எல்லாப் பூக்களும் எனக்கே! (தொடர் கதை)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2010
00:00

- மதுனிகா ராணி
தொடர் - 21
முன்கதைச் சுருக்கம்!
நேசிகாவின் வேண்டுகோள்படி ஆண் வேடமணிந்து, யாத்ரா முன் நடித்து வந்த நேசிகாவின் தங்கை செண்பக குழல் வாய்மொழி, தன் வேடத்தை கலைத்து, ரீனா என்ற பெயரில், யாத்ராவை சந்தித்தாள். தான் டென்மார்க் நாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், யாத்ராவை காதலிப்பதாகவும் கூறினாள்.செண்பா யாத்ராவிடம் பேசிவிட்டு போவதை, நேசிகாவும், அவளது மூத்த தங்கை நீலக்கடலும் பார்த்தனர்.


இனி —
நீலக்கடலும், நேசிகாவும் செண்பா படுத்திருக்கும் படுக்கையறைக்குள் நடந்தனர். குப்புறப்படுத்திருந்த செண்பா, இரு கால்களை உயர்த்தி, ஆட்டிக் கொண்டிருந்தாள். நைட்டி விலகி, கெண்டைக்கால் தசை தெரிந்தது. இரைச்சலாக, "விண்ணைத் தாண்டி வருவாயா' பாடல்களை, பாடிக் கொண்டிருந்தாள்.
""டீயேய் செண்பா!''
""அடியே... கொள்ளிவாய் பிசாசே!''
அசைந்து கொடுக்கவில்லை செண்பா. இன்னும் ஏழெட்டுத் தடவை கள் கூப்பிட்டும் பயனில்லாமல், ஆளுக்கொரு தலையணை எடுத்து செண்பாவை மொத்தி எடுத்தனர்.
வாரி சுருட்டி எழுந்து, சம்மண மிட்டு அமர்ந்தாள் செண்பா.
""எதுக்குடி அடிக் றீங்க... உங்க சோத்ல மண்ணை அள்ளி, கிள்ளி போட்டேனா... எதுக்குடி அடிக்றீங்க?''
""தெரியாத மாதிரி கேக்காத. உன் பெயர் ரீனாவா, நீ டென்மார்க்கில் வசிக்கிறாயா? அவனுக்கு முத்தம் கித்தமெல்லாம் குடுத்து அளப்பறை பண்ணிருக்க!''
""நடிக்க வந்தாச்சு. அப்புறம் டபுள் ஆக்ஷன் போட யோசிக்கலாமா? உன்னை ஒண்ணும் நான் காட்டிக் குடுக்கலையே... உனக்காக ஊமை செண்பகராமன் ரோல்; எனக்காக ரீனா ரோல்.''
""இது பச்சைத் துரோகம்!''
""நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லு... இத்னி நாளா அவன் கூட பழகிட்டு வர்றியே... என்னை மாதிரி தில்லா ஒரு முத்தமாவது குடுத்திருக்கியா? பர்ஸ்ட் அவுட்டிங்கிலேயே நான், ரெண்டு உம்மா குடுத்திட்டேன். அடுத்த அவுட்டிங்குல பாரு... நான் பிள்ளைக்கு சோறூட்ற அம்மா காரி மாதிரி. ஊட்றதை திங்க, அடம் பிடிக்கும்தான் குழந்தை. அப்படி இப்படி போக்கு காட்டி, ஒரு கவளத்தை ஊட்டி விட்டோம்ன்னா, முழு கிண்ணத்தையும் காலி பண்ணிடும் குழந்தை.''
""ரொம்ப பேசுறடி!''
""நான் முத்தம் குடுத்துட்டு வந்திட்டேன். இன்னைக்கி நைட் தூங்குவான்ற... என்னதான் வேதாந்தம் பேசினாலும், யூத் யூத்துதானே? நீல கலர்ல செக்சி கனவுகள் காண்பான். மனசை, உடம்பு வெல்லும். நாளைக்கு வரும்போது, இரண்டாவது நாள் பீர் குடிக்கும் புது குடிகாரன் போல வருவான். அகஸ்மாத்தா குனிஞ் சான்னா, பச்ன்னு ஒரு முத்தத்தை பின்னங் கழுத்ல வச்சிடுவேன். மூணாவது நா, நாலாவது நா எல்லாம் என் முத்த வியூகம் வேற வேற மாதிரி தாவும். மரபு சார்ந்த யுத்தங்களை விட, கொரில்லா யுத்தத்தில் வெற்றி நிச்சயம். எதிராளியை நிலைகுலைய வைக்க, நம்மிடம் ஒரு திகைப்பு மூலக்கூறு ஒளிந்திருக்க வேண்டும். ஒரு எறும்பு கூட என்னிடம் ரெண்டு யானைகள் அடியாட்களாக இருக்கின்றன என்ற பம்மாத்தை காட்டினால், எறும்புடன் மோதும் சிங்கத்துக்கு கூட ஒரு பயம் தொற்றும்.''
""வாய பொத்துடி!'' நீலக்கடல்.
""கடல்! நீ ஏன் நேசி கூட வந்து என்னை கண்டிக்ற? நீ தனியா யாத்ராவை ட்ரை பண்ணிக்கிட்டுதான இருக்க? சில நாட்களுக்கு முன், நீ அவன் கூட கொஞ்சலையா?''
""போட்டுக் குடுக்றியாடி?''
""இவ சொல்றது நிஜமா கடல்?''
""சும்மா போரடிச்சதுன்னு பேசி னேன்!''
""ம்ஹூம்... இது ஆவுற கதையில்ல... வீட்டுக்குள்ளேயே நம்பிக்கை துரோகம். சரி, தனித்தனியா மூணு பேரும் அவனை ட்ரை பண்ணுவம். ஓபனிங் பேட்ஸ்மேன் சேவாக் இல்லை நான். தடார் புடார்ன்னு ரெண்டு ஓவர் அடிச்சிட்டு அவுட்டாக. நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தோனி மாதிரி. நின்னு நிலைச்சு ஆடுவேன்.''
""சேலஞ்ச்?'' செண்பா.
""ஓ.கே., சேலஞ்ச்!'' என்றனர் கடலும், நேசியும். இவர்கள் மூவரும் பேசிக் கொள்வதை முழுவதும் கேட்டுவிட்டு, மூவரின் தாய், "மூணையும் பெத்திருக்கேன் பாரு... நல்ல அலைஞ்சான் கேஸ்களாக. சமோசாவை பங்கு பிரிக்ற மாதிரி, ஒரு ஆம்பிளையை பங்கு பிரிக்றாள்க. இது, எங்க போய் முடியப் போகுதோ? ஒரு கட்டத்ல மூணு பேரும் சேந்து, அவனை கட்டிக்கலான்னு முடிவெடுத்திடப் போறாள்க. திங்கள், செவ்வா ஒருத்தி; புதன், வியாழன் ஒருத்தி; வெள்ளி, சனி ஒருத்தி; ஞாயித்துகிழமை ஓய்வு நாள்!'
"மகள்கள் லூட்டிய ஒட்டு கேக்றா அம்மா... உருப்புடுமா வீடு?' தலையில் அடித்துக் கொண்டார் மூவரின் தந்தை.
ஓட்டி வந்த காரை அகராதியின் ஸ்டுடியோவின் முன் நிறுத்தி இறங்கினான் யாத்ரா. ஸ்டுடியோவின் கதவுகள் அரைகுறையாய் மூடப்பட்டிருந்தன. உடம்பை ஒருக்களித்து உள்ளே போனான். அறைக்குள் கெச்சலான வாசனையடிதது. ஒரு மர பெஞ்சில், சுருண்டு படுத்திருந்தாள் அவள். அருகில் போனான். அவளின் முன் முழங்காலிட்டான். அரையிருட்டு பழகி அகராதியின் முகமும், முன்னுடலும் தெரிந்தன. அவள் ஆணென்றால் குடித்திருப்பாள்; விஜய டி.ராஜேந்தர் போல், தாடி வளர்த்திருப்பாள். அவளுக்கு பக்கத்தில் ஒரு சொறி நாய் படுத்திருக்கும்... இவளோ, ஐந்து கிலோ எடை குறைந்து மேலும் கறுத்திருந்தாள்; அழுக்கு ஆடை அணிந்திருந்தாள்.
இந்த காதல் பொல்லாதது! ஆணையும், பெண்ணையும் படு அவஸ்தைக்கு உள்ளாக்குகிறது! காதலில் ஜெயித்தாலும் சோகம்; தோற்றாலும் சோகம்.
""அகராதி!'' விளித்தான். அவள் மெதுவாக அசைந்து கொடுத்தாள்.
""என் அன்பு தோழி அகராதி!''
வாரி சுருட்டி எழுந்தமர்ந்தாள்.
""நீயா... நீயா வந்திருக்க? நான் பாக்றது ஒண்ணும் கனவில்லையே...''
""நிஜமாத்தான் வந்திருக்கேன். உன்னை பாக்க வந்திருக்கேன். உன்னை கண் தேடிச்சு... வந்திருக்கேன்!''
அகராதியின் கண்களி லிருந்து கண்ணீர் பெருக் கெடுத்தோடியது. பாய்ந்து யாத்ராவைக் கட்டிக் கொண் டாள். கட்டிக் கொள்ளலில், அவளது உடலில் நடுக்கம் தெரிந்தது; விசும்பலில் உடல் குலுங்கியது. அவனின் முன் சட்டையை கண்ணீரால் நனைத்தாள்; முகத்தால் அவனது நெஞ்சை முட்டி னாள்.
""சரி, சரி... அழக் கூடாது... நான்தான் உன்னை பார்க்க வந்துட்டேனே... அப்புறமும் எதுக்கு அழுகை?''
""இ... இ... இது... ஆனந்த அழுகை!''
""மண்டு! நான் உன்னை வெறுத்தேனா? எவளோ ஒரு போதை கிரிமினல் சொன்ன அட்வைசை கேட்டுட்டு, நீ ஒதுங்கிக்கிட்டா எப்படி?''
""நீ சமாதானம் பேசுற. நீ நேசிகாவை காதலிக்கல...''
""சம் டைம்ஸ் ஆமா, சம் டைம்ஸ் இல்லைப்பா. பா.ம.க.,வோட கூட்டு வைக்கலாமா, வேணா மான்னு ஒரு டைலம்மால கருணாநிதி இருக்ற மாதிரி, நான் இருக்கேன். என்னுடைய எல்லா தோழிகளையும் விட ரெண்டு மூணு பாயின்ட்ஸ் அதிகம் ஸ்கோர் பண்ணியிருக்கா நேசின்றது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அதனால் என்ன... நேசியை நான் காதலிச்சாலும், காதலிக் காட்டியும் உன் நட்பு எனக்கு தேவை.''
"மறுபடியும் நீ என் கூட பேசுறதை பாத்தா, நேசி பத்திரக்காளி ஆய்டுவா!''
""ஆகட்டுமே!''
""நான் நாலு நா குளிக்காம பாண்டையாக இருக்கேன். அதோட உன்னை கட்டி பிடிச்சிட்டேனே... உவ்வே வரல?''
""நட்புக்கு நாத்தம் தெரியாது. சென்ட் தொழிற் சாலைல வேலை பாக்கறவ னும், மீன் மார்க்கெட்ல மீன் விக்றவனும் ஒரே மனநிலைல தான் இருப்பாங்க. வா, உன்னை குளிக்க வைக்றேன்!''
""சீய்!''
""குளிச்சிட்டு வா... காபி சாப்பிடப் போவம்!''
குளித்து, புத்தாடை உடுத்தினாள். தலை கேசத்தை, "சிட்சிட், சிட்சிட்' என அடித்து உலர்த்தி எண்ணெய் இட்டு வாரினாள். முகம் பூரித்திருந்தது.
காபி ஷாப். ஒதுக்குப்புறமா, மேஜை யில் அமர்ந்தனர்.
""உன் கூட பழகக் கூடாதுன்னு நேசியை அவ கைடும், உன் சித்தியும் மிரட்டிருக்காங்க. நேசி இத உன்கிட்ட சொன்னாளா?''
""இல்லையே...''
""உன் சித்தியின் போக்கு சரியில்லை. இந்த முட்டல், மோதல் எங்க போய் முடியுமோன்னு பயமாயிருக்கு. ஒண்ணு நீயும், உன் சித்தியும் பேசி சமாதானமாய் போய்டுங்க அல்லது சித்தியின் மீது போலீஸ்ல புகார் குடு!''
போலீஸ் வேணாம்... துர்கா விஷயத்தை நான், "டீல்' பண்ணிக்கிறேன்!''
""யாத்ரா! நீ என்னை காதலிக்க வேணாம்; தோழியா பாவிக்கக் கூட வேணாம். என்னை எப்பவும் உன் கூடவே வச்சுக்கயேன். நீ பேசுறதை வாய் பாத்துக்கிட்ருப்பேன்.''
யோசித்தான் யாத்ரா.
""என் ஆவணப் படங் களுக்கு ஒளிப்பதி வாளராக பணிபுரிபவன், கொஞ்ச நாளா மக்கர் பண்றான். அவனை தூக்கிட்டு, அவன் எடத்ல உன்னை போட்றலம்ன்னு நினைக்கிறேன்!''
""எனக்காக ஏன் ஒருத் தனை பலி குடுக்கிற?''
""பலி கொடுக்கல... சுமாரான ஒண்ணை பெட் டரான ஒண்ணால் ரீப்ளேஸ் பண்றேன்!''
""சரி, நான் வரேன்ப்பா!''
""இப்ப நான், "காடு' என்ற ஸ்கிரிப்ட்டை வொர்க் பண்ணிட்டு இருக்கேன். உனக்கொரு காப்பி ரெண்டொரு நாள்ல தரேன். அடுத்த ஒரு வாரத்ல, சத்தியமங்கலம் காட்டுக்குள்ள 21 நாள் ஷூட்டிங். பி ரெடி செல்லம்!''
""நான் இப்பவே தயார் தயார்!''
""சந்தோஷமா? நான் வந்து பேசினதில் சந்தோஷமா? நாளைக்கே இந்த உலகம் அழிஞ்சாலும், இன்னைக்கு சந்தோஷமா யிருப்போம் தோழி. அநித்தியத்திலும் ஒரு நித்தியத்தை காண்போம்; மாயைகளில் சிறப்பான மாயையாக திகழ்வோம். என் தோட்டத்து பூக்கள் வாட சகிப்பேனா? "வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்...' என்றார் வள்ளலார். வாடிய பூக்களை கண்டபோதெல்லாம் நான் வாடினேன் பூக்குட்டி!''
யாத்ராவின் இரு கைகளை பற்றி, அதில் முகம் புதைத்து அழுதாள் அகராதி.
""டேய்! நான் உன்னை என்னவோ நினைச்சேன்டா. உன் காலிபரோ வேறடா. விட்ரா விட்ரா!''
யாத்ராவின் மொபைல் போன் சிணுங்கியது; எடுத்து காதில் இணைத்தான். எதிர்முனையில் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர்.
""வணக்கம் சார்!''
""சொல்லுங்க!''
""உங்க மீது ஒரு கன்ஷாட் கொலை முயற்சி நடந்ததல்லவா?''
""ஆமா!''
""அது தொடர்பா சந்தேகத்தின் பெயரால், ஆறு நபரை பிடிச்சு வச்சிருக்கோம். நீங்க வந்து பாத்து உங்களை சுட்ட துப்பாக்கி நபர் இருக்கானான்னு அடையாளம் காட்டுங்க!''
""எப்ப வரணும்?''
""இப்பவே!''
""ரைட் இன்ஸ்பெக்டர்!''
""போன்ல யாரு யாத்ரா?''
""அது ஒரு பெர்சனல் கால். நான் அஞ்சு நிமிஷத்ல கிளம்ப வேண்டியிருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. அன்னைக்கி நீ குடுத்த இதயத்தை உன்கிட்டயே திருப்பி குடுத்தேனே... உன்னிதயம் இப்ப எப்படியிருக்கு?''
""புல்லா பிளாஸ்திரி ஒட்டி பேஜாராயிருந்தது. இன்னைக்கி டாக்டர் யாத்ரா வந்து ட்ரீட் பண்ணிட்டான். பிளாஸ்திரி ரிமூவ் பண்ணிட்டம். டாக்டர் தொடர்ச்சியா விசிட் பண்ணி, ட்ரீட் செய்தார்னா என் இதயம் ரேஸ் குதிரை ஆய்டும். ஒரு வேண்டுகோள்!''
"என்ன?''
""இனி, ஒரு பெண்ணையும் இதயம் தர வைக்காதே; எடுத்து வைத்த இதயத்தை திருப்பியும் குடுக்காத.''
அகராதியை ஆழமாக பார்த்தபடி, காவல் நிலையம் புறப்பட்டான்.
ஆய்வாளர் வரவேற்று, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு பேரை சுட்டினார்.
""இவங்கள்ல உங்களை சுட்ட கன்மேன் இருக்கானா?''
ஆறு பேரில், அனிதா ரெட்டியின் கணவனும் இருந்தான். "நான்தான் சுட்டேன்...' எம்.ஆர்.ராதா முகபாவம் காட்டினான்.
ஒவ்வொருவரையும் பார்த்து, ""இவரில்லை! இவரில்லை!'' என்றபடி வந்த யாத்ரா, ரெட்டியின் கணவன் முன் நின்றான். நான்கு கண்களும் டபிள்யூ டபிள்யூ எப் சண்டை செய்தன.
எதுவோ சொல்ல வாய் திறந்தான் யாத்ரா!
— தொடர்ந்து பூக்கும்.
* * *


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X