எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (13) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (13)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2015
00:00

காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகையாக ஒப்பந்தமானார் எம்.என்.ராஜம். கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு தெரிந்த பெண்ணான அவர், டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், அவருக்கு, ராதாவைப் பற்றி எதுவும் தெரியாது. சினிமா வாய்ப்பு கிடைக்கிறதே என்று ஒப்புக்கொண்டார்.
ரிகர்சல் எல்லாம் இல்லை. நேராக ஷாட்டுக்குச் சென்று விட்டனர். நவநாகரிக மோகன், காந்தாவுடன் பூங்காவில் உல்லாசமாகப் பேசியபடி வரும் காட்சிதான், முதலில் எடுக்கப்பட்டது. ராதாவின் நாடகங்கள் எதையும் பார்த்திராத, அவரது நடிப்பாற்றலை அறிந்திராத ராஜம் இயல்பாக நடித்தார். அதுவே, இயக்குனர்களுக்கு போதுமானதாக இருந்தது.
ஒரு நாள் ராதா, ராஜத்தை அழைத்து, 'நீ... காந்தா கேரக்டரில் நல்லா நடிக்கணும்; இது, உனக்கு ரொம்ப நல்ல பேர வாங்கி தரப் போற கேரக்டர். நான் கஷ்டப்பட்டு நடிச்சு, நீ பேசாம இருந்தா, 'என்ன இவரு இந்த அளவுக்கு நடிக்குறாரு; இந்தப் பொண்ணு நடிக்கவே இல்ல'ன்னு சொல்லுவாங்க ஆடியன்ஸ். அதனால, நீ எனக்கு சமமா நடிக்கணும். ராதாவா, ராஜமான்னு மக்கள் பேசணும்...' என்றார்.
'சரிண்ணே...' என்று தலையாட்டினார் ராஜம்.
மோகனை, காந்தா படியில் இருந்து எட்டி உதைக்கும் காட்சி படமாக்கப்படவிருந்தது. காட்சியைக் கேட்டதுமே, ராஜத்துக்கு என்னவோ போலாகிவிட்டது. தயங்கி தயங்கி ராதாவிடம் போய் நின்றார்.
'என்னம்மா... ஷாட்டுக்குப் போகலாமா?' என்று கேட்டார் ராதா.
'அண்ணே... நீங்க மூத்த நடிகர்; நான் சின்னப் பொண்ணு. நான் எப்படி உங்கள எட்டி உதைக்கிறது...' என்று தயக்கத்துடன் .சொன்னார் ராஜம்.
'கேமராவுக்கு முன் நீ ராஜம் இல்ல; நான் ராதா இல்ல. நீ காந்தா; நான் மோகன். இது படத்துல வர்ற காட்சி. கதைப்படி நீ எட்டி உதைக்கணும்...' என்றார்.
'என்னால முடியாதுண்ணே...' என்று, தர்ம சங்கடத்துடன் சொன்னார் ராஜம்.
கிருஷ்ணன், பஞ்சுவிடம் வந்த ராதா, 'அந்தப் பொண்ணு என்னை எட்டி உதைக்கிற இந்த சீனை எடுக்கலன்னா, நான், நடிக்க மாட்டேன்...' என்று கறாராகச் சொல்லி விட்டார்.
ராஜத்திடம் சென்ற பஞ்சு, 'இங்க பாரும்மா... இவ்வளவு நாள், நீ கஷ்டப்பட்டு நடிச்சிருக்க... படமும் நல்லா வந்திருக்கு; உனக்கும் நல்ல பேரு கிடைக்கப் போகுது. இப்போ நீ இந்த ஒரு சீன்ல நடிக்க மாட்டேன்னு சொன்னா படத்துல இருந்தே, உன்னை தூக்கிருவாங்க; என்ன சொல்லுற...'என்றார்.
சினிமாவுக்குள் வரும் ஒவ்வொருவருமே, உயரத்துக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் வருவர். அந்தக் கனவைச் சிதைய விடுவார்களா என்ன... உதைப்பதற்கு ஒப்புக் கொண்டார் ராஜம்.
காட்சிக்கு தயாராயினர். 'ரிகர்சல் எல்லாம் வேணாம்; நேரா ஷாட்டுக்குப் போயிடலாம்...' என்றார் ராதா.
ராஜம் எட்டி உதைத்தார்; ராதா விழவில்லை. பதற்றத்தோடு உதைத்ததால், ராஜம் தான் தடுமாறி விழுந்தார்.
'இங்க பாரும்மா... நீ, என்னை, 10 தடவை உதைக்கிறதுக்கு பதில், ஒரே தடவை உதை; ஆனா, பலமா உதை...' என்று சொல்லி, 'ரெடி' என்றார்.
இம்முறை வேகமாக எட்டி உதைத்தாள் காந்தா. படிகளில் உருண்டு விழுந்தான் மோகன். 'ஷாட்' ஓ.கே., ஆனது. ராதாவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் ஒழுகியது. பதறிய ராஜம், ராதாவிடம் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டார்.
'ஒரு நடிகையா, காட்சிக்கு வேண்டியதைத்தான் செஞ்சிருக்க. இதுல, உன் தப்பு ஒண்ணுமில்லையே... நீ நல்ல நடிகையா வருவே...' என்று கூறி ஆசிர்வாதம் செய்தார் ராதா.
படத்தின் கிளைமாக்சில் மோகன், தன் மனைவி சந்திராவை, நண்பன் பாலுவிடம் கைப்பிடித்துக் கொடுப்பது போன்ற காட்சி இருக்கும்.
இக்காட்சி படத்தில் இடம்பெற்றால், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, சர்ச்சை ஏற்படுமே... சமுதாயச் சீர்கேடு என்று குதிப்பார்களே என்று இயக்குனர்கள் தயங்கினர்.
'இதுதான் கிளைமாக்ஸ்; இக்காட்சியை வைக்காவிட்டால், மேற்கொண்டு நடிக்க மாட்டேன்...' என்று கறாராகச் சொல்லிவிட்டார் ராதா. இப்பிரச்னையிலேயே, சில மாதங்கள் படப்பிடிப்பு நின்றுபோனது. பின், ராதாவின் விருப்பப்படியே கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது.
மொத்தமாக இரண்டு ஆண்டுகள் ஓடிப் போயிருந்தது.
'என்ன... நேஷனல் பிக்சர்காரங்க ரத்தக்கண்ணீர் வடிக்கிறாங்களாமே...' என்று எல்லாரும் கேலி பேசிய சமயத்தில், 'தென்னாட்டுத் திரை வரலாற்றில் மீண்டும் ஒரு பொன்னேடு; நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும், ரத்தக்கண்ணீர் தீபாவளித் திருநாள் முதல்...' என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வருமா வராதா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கும், ஓர் எதிர்பார்ப்பு உண்டானது.
'அண்ணே... படத்தோட பேரு, 'இரத்தக் கண்ணீர்'ன்னு,'ர'வுக்கு முன், 'இ' சேர்த்துக்கலாம்ண்ணே...' என்று ராதாவிடம் கேட்டார் ஒருவர்.
'எதுக்கு?'
'இல்ல... 'ரத்தக்கண்ணீர்' எட்டெழுத்து; சரிவராது. 'இ' சேர்த்தா ஒன்பது எழுத்து; ராசி. படம் நல்லா ஓடும்...'
'போடா... அதெல்லாம் மாத்த முடியாது; அப்புறம் பகுத்தறிவுக்கு என்ன மரியாதை. ரத்தக்கண்ணீர் தான்...'
கடந்த, நவ., 6, 1954 தீபாவளி அன்று, ரத்தக்கண்ணீர் வெளியானது. ஆர்வமாக டாக்கீசுக்குப் போனார் பெருமாள். பாதியிலேயே வீட்டுக்கு வந்து, கவலையுடன் படுத்து விட்டார். காரணம், படம் பார்த்து வெளியே வந்தவர்கள் முகத்தில், எந்தவொரு மகிழ்ச்சிக் கோடுகளும், தென்படவில்லை. ரசிகர்களிடமிருந்து, அவர் நிறைய எதிர்பார்த்தார். ஆனால், சலனமில்லாமல் மக்கள் வெளியேறுவதைக் கண்டு, துவண்டு போனார்.
ஆனால், மெல்ல மெல்ல, ரத்தக்கண்ணீர் படத்தை மக்கள் விரும்ப ஆரம்பித்தனர். மாலை நேரத்துக் காட்சிகளில், கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. பத்திரிகைகள் பாராட்டின. ஒருமுறை படம் பார்த்தவர்கள் மறுமுறை, இன்னொரு முறை என்று தியேட்டருக்கு வந்தபடியே இருந்தனர். புரட்சிகரமான கிளைமாக்ஸ் முதலில், 'சலசல'ப்பை ஏற்படுத்தினாலும், நாளடைவில் அதற்காகவே, அப்படம் வெற்றி பெற்றது என்று சொல்லுமளவுக்கு மாறியது.
அச்சமயத்தில், ஈ.வெ.ரா., சினிமாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை பரப்பி வந்தார். அந்த கருத்துகளின் தாக்கத்தால், சினிமா துறை கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தது. இந்நிலையில், ரத்தக்கண்ணீர் படத்தைப் பார்த்த ஈ.வெ.ரா., 'சினிமாப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்ல; ஆனால், சில சந்தர்ப்பங்களில் ஒருசில படங்களை பார்த்துள்ளேன். அதில், ரத்தக்கண்ணீர் ஒன்று!
'நாடகத்தில் நடித்து மக்கள் ஆதரவைப் பெற்ற தோழர் ராதா, குஷ்டரோகியாக திறம்பட நடித்து, சினிமாவிலும் தன்னை நிரூபித்து விட்டார்...'என்று கருத்து தெரிவித்தார். படப்பிடிப்பில், ராதா சரியாக ஒத்துழைக்காத போது, ஈ.வெ.ரா.,வை பெருமாள், சந்தித்ததாகவும், பின், அவர் சொன்னதன்படி, ராதா படத்தை முடித்து கொடுத்தாகவும் ஒரு தகவல் உண்டு. ரத்தக்கண்ணீர் வெற்றிக்கு ராதா கூறிய கமென்ட்...
தொடரும்.

ராதாவுக்கு இயல்பாகவே கரகரப்புக் குரல். படத்தில் தேவைக்கேற்ப இரண்டு, மூன்று டோன்களில் பேசுவதை ஸ்டைலாக மாற்றிக் கொண்டார்.

* நாடகத்தில் போலீஸ் வருவது போல் காட்சி இருக்கும். அப்போது, ராதாவுடன் நடிப்பவர் பயப்படுவது போல நடிப்பார். உடனே, ராதா, 'ஏன்டா பயப்படுறே... போலீஸ்ன்னா என்ன பெரிய கொம்பா... (ரசிகர்களை பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கானுக; பாரு... காசு கொடுத்தவன் எல்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்...' என்பார். ராதாவின் இந்த நக்கலைக் கேட்டதும், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் நைசாக எழுந்து பின்பக்கம் செல்வர்.
* திருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டுத் தோட்டத்தில், ராதாவுக்கு நினைவு மண்டபம் உள்ளது. அந்த வீட்டில் அவர் நாடகத்துக்கு பயன்படுத்திய பொருட்கள், 'சாட்டின்' படுதாக்கள் எல்லாம் உள்ளன.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
முகில்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X