இன்று புதிதாய் பிறந்தேன்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இன்று புதிதாய் பிறந்தேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல மகன் கதிருடன் வந்திருந்தவரைப் பார்த்தவுடன், எரிச்சலாக இருந்தது. 'இவர் இங்க எப்படி...' என்ற கேள்வி, மனதில் தோன்றிய நிமிடம், ''வாங்க சம்பந்தி, பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா...'' என, நலம் விசாரித்தார்.
''ம்ம்... எல்லாம் நல்லாத்தான் இருந்தது,'' என்று முகம் பாராமல் பதிலளித்து, கதிரிடம் திரும்பி, ''ஏன் பானு வரல?'' என்று நான் கேட்ட தொனியில், அதிலிருந்த கடுமையை உணர்ந்தவன், சற்றே மென்மையாய், ''அவளுக்கும் வரணும்ன்னு தான்ப்பா ஆசை; ஆனா, இன்னைக்கு, அவளுக்கு ஆபீசில முக்கியமான மீட்டிங். நாம வீட்டுக்கு போறதுக்குள்ள வந்துடுவா,'' என்றான்.
'ஊரில இருந்து வரும் மாமனாரை அழைக்கக்கூட வர முடியாம, அப்படி என்ன மீட்டிங்...' பானு மேல் தோன்றிய கோபமும், பிரயாண அசதியும், என் எரிச்சலை பன் மடங்காக்கியது.
''எவ்ளோ நேரம் ஆகும் வீட்டிற்கு போக?''
பானுவின் அப்பா பதில் சொன்னார்... ''குறைஞ்சது முக்கால் மணி நேரம் ஆகும்,'' என்றார்.
''களைப்பா இருந்தா, கொஞ்ச நேரம் தூங்குங்கப்பா,'' என்றான் கதிர்.
தூங்குவது போல கண்களை மூடினாலாவது, பானுவின் அப்பாவிடம் பேசுவதை தவிர்க்கலாம் என்றெண்ணி கண்களை மூடினேன்.
சிறிது நேர பயணத்திற்கு பின், ''கதிர்... நான் இங்கேயே இறங்கிக்கிறேன்; அப்புறம் வந்து அப்பாவ பாக்கறேன்,'' என்று கூறி இறங்கிச் சென்றார் பானுவின் அப்பா.
''இந்த ஆள் எப்ப இங்க வந்தான், இப்போ எங்க போறான் அமெரிக்காவையே கரைச்சுக் குடிச்ச மாதிரி,'' கோபமாய், நான் கேட்க, ''அப்பா... கொஞ்சம் அமைதியா இருங்க; ஏன் மாமாவ கடிஞ்சு பேசறீங்க...'' என்றான் கதிர்.
அவன் அவருக்காக பரிந்து பேசியது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
''என்னடா, ஒரேடியா பொண்டாட்டி வீட்டோட ஐக்கியம் ஆகிட்ட போல,'' நக்கலாய் ஆரம்பித்த என் குரல், வீடு வந்து விட்டதை அறிந்து நின்றது. கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த பானு, ''வாங்க மாமா... எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டு வரவேற்றாள்.
''இப்போ நல்லா பேசு; விமான நிலையத்துக்கு வர்றதுக்கு என்ன?''
''ஆபீசில முக்கியமான மீட்டிங்; அதான் அப்பாவ, அவர் கூட அனுப்பினேன்.''
''ஆமாம், நீ ரொம்ப பிஸின்னு கதிர் சொன்னான். நீ தான் வரல, சரி விடு; உன் அப்பாவ, ஏன், என் பையன் கூட அனுப்புற... அவர பாத்ததும், உடனே, நான், அடுத்த பிளைட் பிடிச்சு, இந்தியாவுக்கே போய்டணும்ன்னு அப்பாவும், பொண்ணும் திட்டம் போட்டு வச்சீங்களா...''
நான் கோபமாக கத்துவதை கேட்டு, உள்ளறையில் என் உடைமைகளை வைத்துக் கொண்டிருந்த கதிர் ஓடி வந்தான்.
''பானு... அப்பாவுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; ரொம்ப களைப்பா இருக்கார்,'' என்று, அவளை உள்ளே அனுப்பி, ''அப்பா என்ன இது... ஏன் இப்படி பேசறீங்க? அவளே கடந்த, 10 நாளா ஆபீசில ஓய்வு இல்லாம வேலை பாத்துட்டு இருக்கா. நீங்க வர்றீங்கன்னு அத்தனை வேலைகளையும் தள்ளி வச்சுட்டு ஓடி வந்துருக்கா, அவளை போய் வந்ததும், வராததுமா திட்டறீங்களே...''
''ஆமாம், நான் பொல்லாதவன்; இந்த பட்டம் தரத்தான், இந்தியாவில இருந்து என்னை வர சொன்னியா?'' என்று கேட்டு, மீண்டும் என் குரல் உயர்ந்த சமயம், தட்டில் சூடான உப்புமாவுடன் வந்தாள் பானு.
அதன் மணத்தில் அவ்வளவு நேரம் மறந்து இருந்த பசி தலை தூக்கியது. இருந்தாலும், உடனே உண்ண, கவுரவம் இடம் தரவில்லை.
''ம்ம்... அவ்ளோ தூரத்தில இருந்து வந்தவனுக்கு, ரொம்ப கஷ்டப்பட்டு உப்புமா செஞ்சு வச்சு இருக்க போல...''என்றேன்.
பார்வையாலேயே, அவளை உள்ளே போக சொன்ன கதிர், ''அப்பா... சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க,'' என்று சொல்லி, 'டிவி'யை பார்க்கத் துவங்கினான்.
உடம்பிற்கு ஓய்வு தேவைப்பட்டாலும், மன உளைச்சலில் தூக்கம் வரவில்லை. பானுவின் அப்பாவும், நானும், ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த காரணத்தால், எங்கள் இரு குடும்பங்களும், ஒருவரை ஒருவர் அறிந்தே இருந்தது. கதிர், பானுவை மணக்க விருப்பம் தெரிவிக்க, எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இறுதியில் கதிரின் பிடிவாதம் வென்றது.
அதே சமயத்தில், பானுவின் அப்பாவிற்கு பதவி உயர்வு வந்து, நான் அவருக்கு கீழ் வேலைப் பார்க்கும்படி நேர்ந்தது. அவர் அதிகாரியானது, பொறாமையையும், இனம் புரியாத வெறுப்பையும் என்னுள் வளர்த்தது. அத்துடன், எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கு என் முன் கோபமும், சக ஊழியர்களிடம் நட்பற்ற தன்மையும் தான் காரணம் என, சக ஊழியர் ஒருவர் என் காதுப்பட பேசவே, கோபத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.
பழைய நினைவுகளால் தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த என்னிடம், காபி கொடுத்தான் கதிர்.
சமையல் அறையில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் பானு.
''கதிர்... இப்படி உட்காரு,'' என்றேன். அவன் அமர்ந்ததும், ''உன் மாமனார் இங்க எதுக்கு வந்துருக்கார்... அவர் வந்ததை பத்தி என்கிட்டே ஏன் சொல்லல?'' என்று கேட்டேன்.
''அப்பா... அமைதியா இருங்க. எதுக்கு இவ்ளோ கோபம்? மாமா நம்ம வீட்டுக்கு வரல; அவர் பையன் வீட்டுக்கு வந்து இருக்கார்.''
''அவன் டெக்ஸாசில இருக்கான்; பொய் சொல்லாதே,'' என்றேன்.
லேசாக சிரித்தவன், ''அப்பா, அவர் பையன் இங்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. அவன், அவன் மனைவி, நான் எல்லாரும் ஒரே கம்பெனியில் தான் வேலை பாக்கறோம். இதே அபார்ட்மென்ட் கேம்பசில தான் அவனும் இருக்கான்,'' என்றான் கதிர்.
''அப்படின்னா, நீ தான் உன் கம்பெனியில அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்தியா... பொண்டாட்டி குடும்பத்துக்கு தலையாட்டி பொம்மை ஆகிட்டேன்னு சொல்லு,'' என்றேன்.
''ஏன்ப்பா இப்படி இருக்கீங்க... மாறவே மாட்டீங்களா? உங்களோட இந்த குணத்தால அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா...'' என்றான் சிறு எரிச்சலுடன்!
''ஆமான்டா, நான் கொடுமைக்காரன்; உன் அம்மாவ திட்டியே சாகடிச்சிட்டேன். போதுமா...'' என்று கோபத்துடன் கூறி, அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டேன்.
''அப்பா, என்ன இது சின்னபுள்ள மாதிரி... கதவை திறங்க. ப்ளீஸ்ப்பா... நான் பேசினது தப்புத்தான் மன்னிச்சுடுங்க. வெளில வாங்க,'' என்று கெஞ்சினான் கதிர்.
அவன் மன்னிப்பு கேட்டது சந்தோஷமாக இருந்தாலும், கதவைத் திறக்கவில்லை. அப்படியே படுக்கையில் படுத்தவன், என்னை மறந்து தூங்கி விட்டேன்.
எழுந்தபோது, பானுவின் குரல் கேட்டது, ''என்னங்க இது... மாமாவிற்கு பிடிச்சதை எல்லாம் சமைக்க சொல்லிட்டு, இப்போ ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு, ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கீங்க? போய், அவரை சமாதானப்படுத்தி சாப்பிட அழைச்சுகிட்டு வாங்க,'' என்றாள்.
என் அறை நோக்கி கதிர் நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. ''அப்பா... ப்ளீஸ்ப்பா கதவைத் திறங்க...'' என்று கெஞ்சியபடி கதவைத் தட்டினான் கதிர்.
பசி வயிற்றைக் கிள்ளியதால், ரொம்பவும் முரண்டு பிடிக்காமல் கதவை திறந்தேன். உணவின் சுவையில், என்னை மறந்து, வழக்கத்தை விட சிறிது அதிகம் உண்டாலும், மனம் திறந்து பாராட்டவில்லை.
அதன் பின் வந்த நாட்களில், ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு எடுத்து, என்னுடன் நேரத்தை செலவிட்டனர். பல இடங்கள் சுற்றியது புது அனுபவமாய் இருந்தாலும், ஏதோ ஒப்புக்கு, அவர்களுடன் சென்று வருவது போல காட்டிக் கொண்டேன்.
அன்று என் பிறந்த நாள் வந்தது. சட்டை பரிசளித்து, என்னிடம் இருவரும் ஆசீர்வாதம் வாங்கினர். எனக்கு அந்த சட்டை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனாலும், குளித்த பின், வேண்டுமென்றே வேறு சட்டை அணிந்தேன்.
''அப்பா... நாங்க வாங்கி கொடுத்த ஷர்ட்ட போடலயா?'' என்று கேட்ட கதிரின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
''நீ வாங்கிக் கொடுத்தேங்கறதுக்காக போட்டுக்க முடியாது; எனக்கும் பிடிக்கணும்,'' பட்டென்று நான் சொன்ன பதிலில், கதிரின் முகம் சுருங்கி விட்டது.
மாலை அலுவலகம் முடிந்து வந்தவன், ''அப்பா, நாளைக்கு பானுவின் அண்ணனுக்கு முதல் திருமண நாள். வீட்டுல விருந்து வச்சு இருக்காங்க. உங்கள கூப்பிட, அத்தையும், மாமாவும் வருவாங்க,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய மாமனாரும், மாமியாரும் வந்தனர்.
முகம் திருப்பி அமர்ந்திருந்த என்னிடம், அவர்கள் தணிந்து பேசினர்.
அவர்கள் சென்ற பின், ''கதிர்... நான் அவங்க வீட்டு விருந்துக்கு வரல,'' என்றேன்.
பானுவும், கதிரும் என்னை கட்டாயப்படுத்துவர் என்று, எண்ணினேன். ஆனால், அவர்கள், 'உங்கள் இஷ்டம்' என்று முடித்துக் கொண்டது ஏமாற்றமாய் இருந்தது.
மறுநாள் இருவரும், அலுவலகம் கிளம்பியவுடன், வீட்டின் அருகில் இருந்த பெரிய கடையில், எதையாவது வாங்கும் சாக்கில், நேரத்தை செலவிடலாம் என நினைத்து அங்கு சென்றேன்.
முதன்முறை, அக்கடைக்கு சென்றிருந்த போது, அங்கு பணியாற்றிய இந்திய இளைஞன் ஒருவன் அறிமுகமாகியிருந்தான். அவன் பெயர் சுந்தர். எப்போது அக்கடைக்கு சென்றாலும், நட்புடன் சிரித்து, ஓரிரு வார்த்தைகள் பேசாமல், அவன் சென்றது இல்லை.
சில பொருட்களை எடுத்து பில் போட கொடுத்தபோது, ''ஹவ் ஆர் யு அங்கிள்?'' என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
மலர்ந்த முகத்துடன் சுந்தர் நின்றிருந்தான். ''ம்... நல்லா இருக்கேன்; நீ எப்படி இருக்கே?'' என்ற என் கேள்விக்கு, தானும் நலமாய் இருப்பதாய் சொன்னவன், ''அங்கிள்... இந்த சட்டையில நீங்க ரொம்ப இளமையா தெரியுறீங்க... வெரி நைஸ் செலக் ஷன்,'' என்ற போது தான், நான் அணிந்திருந்த சட்டையை பார்த்தேன். அது கதிரும், பானுவும் பிறந்த நாள் பரிசாய் கொடுத்தது.
நான் இளமையாய், பார்க்க நன்றாக இருப்பதாய் சுந்தர் கூறியதும், மனதிற்குள், உற்சாகம் தோன்றியது. நன்றி கூறி, அவனிடம் விடை பெற்று வெளியே வந்த எனக்கு, மனம் அமைதியாய் இருப்பதை போன்று தோன்றியது. ஒருவர், நம்மை புகழும் போது, மனம் இவ்வளவு சந்தோஷப்பட முடியுமா என்பதை, இதுவரை, நான் உணர்ந்ததில்லை.
மாலையில் வேலை முடிந்து அலுப்புடன், பானுவும், கதிரும் வீட்டிற்குள் வர, எனக்கு ஏனோ அவர்களை கண்டவுடன் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது. இதுவரை, அவர்கள் இருவரும் எனக்காக செய்த எதையும், நான் பாராட்டியது இல்லை. அவர்கள் எனக்கு செய்வது, அவர்கள் கடமை என்றே நினைத்திருந்தேன். யாரோ ஒருவன், நான் அணிந்த உடையினால் இளமையாய் தெரிவதாய் சொன்னதற்கே என் மனம் இவ்வளவு சந்தோஷப்படுகிறதே... இவர்கள் என்னை மனம் கோணாமல் வைத்துக் கொள்ள என்ன பாடுபடுகின்றனர்... ஆனாலும் நான், இவர்கள் செய்வதை ஒரு நாளும் மனநிறைவோடு ஏற்றுக் கொண்டது இல்லையே... எனக்கே என் மன நிலையின் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் பானுவின் அண்ணன் வீட்டிற்கு புறப்பட்டு செல்ல, இரவு உணவை, அருகில் உள்ள இந்தியன் உணவகத்தில் பார்த்துக் கொள்வதாய் சொல்லி விட்டேன்.
இரவு - இந்தியன் உணவகத்தில், என் அருகே இருந்த மேஜையில், என் வயதொத்த தம்பதி வந்து அமர்ந்தனர். சிறிது நேரத்தில், அந்த அம்மா தன் கணவர் மேல் பாயத் துவங்கினார்.
''உண்மைய சொல்லுங்க... இன்னைக்கு உங்க மருமக செய்திருந்த மதிய சமையல் வாயில வைக்கற மாதிரியா இருந்துச்சு... ஆனா, நீங்க என்னடானா அப்படி புகழ்ந்து தள்ளறீங்க... அவளை, ஒரு வார்த்தை சொன்னா, வரிஞ்சு கட்டி சப்போர்ட் செய்றீங்க,'' என்று பொரிந்து தள்ளினாள்.
''உன் பேச்சை மதிக்காம, உன் பையன் கல்யாணம் செய்துக்கிட்டான்னு, அந்த கோபத்த அந்தப் பொண்ணுகிட்ட காட்ட நினைக்கிறே... அவ டில்லி பொண்ணு; அதுக்கு பராத்தா, ரொட்டி, சப்பாத்தி, சப்ஜிதான் செய்ய வரும். ஆனா, அந்தப் பொண்ணு நம்மளை சந்தோஷப்படுத்த எண்ணி, நம்ம ஊர் சமையல செய்யுது. அதுல சமயத்துல புளிப்பு, உப்பு, காரம் தூக்கலாவோ இல்ல குறைஞ்சோ போய்டுது. இத பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணுகிட்ட பிரச்னை செய்றே... இன்னைக்கு நீ கோவிச்சுக்கிட்டு மதியம் சாப்பிடாம போய் படுத்துட்ட, அந்தப் பொண்ணு எப்படி அழுதா தெரியுமா?''
''எல்லாம் நடிப்பு.''
''அப்படி பேசாத... இவ்ளோ செலவு செய்து நம்மள வரவழைச்சு, உன்கிட்ட பேச்சு வாங்கணும்ன்னு, அவளுக்கு தலையெழுத்தா... நாம இங்க வந்து இருக்கறது, நம்ம பேரப் பிள்ளைக மகன், மருமக கூட கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்க. ஆனா, நீ என்னமோ நாம வந்ததே சாப்பிடத்தான் என்பது போல நடந்துக்கற. நாம இன்னும் எவ்வளவு காலம் வாழ்ந்துட போறோம்... நம் வாழ்க்கையில முக்கால்வாசி நாட்கள் முடிஞ்சு போச்சு. இனிமேலாவது, இருக்கறவரை நாமும் சந்தோஷமாய் இருப்போம்; மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த முயற்சிப்போம். தயவு செய்து உன்னை மாத்திக்கப் பாரு,''என்றார்.
சுந்தரின் பாராட்டு வார்த்தைகளால் அமைதியாக இருந்த என் மனம், அவரின் பேச்சில் இருந்த கருத்தை உள்வாங்கியது. காபி மட்டும் குடித்து விட்டு கிளம்பினேன். 'இருக்கற வரை நாமும் சந்தோஷமாய் இருந்து, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த முயற்சிக்கணும்...' என்று அவர் கூறியது என் காதுகளில் ஒலித்தபடியே இருந்தது.
வீட்டில் பானுவும், கதிரும் எனக்காக காத்திருப்பதை கண்டவுடன், மனம் சட்டென்று உருகி விட்டது.
''ஏன் ரெண்டு பேரும் உடனே வந்துட்டீங்க... இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாமே...'' என்றேன்.
பேசுவது நான் தானா என்பது போல, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
''இல்ல, நாங்க சாப்பிட்டோம்; நீங்க சாப்பிட்டீங்களான்னு தெரியல. அதான் சீக்கிரம் வந்து இட்லி செய்து வச்சுருக்கேன்,'' பானுவின் குரலில், நான் என்ன சொல்லப் போகிறேனோ என்ற பயம் தெரிந்தது.
''எடுத்து வைம்மா; சாப்டறேன்,'' தன்மையாய் வெளிப்பட்ட என் குரலை கேட்டு, இருவருமே ஒரு நிமிடம் அசந்து நின்றனர்.
பஞ்சு போன்ற இட்லியும், காரம், புளிப்பு, உப்பு எல்லாம் சரியான விகிதத்தில் இருந்த தக்காளி சட்னியும், அருமையாய் இருந்தது. அதை வாய்விட்டு சொல்லியபோது, ''அப்பா, நிஜமா சொல்றீங்களா... அருமையா இருக்கா?'' கதிரின் குரலில் சந்தோஷம்.
''நன்றி மாமா,'' என்றபோது, பானுவின் முகம் ஜொலித்தது.
இவ்வளவு காலம் எல்லாரையும், தேவையற்று புண்படுத்தி, நான் செய்தவைகளை நினைத்து, முதன் முதலாக என் மனம் வருந்தியது. மீதம் இருக்கும் நாட்களிலாவது, யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன், கண்களை மூட, தூக்கம் எந்த இடையூறும் இன்றி வந்து கண்களை தழுவியது.
காலை எழுந்தவுடன், என் சம்பந்தியின், கைபேசிக்கு அழைத்தேன். எடுத்தவரிடம் காலை வணக்கம் சொல்லி, ''என்னுடன் நடைபயிற்சிக்கு வர முடியுமா?'' என்று கேட்டேன். ''வருகிறேன்...'' என்று தயக்கம் இன்றி, அவர் சொன்னாலும், அவரின் குரலில் இருந்த ஆச்சரியத்தை என்னால் நன்றாகவே உணர முடிந்தது.
கதவை திறந்து வெளியே படிகளில் இறங்கிய என் முகத்தில், குளிர்ச்சியாய் மோதிய தென்றல், இன்று புதிதாய் நான் பிறந்ததை எனக்கு உணர்த்தியது.

நித்யா பாலாஜி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X