மொபைல் போன்களில், பேஸ்புக் தளம் காணும் வசதியை, பேஸ்புக் மெசஞ்சர் என்ற பெயரில் தரப்படுகிறது. அந்த வசதியில் இன்னும் ஒரு கூடுதல் பரிமாணமாக, அண்மையில், ஒருவரை திரையில் பார்த்து பேசிடும் விடியோ அரட்டை வசதி தரப்பட்டுள்ளது. ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட், வைபர் மற்றும் பேஸ்டைம் போன்ற வசதிகளுடன் போட்டியிடும் வகையில், பேஸ்புக் தன் மெசஞ்சரில் இந்த வசதியை வழங்கியுள்ளது.
சென்ற ஏப்ரல் 27ல், இந்த வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் போன்களில் தரப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட 18 நாடுகளில் தரப்பட்டு வருகிறது. படிப்படியாக மற்ற நாடுகளில் விரைவில் இந்த வசதி அமல்படுத்தப்படும். இந்த வசதியின் செயல்பாட்டில், மற்றவற்றில் இல்லாத அம்சம் ஒன்றுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். உள்ள மொபைல் போன்களை இயக்கும் நண்பர்கள், அவற்றின் மூலமே, தொடர்பு கொண்டு இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போன் வைத்துள்ளவர்கள், ஐ.ஓ.எஸ். போன் உள்ளவர்களுடனும், அதே போல ஐ.ஓ.எஸ். உள்ளவர்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் போன் கொண்டவர்களுடனும் காணொளி உரையாடலை மேற்கொள்ளலாம்.
இந்த வசதியை இயக்க, மெசஞ்சர் தரும் விண்டோவில், மேல்புறம் வலது பக்கம் உள்ள கேமரா ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். முதலில் எந்த நண்பருடன் பேச வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர், விடியோ கேமரா ஐகானை அழுத்த வேண்டும். அழைப்பு அனுப்பப்பட்டு, அவர் போனை இயக்கியவுடன். திரையில் உங்கள் நண்பர் தெரிவார். ஸ்கைப், பேஸ்டைம் போன்றவற்றில் பேசுவது போல இதில் பேசலாம். அல்லது, நண்பர் ஒருவருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று, டெக்ஸ்ட் அனுப்புவதைக் காட்டிலும் அவருடன் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று கருதினால், இணைப்பைத் துண்டிக்காமல், மேலாக வலதுபுறம் உள்ள விடியோ கேமரா ஐகானைத் தட்டினால் போதும்.
இந்த வசதி இரு ஸ்மார்ட் போன்களுக்கிடையே தான் கிடைக்கும். பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மொபைல் போனுக்கு இணைப்பினை ஏற்படுத்த முடியாது. ஆனால், விரைவில் இந்த வசதியையும் தரத் திட்டமிட்டு இருப்பதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது. ஏனென்றால், இந்த இரு வேறு சாதனங்களில் இந்த வசதி ஸ்கைப், பேஸ்புக் ஆகியவற்றில் கிடைக்கிறது.
மாதந்தோறும் 60 கோடி பேர் தங்களுடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள பேஸ்புக் மெசஞ்சரைப் பயன்படுத்துவதாகவும், இனி அவர்களின் அனுபவத்தில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. இந்த வசதி, மிக விரைவாகவும், தெளிவாகவும் தரப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வசதி இன்னும் தரப்படவில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் நீட்டிக்கப்படும். இந்தியாவில், பேஸ்புக் பயன்படுத்துவோர் 12 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 10 கோடி பேர் மொபைல் போன் வழி, பேஸ்புக் மெசஞ்சரைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வசதி தரப்படுகையில், நிச்சயமாக மொபைல் வழி பேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இன் டர்நெட் கட்டணம் தவிர, வேறு எந்தவிதக் கட்டணமும் இன்றி, விடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது, வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமையும்.
ஆனால், இந்தியாவில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்கள், இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் தரும் 3ஜி விடியோ வசதியைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், இனி, மெசஞ்சர் போன்ற செயலிகளைக் கட்டணம் இன்றிப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். அது இந்த தகவல் தொடர்பு நிறுவனங்களின் வருமானத்தில் இழப்பை ஏற்படுத்தும். அதனால் தான், ஏர்டெல் மற்றும் பிற நிறுவனங்கள், “ ஒரே சேவைக்கு ஒரே சட்டதிட்டம்” (“Same Service, Same Rules”) என வலியுறுத்தி வருகின்றனர். இது போல அழைப்புகளை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களின் வருமானத்தில், மொபைல் சேவை நிறுவனங்கள் பங்கு கேட்கின்றனர். அவர்களுக்குப் பங்கு தருவதான ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொண்ட பின்னரே, இது போன்ற அழைப்பு இணைப்புகளுக்கு, அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
ஆனால், வாடிக்கையாளர்கள் இந்த வாதத்தினை வேறு விதமாக எதிர்கொள்கின்றனர். மொபைல் சேவை நிறுவனங்கள் இவ்வாறு கேட்பது, இணையத்தினைக் கட்டற்ற வகையில் பயன்படுத்தும் உரிமைக்கு எதிரானது என்று கூறுகின்றனர். டேட்டா இணைப்பிற்குக் கட்டணம் செலுத்திய பின்னர், இணையம் தரும் வசதிகளைப் பயன்படுத்துவது என்பது பயனாளர்களின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். அதனை வரைமுறைப்படுத்தி, கட்டணம் வசூல் செய்வது கூடாது. அது சுதந்திரமான இணையப் பயன்பாட்டிற்குத் தடையாய் இருப்பதுடன், இணையத்தின் துணையுடன் பல கூடுதல் நிலைகளைக் கண்டு வரும் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாய் இருக்கும் என்கின்றனர். அதனால் தான், ட்ராய் அமைப்பு இது குறித்து கருத்து கேட்டபோது, மிகப் பெரிய அளவில் அதற்கு மின் அஞ்சல்கள் மூலம், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும், மொபைல் சேவை நிறுவனங்களின் வருமானம் எந்த வகையிலும் குறையவில்லை என்றும், ஒரு வாடிக்கையாளர் வழி கிடைக்கும் வருமானம், ஆண்டு தோறும் உயர்ந்து வருவதாகவும் எடுத்துக் காட்டியுள்ளனர். சென்ற ஆண்டைக் காட்டிலும், சராசரி இந்தியர் ஒருவர், மாதந்தோறும் ரூ. 235 செலவு செய்கின்றனர். மொபைல் வழி
இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 63% பேர், மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.550 வரை செலவழிக்கின்றனர். நான்கில் ஒரு பங்கு பயனாளர்கள், ரூ. 500 முதல் ரூ.1,100 வரை செலவழிக்கின்றனர். எனவே, வருமானம் குறைவு என்பது சரியல்ல என்பது மக்களின் வாதமாய் உள்ளது. இந்த போராட்டத்தில், பேஸ்புக் மெசஞ்சர் தரும் விடியோ வசதி நிச்சயம் கூடுதலாக வெறுப்பை, மொபைல் சேவை நிறுவனங்களுக்கு அளிக்கும்.
ஸியாமி நிறுவனத்தில் டாட்டா முதலீடு: சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஸியாமி நிறுவனத்தில், இந்தியப் பெருந் தொழிலதிபரான ரத்தன் டாட்டா, முதலீடு செய்துள்ளார். எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது அறிவிக்கப்படவில்லை. ஸியாமி, உலக அளவில், ஸ்மார்ட் மொபைல் போன் தயாரிப்பில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் 4% பங்கினை ஸியாமி கொண்டுள்ளது.