுரம்; மாளிகை என்பது அரண்மனை. இதன் உட்பொருள், கங்காபுரத்தை ஆளுகிறவனுடைய கை என்பது பொருள். மா - ஆளி - கை என்ற மூன்று சொற்களால் ஆனது.
தன் கையைக் கொண்டே தன்னை அறிந்து, கூத்தர் பாராட்டியதைக் கண்டு, ராஜராஜன் வியப்படைந்தான். 'முதுமை காரணமாக தாங்கள் அரண்மனைக்கு வர இயலாது என்பதால், தங்களை வணங்க நானே வந்தேன். வண்டி கொணரச் சென்ற சமையல்காரனை வழியில் நிறுத்தி வந்து விட்டேன். தங்கள் கையை நான் பிடித்த மாத்திரத்தில், என்னைத் தாங்கள் இன்னவன் என்று அறிந்து கொண்ட மதிநுட்பத்தை, வேறு எவரிடம் காண முடியும்... ஆசி கூறுங்கள்...' என்று அவரை வீழ்ந்து வணங்கினான் மன்னன்.
ஜகன் மோகினி பத்திரிகை ஆசிரியையும், நாவலாசிரியையுமான வை.மு.கோதைநாயகி, உடல் நலமில்லாமல் இருந்த, எழுத்தாளர் கல்கியை பார்ப்பதற்காக வந்தார்.
'ப்ளூரஸி' நோயின் பாதிப்பு காரணமாக, பாதங்களில் ஏற்பட்டிருந்த வெடிப்புகளில், மஞ்சள் பற்று போட்டிருந்தார் கல்கி.
அதைப் பார்த்த கோதைநாயகி, 'கால்ல மஞ்சப் பத்து போட்டிருக்கிறீர்களே...' என்றார்.
'இந்தக் காலத்து பெண்கள் மஞ்சப் பூசுவதை நிறுத்திட்டதாலே, அந்த நஷ்டத்தை ஈடுகட்ட என்னால் முடிஞ்ச அளவு பாதங்களில் மஞ்சள் பூசுறேன்...' என்றார் கல்கி.
ஆங்கிலக் கவி கால்ரிட்ஜ், ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லாம்ப்பை சந்தித்து உரையாடுவது வழக்கம். ஒரு நாள், தாம் செய்த பிரசங்கங்களை சார்லஸ்சிடம் சொல்லி பெருமைப்பட்ட கால்ரிட்ஜ், 'சார்லஸ்... நான் பிரசங்கம் செய்து, நீங்கள் கேட்டதில்லயே...' என்றார்.
உடனே, 'உங்களிடம் பிரசங்கத்தைத் தவிர, வேறெதையுமே இதுவரை கேட்டதில்லையே...' என்றார் சார்லஸ்.
- நடுத்தெரு நாராயணன்