மாறாத மூர் விதியும் மாறி வரும் உலகமும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
00:00

ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம். இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன. எனவே, அறிவியல் உலகம், இந்த சிப்களில் தொடர்ந்து கூடுதலான எண்ணிக்கையில், ட்ரான்சிஸ்டர்களைப் பதிப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் செலுத்தி, ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
1965 ஆம் ஆண்டு, இந்தப் பெருக்கத்தினைக் கண்ணுற்ற, இந்த சிப் துறையில் செயலாற்றிய விஞ்ஞானி கார்டன் மூர் (Gordon Moore) ஒவ்வோர் ஆண்டும், சிப் ஒன்றில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயரும்' என்று, ஏப்ரல் 18, 1965 அன்று, கருத்து வெளியிட்டார். இதனையே கம்ப்யூட்டர் உலகம்”மூர் விதி (Moore's Law)” எனப் பெயரிட்டு அழைத்தது.
இந்த விதி உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த விதியின் தாக்கம் டிஜிட்டல் உலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் உலகில் ஏற்படும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும், சாதன உருவாக்கமும், இந்த விதியின் எடுத்துக்
காட்டுகளாக இயங்கி, குறிப்பிட்ட அந்த விதி இன்றைக்கும் பொருள் கொண்டதாக இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிப்களைத் தயாரிக்கும் இன்டெல் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான கார்டன் மூர், இந்த புதிய நோக்கினைக் கொண்ட விதியை 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக் கூறினார். டிஜிட்டல் உலகில், புதிய பிரிவுகளையும், தொழிற்சாலைகளையும் ஏற்படுத்த இந்த விதி அடிப்படையாக அமைந்தது. இன்றைய டிஜிட்டல் கேமராக்கள், ஸ்மார்ட் போன்கள், வர இருக்கின்ற ட்ரைவர் இல்லாத கார்கள் என அனைத்தும், இந்த விதியின் அடிப்படையில் உருவாகும் சிப்களின் இயக்கத்திலேயே இயங்குபவையாய் இருக்கின்றன.
தற்போது 86 வயதாகும், கார்டன் மூர், 50 ஆண்டுகளுக்கு முன், ”எலக்ட்ரானிக்ஸ் மேகஸின்” என்னும் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறினார். அப்போது அவர் “பேர் சைல்ட் செமி கண்டக்டர் (Fairchild Semiconductor)” என்னும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது 8 ட்ரான்சிஸ்டர்கள் கொண்ட சிப்களே புழக்கத்தில் இருந்தன. ஆனால், அவர் பணியாற்றிய தொழிற்சாலை 16 ட்ரான்சிஸ்டர்கள் கொண்ட சிப்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன. இதனைக் கண்ணுற்ற மூர், மேலே விளக்கப்பட்ட கோட்பாட்டினை அறிவித்தார்.
பின்னர், 1968ல், ராபர்ட் நாய்ஸ் என்பவருடன் இணைந்து, கார்டன் மூர் இன்டெல் நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது 60 ட்ரான்சிஸ்டர்களுடன் இருந்த சிப், பத்து ஆண்டுகளில், 60 ஆயிரம் ட்ரான்சிஸ்டர்களைக் கொண்டதாக உருவானது. இன்றைக்கு உருவாக்கப்படும் அதி நவீன சிப்களில், 130 கோடி ட்ரான்சிஸ்டர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சிப்கள் தொடர்ந்து, சிறியனவாகவும், வேகமாகச் செயல்படுபவையாகவும், அதிகத் திறனுடன் செயலாற்றும் தன்மை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாற்றம் ஏதோ ஏற்பட வேண்டும் என்ற உந்துதலினால் சிப்பினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டது அல்ல. இதற்குப் பல புதிய கண்டுபிடிப்புகள் உதவியாக இருந்து அடிப்படையை அமைத்தன. இந்த அறிவியற் கண்டுபிடிப்புகளில் சிலவாக CMOS, Silicon straining, VLSI, Immersion lithography மற்றும் High-k dielectrics ஆகியவற்றைக் கூறலாம். இந்த வரிசையில், அண்மையில் வந்திருப்பது FinFET அல்லது Tri-gate "3D" transistor process technology என அழைக்கப்படும் தொழில் நுட்பமாகும். இதன் மூலம் மிக மிகச் சிறிய மைக்ரோ ப்ராசசர்களையும், மெமரி செல்களையும் உருவாக்க முடிகிறது.
இதனைப் புரிந்து கொள்ள, நாம் அன்றைய காலத்து பிலிம் கேமராக்களையும், இன்று மொபைல் போன்களில் பயன்படுத்தும் கேமராவினையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறிய ட்ரான்சிஸ்டர் ரேடியோக்களையும், இன்று பட்டன் அளவில் கூட இல்லாமல் இயங்கும் எப்.எம். ரேடியோக்களை எண்ணிப் பார்க்கலாம். இவ்வாறு மிகச் சிறிய அளவில் நாம் உல்லாசமாகப் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும், மூர் விதியின் கீழ் தயாரிக்கப்பட்ட, பல லட்சம் ட்ரான்சிஸ்டர்களைக் கொண்ட சிப்களினால் தான் வடிவமைக்கப்பட்டன.
முன்பு வெற்றிடக் கண்ணாடி குப்பிகளில் இருந்த வால்வ்கள் பல கொண்ட ரேடியோவை, இன்று ஐம்பது, அறுபது வயதில் இருப்பவர்கள் பயன்படுத்தி இருப்பார்கள். ரேடியோவை அதன் ஸ்விட்ச் போட்டுவிட்டு, ரேடியோ ஸ்டேஷனில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பு வருவதற்குள், முகம் கழுவித் திரும்பலாம். இன்று, இயக்கியவுடனேயே ஒளிபரப்பு கிடைப்பது இந்த சிப்களினால் தான். இன்று வால்வ் ரேடியோவைத் தேடிப் போனாலும் வாங்க முடியாது.
அது மட்டுமல்ல, முதன் முதலில் யு ட்யூப் தளத்தில் காட்டப்பட்ட விடியோ படத்தின் காட்சிகள் தொடர்ந்து நம் கம்ப்யூட்டரை வந்தடைந்தது, இந்த விதியின் கீழ் உருவான சிப் மூலம் தான். ஸ்ட்ரீமிங் செயல்பாட்டுக்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது, பல ட்ரான்சிஸ்டர்கள் கொண்ட சிப்கள் தான். ட்விட்டர் அமைந்ததும் இதன் மூலம் தான். ஐபோன், ஐ பேட் ஆகியன உருவானதன் அடிப்படையும் இதுதான்.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், ஸ்மார்ட் போன்கள், கேம்ஸ் விளையாடப் பயன்படுத்தும் கன்ஸோல் சாதனங்கள், நவீன 4கே ரெசல்யூசன் காட்சித் திரைகள் எனத் தொடர்ந்து, இதற்கான எடுத்துக் காட்டுகளாக அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
மூர் விதி சொல்லிவிட்டதே என்று வலுக்கட்டாயமாக ஒவ்வொரு நிறுவனமும் இந்த சிப் மேம்பாட்டினைக் கொண்டு வரவில்லை. பல நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் இதற்கான அடிப்படையையும், கண்டுபிடிப்பினையும் தந்தன. பரிசோதனைச் சாலைகளிலும், நிறுவனங்களிலும் தொடர்ந்து கடுமையான உழைத்த விஞ்ஞானிகளால் தான், இந்த புதிய சிப்கள் உருவாகின. அதில் ஒரு சில நிறுவனங்களைப் பட்டியல் இடுவதாக இருந்தால், Bell, Shockley Semiconductor, Fairchild, Intel, Toshiba, IBM, Advanced Micro Devices, TSMC, Samsung, போன்றவற்றைக் கூறலாம். ஆனால், இவற்றின் முயற்சிகள் அனைத்திற்கும் தூண்டுகோலாய் இருந்தது மூர் விதி தான். இன்றும் இனியும் தொடர்ந்து இந்த விதி, சிப் தயாரிப்பின் அடிப்படையை நிர்ணயிக்கும் விதியாகவும், பல டிஜிட்டல் சாதனங்கள் உருவாவதின் கட்டமைப்பாகவும் இருக்கும்.
இந்த விதியின் அடிப்படையில், தொடர்ந்து சிப் தயாரிக்கப்பட்டால், இந்த தொழில் என்னவாகும்? புதிய, வியக்கத்தக்க சாதனங்கள் வெளியாகி, மனித வாழ்வை மேம்படுத்தும். தானாக ஓடும் கார்கள், சர்வ சாதாரணமாக சாலைகளில் ஓடும்.
நம் வீடுகளில் நமக்குத் துணை புரிய பலவிதமான ரோபோக்கள் கிடைக்கும். மருத்துவமனைகளில், நுண்ணிய அறுவை சிகிச்சைகளை, ரோபோக்கள் நடத்தும். மருந்து காண இயலாத, புற்று நோய்க்கு சிகிச்சை முறை கிடைக்கலாம். ஏன், இந்தப் புவியில், மனித வாழ்க்கையின் சராசரி அளவு இன்னும் அதிகமாகலாம். காத்திருப்போம். இந்த விதியை உரக்க அறிவித்த கார்டன் மூர் அவர்களைப் பாராட்டுவோம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B M Jawahar Muthukrishnan. - Nagapattinam,இந்தியா
01-மே-201506:40:44 IST Report Abuse
B M Jawahar Muthukrishnan. கர்டன் மூர் அவர்களின் பாதம் தொட்டு என் மனதால் வணங்குகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X