31 வயதை எட்டிய பேஸ்புக் மார்க்: பிரதமர் வாழ்த்து
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

உலகின் மிகச் சிறந்த சமூக இணைய தளமாகிய “பேஸ்புக்” இணைய தளத்தை உருவாக்கி உலகிற்கு வழங்கிய மார்க் ஸக்கர்பெர்க், மே 14ல் தன் 31 வயதை எட்டியுள்ளார். பெரும்பாலான மக்களின் நட்பு வட்டத்தை விரிவாக்கி, ஒருவருக்கொருவர் தகவல்களையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்ள அடித்தளம் வகுத்த இவருக்கு நம் பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“மார்க், உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுடைய புதியது புனையும் திறன், இந்த சமுதாயத்தில் ஆழ்ந்த தாக்கத்தினையும் விளைவினையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. நீங்கள் இந்த உலகிற்கே ஒரு தூண்டுகோலாய், முன்மாதிரியாய் விளங்குகிறீர்கள். சில மாதங்களுக்கு முன்னால் நமக்கிடையே ஏற்பட்ட சந்திப்பை அன்புடன் இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன். நல்ல நலத்துடன் நீண்ட ஆயுள் பெற உங்களை வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறேன்” என்று, பிரதமர் மோடி தன் வாழ்த்தினைப் பதிந்துள்ளார்.
தன் 23 ஆம் வயதில், உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்தவர் மார்க். C++ for Dummies என்ற நூலை இவர் தந்தை இவருக்குப் படிக்க அளித்த நாளிலிருந்து இவர் புரோகிராமராக உருவானார். தன் 12 ஆவது வயதில் Atari BASIC என்னும் புரோகிராமிங் மொழியைப் பயன்படுத்தி மெசேஜ் பரிமாறும் செயலியை உருவாக்கினார். Zucknet என்னும் புரோகிராம் ஒன்றை தயாரித்து தன் தந்தைக்கு வழங்கினார். அவர் தந்தையின் பல் மருத்துவமனையின் காத்திருப்போர் அறையில், யாரேனும் வந்தால், இந்த புரோகிராம், அவர் தந்தைக்கு அறிவிக்கும்.
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, Synapse Media Player என்ற பெயரில் இசைக்கென ஒரு புரோகிராம் கட்டமைப்பினைத் தயாரித்து அறிமுகப்படுத்தினார். மைக்ரோசாப்ட் இது குறித்து ஆர்வம் காட்டி, பல லட்சம் டாலர் கொடுத்து அவரைத் தன் நிறுவனத்திற்கு இழுக்க முயற்சித்த போது, அதனைக் கண்டு கொள்ளவில்லை மார்க்.
2002 ஆம் ஆண்டில், ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின்னர், அவருடைய புரோகிராமிங் திறன் பலராலும் பாராட்டினைப் பெற்றது. FaceMash என்னும் இவரின் இணையதளம், ஹார்வேர்ட் பல்கலையில் மிகச் சிறந்த தோற்றம் கொண்டவரைத் தேர்ந்தெடுக்க என அமைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணம் கருதி, அந்த பல்கலைக் கழகம் அதனை நீக்கியது. பின் நாளில், இதே இணைய தளம் 30,201 டாலருக்கு விலை போனது.
பிப்ரவரி 2004ல், மார்க் thefacebook.com என்ற இணைய தளத்தை ஹார்வேர்ட் பல்கலை மாணவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பகிர்ந்து கொள்ள உருவாக்கினார். பின்னர், இந்த தளத்தின் பெயரில் இருந்த “the” என்ற சொல்லை எடுத்துவிட்டு, இன்றைய பேஸ்புக் தளத்தை வடிவமைத்தார். மார்க் பெயரில் பதிவு பெற்ற கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை 50க்கும் மேலாகும்.
“தேவைக்கதிகமாகத் தான் உழைப்பதில்லை” என்று மார்க் கூறினாலும், தன் இலட்சியமும் நோக்கமும் எப்போதும் உலக மக்கள் ஒவ்வொருவரும் தங்களை நட்பு ரீதியாக இணைத்துக் கொள்வது குறித்தும், இந்த சமுதாயத்திற்குத் தன்னாலான சேவையினை வழங்குவது குறித்துமே உள்ளது என்று ஒரு பேட்டியில் மார்க் கூறியுள்ளார்.
தன் 23 ஆவது வயதில், 2008 ஆம் ஆண்டில், உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 785 ஆவது இடத்தைப் பிடித்தார் மார்க். இன்று அவரின் சொத்து மதிப்பு 3340 கோடி டாலர். தற்போது உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் 16 ஆவது இடத்தைக் கொண்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டில், இவர் உலகிலேயே மிக மோசமாக உடை அணியும் நபர்களில் ஒருவராகப் பத்திரிக்கை ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடம்பின் அளவோடு ஒத்துப் போகாத ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிபவராக இவரைப் பட்டியலிட்டது. இது குறித்து மார்க் பேசுகையில்,” என்ன உடை உடுத்துவது, காலையில் என்ன சாப்பிடுவது என்பது குறித்தெல்லாம் முடிவு எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வது, வாழ்க்கையின் பொன்னான நேரத்தினை வீணடிப்பதாகும். என் நேரம் அனைத்தும், நான் வாழும் இந்த சமுதாயம் குறித்து சிந்திப்பதற்கே செலவழிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். ஒரே மாதிரியான டி ஷர்ட்களை நிறைய வைத்துள்ளதாகவும், அதனால், என்ன அணிவது என்று தேர்ந்தெடுக்கும் பிரச்னையே எழாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டில் மே 19 அன்று, தன் நிறுவனத்தின் தொடக்க காலத்தில் இணைந்த Priscilla Chan என்னும் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நூறு விருந்தினர்களே கலந்து கொண்ட இவர்கள் திருமணம், வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில், மிக எளிமையாக அரங்கேறியது. சீனத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த பெண்ணின் குடும்பத்தாருடன் பேசிப் பழகுவதற்காக, சீன மொழியைக் கற்றார். அதற்கு முன், ஹார்வேர்ட் பல்கலையில் சேரும்போது, தனக்கு ப்ரெஞ்ச், ஹீப்ரூஸ், இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும் என தெரிவித்துள்ளார். தன் மனைவிக்கு திருமண மோதிரத்தைத் தானே வடிவமைத்தார். நடுவில் ரூபியும், அதன் இரு புறமும் வைரமும் கொண்ட இதன் மதிப்பு 25,000 டாலர். அவருடைய செல்வ நிலைக்கு இது மிக சாதாரணம்.
மார்க் தந்தை எட்வர்ட் ஸக்கர்பெர்க் ஒரு பல் மருத்துவர். அவரின் அன்னை கரேன் உளவியல் மருத்துவர். மார்க், தர்ம சிந்தனை கொண்டவர். தன் வருமானத்தில் பெரும் பகுதியை சமுதாயத்தின் பல பிரிவினருக்கு உதவுவதற்காகத் தந்துள்ளார். 2010 ஆம் ஆண்டில், பில்கேட்ஸ் மற்றும் வாரன் ஆகிய உலகக் கோடீஸ்வரர்களுடன் இணைந்து Giving Pledge என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதில் கையெழுத்திடுவதன் மூலம் தன் வருமானத்தின் பெரும் பகுதியை உலகின் தர்ம காரியங்களுக்காகத் தந்திட மார்க் உறுதி தந்துள்ளார். அவரை நாமும் வாழ்த்துவோம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X