சென்ற ஏப்ரல் 8 அன்று, சீனாவில் நடைபெற்ற மி பேன் (Mi Fan) விற்பனைத் திருவிழாவில், சீனாவின் மொபைல் போன் நிறுவனமான ஸியாமி, தன் சாதனங்கள் விற்பனையில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது. இணையம் வழியாக, ஒரே நாளில், 21 லட்சத்து 11 ஆயிரம் போன்களை விற்பனை செய்தது. இந்த விற்பனையும் 12 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானமாக 208 கோடி சீன யுவான் (33.5 கோடி டாலர் (அமெரிக்க டாலர்)) கிடைத்துள்ளது. துணை சாதனங்கள் விற்பனையில் மட்டும் 17 கோடி யுவான் பெற்றுள்ளது. இந்த சாதனங்களில், மொபைல் போன், டி.வி., பவர் பேங்க், பவர் ஸ்ட்ரிப், வை பி சாதனங்கள் ஆகியவை அடங்கும்.
மொத்தம் 30 லட்சத்து 50 ஆயிரம் ஆர்டர்கள் பெறப்பட்டன. இவற்றில் 5 லட்சம் ஆர்டர்கள் 12 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டன. இந்நிறுவனத்திற்கு, சீனா முழுவதும் 12 மொத்த சரக்கு இருப்பகங்கள் இயங்குகின்றன. நடப்பு ஆண்டில், ஸியாமி, 10 கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.