கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
00:00

கேள்வி: நான் சில மாதங்களாக பேஸ்புக் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்களுடன் விட்டுப் போன தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளேன். சேட் விண்டோவிலும் அவர்களுடன் உரையாடுகிறேன். இந்த விண்டோவில் ஒருவருடன் மட்டுமே சேட் செய்திட முடிகிறது. ஆனால், ஒரே நேரத்தில் பலருடன் சேட் செய்திடலாம் என என் நண்பர் கூறுகிறார். அது எப்படி என விளக்கவும்.
ஆர்.என். சரஸ்வதி, திண்டுக்கல்.
பதில்:
தாராளமாக, ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பேசலாம். இதற்கான வசதி அதே சேட் விண்டோவில் தரப்பட்டுள்ளது. முதலில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும். அந்த விண்டோவில் மேலாக Options என்னும் கியர் வீல் படத்தில் கிளிக் செய்தால், Add Friends to Chat என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடன் ஒரு சிறிய நீளக் கட்டம் கிடைக்கும். அதில் நீங்கள் இணைக்க விரும்பும் நபரின் பெயரை டைப் செய்தால், அவரும் இந்த விண்டோவில் சேர்க்கப்படுவார். இப்படியே பலரை இணைத்து சேட் செய்திடலாம். இப்போது, நீங்கள் இணைத்த அனைத்து நண்பர்களும் இந்த குரூப்பில் இருப்பார்கள். அவர்கள் பெயர்கள் காட்டப்படும். இந்த விண்டோவில் நீங்கள் எதனை டைப் செய்தாலும், அது இங்கு இணைக்கப்பட்டுள்ள நண்பர்களின் சேட் விண்டோக்களிலும் காட்டப்படும்.

கேள்வி: என் நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது, என் மொபைல் போனுக்கு இணைய இணைப்பு வை பி யாகக் கேட்டேன். அதற்கு அவர் வை பி தரும் ரெளட்டர் மோடம் இல்லை. ஆனால், வயர் மூலம் லேப்டாப்பிற்கு இணைய இணைப்பு உள்ளதென்றார். உடன் அவருடைய மகள், இணைய இணைப்பை வை பியாக மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும் என்று சொல்லி, உடன் செய்து காட்டினார். இது எப்படி சாத்தியமாகிறது? இதனை அவர் விளக்கிய போது எனக்குப் புரியவில்லை. நீங்கள் விளக்கவும்.
எஸ். சித்ரலேகா, கோவை.
பதில்:
உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம். இதனை மிக எளிமையான நெட்வொர்க் அமைப்பின் மூலம் செயல்படுத்தலாம். கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.
கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு கிடைக்கும் பிரிவுகளில் Network and Sharing Center செல்லவும். இங்கு ” Setup a new connection or network“ என்பதில் கிளிக் செய்திடவும். பின் மீண்டும் “Setup a wireless ad-hoc network” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இணைப்பிற்கு ஒரு பெயர் (SSID) கொடுக்கவும். அதற்கான நெட்வொர்க் கீ ஒன்றையும் அமைக்கவும். இதில் காட்டப்பட்டுள்ள internet connection sharing என்பதை இயக்கத்தில் வைக்கவும். இனி இந்த குறிப்பிட்ட Wi-Fi AP ஐ லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் தேடிப் பெறலாம். இணைய இணைப்பிற்கான செட் அப் கிடைத்தவுடன், செட் செய்த கீயை அதில் எண்டர் செய்து இணைய இணைப்பினைப் பயன்படுத்தவும்.

கேள்வி: சென்ற ஆண்டு, என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை, விண்டோஸ் 8.1க்கு மாற்றினேன். இப்போது அடிக்கடி, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு இலவசமாக மாறிக் கொள்ளுங்கள் என்ற பாப் அப் செய்தி கிடைக்கிறது. கட்டாயம் மாறிக் கொள்ள வேண்டுமா?
எஸ். பூபதி, கோவை.
பதில்
: தான் விரைவில் வெளியிட இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் மாற்றிவிட, மைக்ரோசாப்ட் அதீத முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான், நீங்கள் பெறும் அறிவிப்புகள். அது மட்டுமின்றி, முதல் முறையாக, மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகப் பெற்று ஓராண்டு இயக்குங்கள். அதன் பின்னரும் இது இலவசமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதுவரை இந்த இலவச திட்டம் எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியவில்லை.
உங்களுடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியவில்லை. அதே பதில், இதே போன்ற சந்தேகம் உள்ள மற்றவர்களுக்கும் பொருந்துமா என்றும் புரியவில்லை. ஒன்று நிச்சயம். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, தன் வாடிக்கையாளர்களை, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், ஒரு புதிய அனுபவத்திற்கு மைக்ரோசாப்ட் இட்டுச் செல்கிறது. நவீன தொழில் நுட்பத்தின் புதிய வசதிகளை அனுபவிக்கலாம் என முடிவு செய்தால், நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். மேலும், விரைவில் தற்போது விண் 8.1 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களை நாம் புதிய ஹார்ட்வேர் தொகுதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் எழலாம்.

கேள்வி: வீல் இல்லாமல் புளுடூத் மவுஸ் ஒன்று வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். வேர்டில் டெக்ஸ்ட் தேர்வில் பலவகை முறை உள்ளது என முன்பு எழுதியிருந்தீர்கள். இந்த மவுஸைக் கொண்டு அதே போல பயன்படுத்த முடியுமா? அந்த வழிகளை மீண்டும் விளக்கமாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். செந்தில்ராஜன், திருப்பூர்.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் மவுஸில் உள்ள மேல் பாகத்தை, வீல் சுழற்றுவது போலத் தடவிக் கொடுத்தாலே போதும். வீல் சுழற்றிய செயல்பாடு கிடைக்கும். டெக்ஸ்ட் செலக்ட் செய்வதில், ஏற்கனவே மவுஸின் இடது பட்டனை அழுத்தி, மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகும். இதில் தான் இன்னும் விரைவாக டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கும் வழிகள் உள்ளன. அவை: 1. எங்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட் தொடங்குகிறதோ, அங்கு கர்சரைக் கொண்டு வைக்கவும். அடுத்து, மவுஸை எடுத்து, டெக்ஸ்ட் எங்கு முடிகிறதோ, அங்கு கர்சரைக் கிளிக் செய்திடவும். கர்சரைக் கிளிக் செய்திடுகையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொள்ளவும். இப்போது டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு பத்தியில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று, ஒரு சொல்லில் வைத்து இருமுறை கிளிக் செய்தால், அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்தால், அந்த சொல் உள்ள பாரா தேர்ந்தெடுக்கப்படும். இவை மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் மூலமாகவும் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். பல வகையான டாகுமெண்ட்கள் தயாரித்து வருகிறேன். இவற்றில் குறிப்பிட்ட இடங்களில், அன்றைய தேதியை அமைக்க வேண்டியதுள்ளது. இதற்கான ஷார்ட் கட் என்ன?
நா. பாலகுமார், விருதுநகர்.
பதில்:
எந்த வித டாகுமெண்ட் என்றாலும், இந்த தேவை ஏற்படலாம். மெமோ, லெட்டர், அறிக்கை அல்லது வேறு வகையான நாள் சார்ந்த குறிப்புகள். இங்கெல்லாம் நாம் தேதியை அமைத்தே ஆக வேண்டும். எனவே, வேர்ட் இதனை மிக எளிமையான வழிகளில் அமைக்க வசதி தந்துள்ளது. தேதியை டெக்ஸ்ட்டில் இடைச் செருக அல்லது அமைக்க, கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும். எந்த இடத்தில் தேதி அமைக்கப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தௌம். ரிப்பனில், Insert டேப் அழுத்தவும். அடுத்து, Text குரூப்பில், Date & Time டூல் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் Date and Time டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு அமைக்கப்பட இருக்கும் தேதிக்கான பார்மட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த டயலாக் பாக்ஸின் கீழாக, "Update Automatically" என்று இருப்பதை, அங்குள்ள செக் பாக்ஸில் டிக் ஏற்படுத்தி தேர்ந்தெடுத்தால், தேதியானது ஒரு பீல்டாக மாறும். அது கம்ப்யூட்டர் இயங்கும் போதெல்லாம், தேதியை அப்டேட் செய்திடும். நீங்கள் கடிதங்கள் போல அமைக்க டெம்ப்ளேட் அமைக்கையில், இது உங்களுக்கு உதவியாய் இருக்கும்.

கேள்வி: நெட் நியூட்ராலிட்டி குறித்த தங்களுடைய கட்டுரை மிக அற்புதமாக உள்ளது. இந்த Net Neutrality என்ற சொல்லாட்சியை யார் முதலில் கொண்டு வந்து பயன்படுத்தினார்கள். எப்படி பிரபலமானது?
எஸ். கே. ஹேமந்த், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. Net Neutrality என்ற சொல்லாட்சி, முதன் முதலில், அமெரிக்காவில் கல்வியாளர் டிம் வு (Tim Wu) 2003 ஆம் ஆண்டில் உருவாக்கினார். அமெரிக்காவில் இணைய இணைப்பு சேவை வழங்கும் காம் காஸ்ட் நிறுவனம், பிட் டாரண்ட் தளத்தைத் தருவதில் சிக்கல் ஏற்படுத்தியபோது, பிரச்னை ஏற்பட்டது. அப்போதிருந்து இந்த சொல்லாட்சி பிரபலமானது. பின், 2010 ஆம் ஆண்டில், அமெரிக்க Federal Communications Commission (FCC) இந்த சொல்லையே பயன்படுத்தியது. அந்த ஆண்டில், இணையம் அனைவருக்கும் திறந்த வெளியாக இருக்க வேண்டும் என ஆணையிட்டது.
ஆனால், இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், இந்த சுதந்திரம் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தங்களுக்குப் பணம் செலுத்தும் நிறுவனங்களின் தளங்களைச் சிறப்பாகவும், மற்றவற்றை சிக்கல்களோடும் காட்டி வந்தன, வருகின்றன. அண்மைக் காலத்தில்
இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. மற்றும் ஏர்செல் விக்கிப்பீடியா ஸீரோ ஆகிய திட்டங்கள், சில தளங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இணைப்பு வழங்க அறிவித்துள்ளன. இங்கு இனி ட்ராய் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்து விதிமுறைகள் அமையும்.

கேள்வி: நீங்கள் அளிக்கும் விண்டோஸ் 7 சிஸ்டம் டிப், என்னுடைய சிஸ்டத்தில் இயங்க மறுக்கிறது. என்னுடைய கம்ப்யூட்டரில் உள்ளதும் விண்டோஸ் 7 தான். எதனால் இந்த பிரச்னை? வேறு சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளதனால், எடுபடவில்லையா? என்ன செய்ய வேண்டும் என விளக்கம் தரவும்.
என். ஜெயராமன், சீர்காழி.
பதில்
: இது போல பல வாசகர்கள், கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு தொலைபேசியிலும், மின் அஞ்சல் வழியிலும் கேட்டுள்ளனர். ஒரு சிலர், விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்து செயலாற்றும் திறன் கொண்டது என அறிவிக்கப்படும் அப்ளிகேஷன்கள் கூட செயல்படுவது இல்லையே, ஏன்? எனக் கேட்டுள்ளனர். அவர்களின் சந்தேகங்களுக்கான பதில்.
நம் வாசகர்கள் பலரிடம் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் அல்லது ஹோம் புரபஷனல் வைத்துள்ளனர். மொத்தம் ஆறு வகையான விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. ஹோம் பிரிமியம் வகை, வீடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கானது. விண்டோஸ் 7 ஸ்டார்டர் (Windows 7 Starter) என்ற வகையும் உள்ளது. இது 32 பிட் இயக்கமாகும். இதன் வசதிகள் சற்றுக் குறைவாகவே இருக்கும். இதில் வால் பேப்பரைக் கூட மாற்ற இயலாது. இதே போல விண்டோஸ் 7 ஹோம் பேசிக் என்ற பதிப்பு, அமெரிக்க நாடு தவிர்த்து பிற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்குவதற்கு, நாடு சார்ந்த வரையறைகள் உண்டு.
வர்த்தக நிறுவனங்களுக்கானது விண்டோஸ் 7 புரபஷனல். விண்டோஸ் 7 எண்டர்பிரைசஸ் என்பதுவும் இதே போல வர்த்தக நிறுவனங்களுக்கானது. இது அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் கேட்போருக்குத் தரப்படும்.
விண்டோஸ் 7 அல்டிமேட் என்பது, விண்டோஸ் எண்டர்பிரைஸ் வகையைப் போலவே பல வசதிகளைக் கொண்டது. வீடுகளில் வைத்துப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது.
இந்த குழப்பத்தில் இன்னும் பிரச்னையை வளர்க்க, ஒரு வகை விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள், இன்னொரு வகைக்கு அப்கிரேட் செய்திட முடியும். எனவே, நீங்கள் இப்போது வைத்திருக்கும் விண்டோஸ் 7 வகை, நீங்கள் தொடக்கத்தில் வைத்திருந்த விண்டோஸ் 7 ஆக இல்லாமல் இருக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X