கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2015
00:00

கேள்வி: அடிக்கடி வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கும் பணி எனக்கு. இதில் மிகப் பெரிய அளவில் டேபிள்களை அமைக்கையில், அவை மார்ஜின் இடத்தையும் எடுத்துக் கொள்கின்றன. மார்ஜின் இடத்திற்குள் வரும் வகையில், டேபிள்களை அமைப்பதற்கான வழிகள் இருந்தால், தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. திருமலை, கோவை.
பதில்:
அமைக்கப்பட்ட டேபிளில், ஏதேனும் ஓர் இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட், காண்டெக்ஸ்ட் மெனு ஒன்றைக் காட்டும். இதில் AutoFit என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது இன்னொரு துணை மெனு ஒன்றைக் காட்டும். அடுத்து இதில் உள்ள AutoFit to Window என்பதில் கிளிக் செய்திடவும். இவ்வாறு செய்திடுகையில், அனைத்து செல்களும், ஒரே அகலத்தில் உருவாக்கப்பட்டு, டேபிள் மார்ஜின் இடத்திற்குள் அமைந்துவிடும்.

கேள்வி: வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களை அடிக்கடி தயார் செய்கிறேன். என் அலுவலகப் பணியில், பணி சார்ந்து நிறைய சுருக்க சொற்களை (Abbreviations) பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றைப் பயன்படுத்துகையில், வேர்ட் அவற்றின் இறுதியில் உள்ள புள்ளியைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அது வாக்கியத்தின் இறுதி என எடுத்துக் கொண்டு, வாக்கிய இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்திற்குச் செல்கிறது. என்ன செய்தாலும், மாறவில்லை. சுருக்க சொற்களைப் பயன்படுத்துகையில் கட்டாயம் இறுதியில் புள்ளி அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு என்ன?
ஆ. ஸ்ரீராமன், ஹோசூர்.
பதில்:
நல்ல கேள்வி. இந்த பிரச்னை உள்ளவர்கள் பலர், இதற்குத் தீர்வினைத் தேடாமல் சமாளித்துச் சென்றிருப்பார்கள். நீங்கள் நிறைய சுருக்க சொற்களைப் பயன்படுத்துவதால், தீர்வுக்கான தேடலைத் தொடங்கியுள்ளீர்கள். இதோ அதற்கான வழி.
வேர்ட் நாம் டாகுமெண்ட்களில் அமைக்கும் சுருக்கு சொற்களை (abbreviations)த் தொடர்ந்து கவனித்து வந்து கொண்டே இருக்கும். ஆனால், அவற்றைச் சுருக்கு சொற்களாக எடுத்துக் கொள்ளாமல், விதிவிலக்குகளாக (Exceptions) எடுத்துக் கொள்ளும். எதற்கான விதிவிலக்கு என உங்கள் மனதில் கேள்வி எழலாம்? இது AutoCorrect என்ற பிரிவில் வருகிறது. வேர்ட், இறுதிப் புள்ளியை வாக்கியத்தின் முடிவாகத்தான் எடுத்துக் கொள்ளும். நம் சுருக்க சொற்களை விதிவிலக்குகளாகக் காட்டிவிட்டால், இந்த முடிவினை எடுக்காது. அதற்கான வழிகள்:
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். ஆபீஸ் பட்டன் அழுத்தி, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் உள்ல proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து AutoCorrect என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. இங்கு கிடைக்கும் பகுதியில் Exceptions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். வேர்ட் AutoCorrect Exceptions டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
5. கிடைக்கும் சிறிய கட்டத்தில் First Letter என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
6. இங்கு "exceptions" எனக் காட்டப்பட்டிருப்பது அனைத்தும் சுருக்கு சொற்களின் பட்டியலே. இந்த பட்டியலில் நீங்கள் புதியதாகச் சேர்க்க வேண்டியவற்றை, டைப் செய்து Add பட்டன் கிளிக் செய்து இணைக்கலாம். இதில் சிறிய, பெரிய (uppercase or lowercase) என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, dR. / dr. எனச் சுருக்குச் சொல் இருக்கலாம். இது போல நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை இணைக்கலாம். இந்த டயலாக் பாக்ஸின் கீழாக Automatically Add Words to List என ஒரு செக் பாக்ஸ் இருக்கும். இது நமக்காக சொற்களைச் சேர்க்கும் வசதி ஆகும். நீங்கள் ஒரு சுருக்குச் சொல்லை, அதன் இறுதிப் புள்ளியுடன் டைப் செய்கிறீர்கள். வேர்ட் அதனை இந்தப் பட்டியலில் இல்லை என்றால், அது வாக்கிய முடிவு என்று எண்ணிக் கொண்டு, அடுத்த வாக்கியத்திற்கான பெரிய எழுத்துடன் தொடங்கும். நீங்கள் பேக் ஸ்பேஸ் அழுத்தி, புள்ளியை அடுத்து டைப் செய்திடத் தொடங்கினால், வேர்ட் அதனைப் புரிந்து கொண்டு, தானாகவே, சுருக்குச் சொற்கள் பட்டியலில் சேர்த்துவிடும்.

கேள்வி: என் எக்ஸெல் புரோகிராமில், முன்பு ஒர்க் ஷீட் தயாரித்த பின்னர், சில நெட்டுவரிசை அல்லது படுக்கை வரிசைகளைத் தேர்ந்தெடுத்தால், அந்த செல்களில் உள்ள எண் மதிப்புகள் கூட்டப்பட்டு, ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். சில நாட்களாக இது காட்டப்படவில்லை. இது எதனால் ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. இதனை எப்படி சரி செய்திடலாம். இந்த வசதி பல வகைகளில் உதவியாய் இருந்தது.
என். கே. கலியபெருமாள், கோவை.
பதில்:
எக்ஸெல் பலவகையான தகவல்களை உங்கள் ஒர்க் ஷீட் ஸ்டேட்டஸ் பாரில் தரும். எவற்றைக் காட்ட வேண்டும் என்பதனை நாம் தான் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். எண்களின் கூட்டல் மட்டுமின்றி, மேலும் பல முடிவுகளையும் பெறலாம். ஸ்டேட்டஸ் பாரில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் ஒரு காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Average, Count, Sum போன்ற இன்னும் பிற காட்டப்படும். இவற்றில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களைப் பொறுத்த வரை Sum என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு குறிப்பிட்ட நெட்டு வரிசையில் இடப்படும் எண்களுடன், குறிப்பிட்ட வகை கரன்சி அடையாளம், எ.கா. அமெரிக்க டாலர் குறியீடு, அமைக்கலாம். ஆனால், வேர்டில் அது போன்ற ஒரு வசதி கிடைக்கவில்லை. இது இல்லையா? அல்லது என்னால் அமைக்க முடியவில்லையா? இருப்பின் தெளியப்படுத்தவும்.
சி.என்.பழமலை, கும்பகோணம்.
பதில்:
நல்ல ஒப்புமை கேள்வி. வேர்டிலும் இந்த வசதியினைத் தந்திருக்கலாம். ஆனால், துரதிருஷ்டமாகத் தரப்படவில்லை என்பதே உண்மை. இந்த வகையான பார்மட்டிங் வசதி இல்லை. இருப்பினும், சற்று சிரமம் எடுத்து இதனை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, வேர்டில் உள்ள டேபிள் செல் ஒன்றில், 65 மற்றும் 78 என எண்களை அமைத்திருக்கிறீர்கள். இவற்றுடன், டாலர் குறியீட்டைச் சேர்க்க எண்ணுகிறீர்கள். கீழ்க்கண்டுள்ளபடி செயல்படவும்.
1. வேர்ட் டேபிளின் எந்த செல்லில் எண்கள் உள்ளனவோ, அதில் கர்சரை நிறுத்தவும்.
2. Ctrl+F9 அழுத்தினால் ஒரு ஜோடி நெளிவான அடைப்புக் குறிகள் கிடைக்கும்.
3. தொடர்ந்து சமக்குறியீடு (=) டைப் செய்து, அதன் பின் எண்களை (65,78) டைப் செய்திடவும்.
4. பின்னர், ஒரு ஸ்பேஸ் கொடுத்து, அதன் பின்னர், \# டைப் செய்து, இன்னொரு ஸ்பேஸ் தரவும். இந்த அடையாளங்களை ஸ்விட்ச் என்று சொல்கிறோம். இந்த ஸ்விட்ச்கள் வேர்ட் புரோகிராமிடம், இந்த எண்களை நீங்கள் பார்மட் செய்து அமைக்க விரும்புகிறீர்கள் எனக் கூறுகிறது.
5. இப்போது எந்த வகை பார்மட் என்பதை அமைக்க வேண்டும். அவற்றை மேற்கோள் குறிகளுக்குள் அமைக்க வேண்டும். உங்களுடைய தேவைப்படி, இங்கு "$#,###.00" என அமைக்க வேண்டும்.
6. தொடர்ந்து Shft+F9 அழுத்தவும். இது பீல்டை முழுமையாக்கும்.
7. இதே போல தொடர்ந்து எண்களை அமைக்கலாம்.

கேள்வி: சென்ற இதழில், கேள்வி ~ பதில் பகுதியில், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பல வகை உள்ளது என விரிவாகத் தந்திருந்தீர்கள். தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தன. விண்டோஸ் 8 சிஸ்டத்திலும் இது போல பல வகைப் பதிப்புகள் உள்ளனவா? அவை என்ன?
தெ. மாரியப்பன், சிவகாசி.
பதில்:
நல்ல கேள்வி. அது கேள்வி பதில் பகுதி என்பதால், விண்டோஸ் 8 குறித்தும் தகவல்களைத் தரவில்லை. தேவையற்றதாகி விடும். வாசகர்கள் ஏன் இவை எல்லாம் என்று எண்ணிவிடவும் வாய்ப்புண்டு. இப்போது நீங்கள் கேட்டிருப்பதனால் சொல்கிறேன்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஆறு வகைத் தொகுப்புகள் உள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நான்கு வகை உள்ளன. விண்டோஸ் ஆர்.டி. ~ இது டேப்ளட் பி.சி.க்களுக்கான, குறைக்கப்பட்ட விண்டோஸ் பதிப்பு. இது விண்டோஸ் டெஸ்க்டாப் புரோகிராம்களை இயக்க முடியவில்லை என்பதால், அது உருவானதற்கான இலக்கை ஈட்டவில்லை என்பதால், வெற்றியடையாத பதிப்பாகக் கருதப்பட்டது. இதனைப் பயன்படுத்திய பலர் இதனை விரும்பவே செய்தனர். மைக்ரோசாப்ட், பின்னர், டேப்ளட் பி.சி.க்களுக்கான முழு பதிப்பினை உருவாக்கியது.
விண்டோஸ் 8, வீடுகளில் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தியவர்களை இலக்காகக் கொண்டது. விண்டோஸ் 8 ப்ரோ (Windows 8 Pro) என்ற பதிப்பு வகை, வர்த்தக நிறுவனங்களுக்கும், கூடுதல் வசதிகள் கொண்ட சிஸ்டத்தை வீடுகளில் பயன்படுத்தியவர்கள் எதிர்பார்த்தால், அவர்களுக்காகவும் தயாரிக்கப்பட்டது. 'விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ்' என்ற பதிப்பு, வர்த்தக நிறுவனங்களாகச் செயல்படும் வாடிக்கையாளர்கள் மற்றும் நெட்வொர்க் சூழ்நிலையில் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
இதன் பின்னர், விண்டோஸ் 8.1 மற்றும் அதன் பின்னர், 8.1.1 என அழைக்கப்பட்ட மேம்படுத்தல்கள் ஆகியவற்றையும் சேர்த்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு 12 வெவ்வேறான வடிவமைப்புகள் இருப்பதைக் காணலாம்.
உங்களுக்கு ஒரு கேள்வி மனதில் எழலாம். அப்படியானால், வர இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எத்தனை வகையான பதிப்புகள் வரும். இதுவரை மைக்ரோசாப்ட் இது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், அனைத்து சாதனங்களுக்குமாய் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அல்லவா மைக்ரோசாப்ட் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதாவது விண்டோஸ் 10 எந்த சாதனத்தில் இயங்கினாலும், அதில் கிடைக்கும் அனுபவம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில், ஒரே வகை பதிப்புதான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஜூலை மாதம் விண்டோஸ் 10 வர உள்ளது. அப்போது பார்க்கலாம்.

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரை விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வருகிறேன். இது ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர். இணையத்தில் பிரவுஸ் செய்திடுகையில், பிரைவேட் ப்ரவுசிங் செய்திடு என்று என் நண்பர் கூறுகிறார். இது எதனைக் குறிக்கிறது? இதனை எப்படி பயர்பாக்ஸ் பிரவுசரில் மேற்கொள்வது?
என். லாரன்ஸ் சேவியர், புதுச்சேரி.
பதில்:
பிரைவேட் பிரவுசிங் என்பது, நாம் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பிரவுசரில் எந்த தகவலும் பதியப்பட மாட்டாது. தற்காலிகமாக இன்டர்நெட் பைல்கல், குக்கீஸ் மற்றும் படிவ டேட்டாக்கள் எவையும் பதியப்படுவதில்லை. இருப்பினும், பிரைவேட் பிரவுசிங் செய்கையில், உங்கள் நிர்வாகிஅல்லது முதலாளியிடமிருந்து அவற்றை மறைக்க முடியாது. அரசு அல்லது இணைய இணைப்பினை வழங்கும் ஐ.எஸ்.பி. நிறுவனங்களிடமிருந்தும் மறைக்க இயலாது.
நீங்கள் டவுண்லோட் செய்யப்படும் பைல்கள் அல்லது நீங்கள் ஏற்படுத்தும் புக்மார்க் ஆகியவை உங்கள் கம்ப்யூட்டரிலேயே பதியப்படும். இந்த சூழ்நிலையில் பயர்பாக்ஸ் பிரவுசரில், எப்படி பிரவுஸ் செய்திடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
1. பயர்பாக்ஸ் பிரவுசரை, உங்கள் டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருந்து திறக்கவும்.
2. பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கப்படும் வலது மூலையில் மூன்று கோடுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட தோற்றத்தினைத் தரும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது மெனு பார் ஒன்று எழுந்து வரும். இதில் பல ஆப்ஷன்கள் காட்டப்படும். “New Private Page” என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
4. ஒரு புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இது ஒரு புதிய பிரவுசர் ஆகும். இதன் மூலம் உங்களுடைய பிரவுசர் நீங்கள் பார்க்கும் தளம் எதனையும் பதிந்து கொள்ளாத வகையில் பிரவுஸ் செய்திடலாம்.
5. எப்போதும் பிரவுஸ் செய்வதைப் போல இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும். பிரவுசிங் முடிந்த பின்னர், அனைத்து விண்டோக்களையும் மூடிவிடவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X