கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
00:00

கேள்வி: கேஷ் மெமரி குறித்து கேள்விப் பட்டுள்ளேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், கேஷ் க்ராமிங் (Cache Cramming) என்று ஒரு சொல்லாட்சியைப் பார்த்தேன். ஆனால், சரியாக விளக்கம் தரப்படவில்லை. இதனை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். விஜயகுமார், மேல்மருவத்தூர்.
பதில்:
கெடுதல் விளைவிக்கும் வகையில் சிறிய புரோகிராம் ஒன்றை இயக்குவதையே இந்த சொல் (Cache Cramming) குறிக்கிறது. அந்த பைல் பிரவுசரின் கேஷ் மெமரி அல்லது கம்ப்யூட்டரின் டிஸ்க் கேஷ் இடத்திற்குக் கொண்டு சென்று இயக்கப்படும். அத்துடன், எந்த போர்ட் செயல்பாடு இல்லாமல் உள்ளது என்று கண்டறிந்து, அதன் மூலம் தன்னை அனுப்பியவரின் கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்டு, அவருக்கு இது இயங்கும் கம்ப்யூட்டரைத் தொடர்பு படுத்திக் கொடுக்கும். உங்கள் கம்ப்யூட்டர் இணையத்தில் இணைந்து இயங்கும் போது, இந்த போர்ட் வழியாக, கெடுதல் விளைவிக்கும் புரோகிராமினை அனுப்பியவர், உங்களுடைய அருமையான தகவல்களைத் தேடி வைத்துக் கொள்ள இது உதவும்.

கேள்வி: என் கணவர் வீட்டில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், வேர்ட் புரோகிராமில், வழக்கமான டிக் ஷனரியுடன், அவர் கல்லூரிப் பாடங்களுக்குத் தேவையான பல டிக் ஷனரிகளை உருவாக்கியுள்ளார். நான் டாகுமெண்ட் உருவாக்குகையில், அவற்றையும் வேர்ட் தேடுகிறது. இதனை நிறுத்தி, மெயின் டிக் ஷனரியை மட்டும் பயன்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைக்க முடியுமா? நான் வேர்ட் 2013 பயன்படுத்தி வருகிறேன்.
எஸ்.கே. வேதவல்லி, சென்னை.
பதில்
: வேர்ட் நம் வசதிக்கேற்றபடி, பல தனி வகை அகராதிகளை உருவாக்கிப் பயன்படுத்த வசதி ஏற்படுத்தித் தருகிறது. நாம் பயன்படுத்தும் பொருள் தொகுதிகளின் சொற்களை இந்த தனி வகை அகராதிகளில் இணைக்கலாம். நாம் டெக்ஸ்ட் டைப் செய்கையில், வேர்ட் நாம் அமைக்கும் சொற்களை, வழக்கமான அகராதியுடன், நாம் அமைத்திருக்கும் இந்த தனி அகராதிகளுடனும், எழுத்துப் பிழைகளுக்காக சோதனை செய்திடும். இதனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்குக் கூடுதல் நேரம் எதுவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தனி வகை அகராதியில் உள்ள சொற்கள், நீங்கள் அமைக்கும் சொற்களை ஒத்திருந்து, நீங்கள் அமைக்கும் சொற்களின் தவற்றினை, தனி வகை அகராதிகளின் அடிப்படையில், சரி என்று அவை ஏற்றுக் கொள்ளும் போதுதான், நீங்கள் குறிப்பிடும் பிரச்னை ஏற்படுகிறது. சரி, இவற்றை எப்படி விலக்கி வைப்பது எனப் பார்க்கலாம்.
வேர்ட் அதனுடன் தரப்பட்டிருக்கும் முதன்மை அகராதியை மட்டும் பயன்படுத்த கீழ்க்காணும் செயல்முறைகளைக் கையாளவும். டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து “File” டேப்பினை கிளிக் செய்திடவும். கிடைக்கும் சிறிய விண்டோவில், இடது பக்கத்தில் உள்ள விஷயங்களில் “Options” என்பதனைக் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் “Word Options” டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள தலைப்புகளில் “Proofing” என்பதன் மீது கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் “When correcting spelling in Microsoft Office programs” என்ற பிரிவில், “Suggest from main dictionary only” என்று உள்ளதன் அருகே காட்டப்படும் செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். மாற்றங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓகே கிளிக் செய்து வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினை விட்டு வெளியேறவும். இதே வகையில், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் செயலிகளிலும் மேற்கொள்ளலாம்.

கேள்வி: வை பி எனப்படுவதும், வயர்லெஸ் எனப்படுவதும் ஒரே பொருளை, இயக்கத்தினைக் குறிக்கின்றனவா? இது எனக்குப் பல வேளைகளில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இது குறித்து எழுதுபவர்கள், ஒன்றின் இடத்தில் இன்னொரு சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அன்பு கூர்ந்து விளக்கவும்.
ஆர். முத்துச் சண்முகன், திருத்தணி.
பதில்:
நல்ல கேள்வி. தொடக்கத்தில் இவை பற்றி எழுதுகையில், எனக்கு சற்று குழப்பம் ஏற்படுவது உண்டு. எனவே, எளிய சொற்களில் இவற்றின் வேறுபாட்டினைக் காட்டும் வகையிலேயே எழுதி வருகிறேன். இரண்டும், ஒரே இயக்கத்தினைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள். வை பி என்பது இணையத்தை மட்டும் வயர் இணைப்பின்றி இணைக்கும் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். வயர்லெஸ் என்பது, வயர் இன்றி இணைக்கும் எந்த செயல்பாட்டினையும் குறிக்கும்.
சற்று விரிவாக, உங்களுக்கு நல்ல தொடர்புள்ள எடுத்துக் காட்டுடன் சொல்கிறேன். வீட்டில் இணைய இணைப்பும், அதனை வை பி ஆகப் பயன்படுத்தும் ரெளட்டர் வசதியும் இருக்கும். வீட்டில் இருக்கும்போது, உங்கள் ஸ்மார்ட் போன் அதன் வை பி அலைகளைப் பயன்படுத்தி இணையத்தில் இணைகிறது. வீட்டைவிட்டு சற்றுத் தொலைவாகச் செல்கையில், உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள சிம் தந்த நிறுவனம் தரும் “வயர்லெஸ்” நெட்வொர்க்கில் நீங்கள் நுழைகிறீர்கள்.
வை பி என்பது, இணையத்தை இணைக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட வசதி ஆகும். இது வயர்லெஸ் அமைப்பின் ஒரு பகுதியாகும். ஆனால், அது வயர்லெஸ் அல்ல. கம்ப்யூட்டர் தன்னிடம் உள்ள தகவல்களை ரெளட்டர் வழியாக, வயர் எதுவும் இல்லாத இணைப்பில் வை பி இணைப்பில் இணையும் சாதனங்களுக்கு வழங்குகிறது. வை பி வசதியைப் பயன்படுத்த, இதனைத் தரும் மற்றும் பெறும் சாதனங்கள் குறிப்பிட்ட வளையத்திற்குள்ளாகவே இருக்க வேண்டும். இல்லையேல், இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால், வயர்லெஸ் இணைப்பில் உள்ளவை, தங்கள் நெட்வொர்க் செயல்படும் எங்கும் சென்று வரலாம். வைபி சிக்னல்களைப் பெற பொதுவாக ரெளட்டர் தேவைப்படும். கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்ற சாதனங்கள் புளுடூத் வழியாக இணைக்கப்படும்போது, அவை வயர்லெஸ் தொழில் நுட்பத்திலேயே இயங்குகின்றன. இந்த இணைப்பிற்கு வை பி அல்லது இணைய இணைப்பு தேவையில்லை.

கேள்வி: முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில், ஆட்டோ கம்ப்ளீட் வசதியில், தேவையற்றதை எப்படி நீக்க வேண்டும் என்று டிப்ஸ் தந்தீர்கள். இப்போது எனக்கு “ஆட்டோ கம்ப்ளீட்” வசதி தரும் பிரிவையே பார்க்க முடியவில்லை. உதவவும்.
ஆர். நாகராஜன், தேனி.
பதில்:
முன்பு நீங்கள் என்ன கேட்டு நான் என்ன தந்தேன் என்பது நினைவில் இல்லை. இருப்பினும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், ஆட்டோ கம்ப்ளீட் பிரிவை எப்படி அணுகலாம் என்று விபரம் தருகிறேன். முதலில், மேல் வலது பக்கம் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு Internet Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும் அடுத்து Settings என்னும் பிரிவில், Auto Complete என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பிரிவில், நீங்கள் எந்த சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த சொற்கள் ஆட்டோ கம்ப்ளீட் செயல்பாட்டில் அமையும்.

கேள்வி: ஆப்பிள் வாட்ச் குறித்து சில வாரங்களுக்கு முன் எழுதி இருந்தீர்கள். தற்போது இந்தியாவில் இது எங்கு கிடைக்கிறது? இல்லை எனில், பக்கத்து நாடுகளான இலங்கை அல்லது சிங்கப்பூரில் கிடைக்கிறதா?
ஆர். ஈஸ்வரி, கோவை.
பதில்:
மிக ஆர்வமாய் இருக்கிறீர்கள் போல் உள்ளதே. தற்போது அதிகாரபூர்வமாக இந்தியாவில் இது விற்பனைக்கு இல்லை. கடத்திக் கொண்டு வந்து ஒரு சிலர் விற்பனை செய்திடலாம். இன்றைய நிலையில், United States, Australia, Canada, China, France, Germany, Hong Kong, Japan மற்றும் UK ஆகிய நாடுகளில் ஆப்பிள் வாட்ச் கிடைக்கிறது. ஜூன் 26 முதல் Italy, Mexico, Spain, South Korea, Singapore, Switzerland மற்றும் Taiwan ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை ஆப்பிள் வாட்ச் விற்பனையாகியுள்ளது என ஆப்பிள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், ஏப்ரல் முதல் இதனை வாங்கிக் கொள்ள முன்பதிவு ஏற்படுத்தப்பட்டது. எப்போதும், தயாரிக்கும் திறனுக்கு மேலாகவே, அதற்கான கேட்பு இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. குறிப்பாக, Italy, Mexico, Spain, South Korea, Singapore, Switzerland மற்றும் Taiwan ஆகிய நாடுகளில் எவ்வளவு வழங்கினாலும் தொடர்ந்து தேவை இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

கேள்வி: டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், சில வரிகளுக்கு ஒருமுறை நாமே கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்கிறோம். இவ்வாறு சேவ் செய்திட மறந்துவிட்டால், கம்ப்யூட்டரின் மின் சக்தி நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டால், உருவான டாகுமெண்ட்டில் கணிசமான பகுதியை இழந்துவிடுவோம். இதனைத் தடுக்க, தானாக டாகுமெண்ட் சேவ் செய்யப்பட வழி உள்ளதா?
எஸ்.கே. பாலசுப்ரமணியன், புதுச்சேரி.
பதில்:
வேர்ட் தானாக டாகுமெண்ட்களை சேவ் செய்திடும் வசதியைத் தன் பயனாளர்களுக்குத் தருகிறது. இதற்கான செட்டிங்ஸ் அமைப்பினைப் பார்க்கலாம். முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். பின்னர் Word Options மீது கிளிக் செய்திடவும். தொடர்ந்து, டயலாக் பாக்ஸ் இடதுபுறம் உள்ள Save என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய விண்டோவில், Save AutoRecover Info Every என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். இதன் அருகே கொடுக்கப்பட்டுள்ள சிறிய பாக்ஸில், நிமிடங்கள் என்பதன் அருகே 10 என மாறா நிலையில் இருக்கும். அதாவது, வேர்ட் தானாக, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவ் செய்திடும் என்று பொருள். ஆனால், இதில் நீங்கள் விரும்பும் கால இடைவெளியை (ஒரு நிமிடம் கூட அமைக்கலாம்). அமைத்திடவும். 1 முதல் 120 நிமிடம் வரை அமைக்கலாம். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி, வேர்ட், நீங்கள் செட் செய்த கால இடைவெளியில், டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளும். இதனால், மின்சக்தி கம்ப்யூட்டருக்குத் தடை பட்டாலும், நாம் செட் செய்த கால அளவில் டாகுமெண்ட் சேவ் செய்யப்பட்டு கிடைக்கும்.
ஆனால், இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கும் குறைவான கால நேரத்தில் இதனை அமைத்தால், டாகுமெண்ட் அடிக்கடி சேவ் செய்யப்படுவது, கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாமதப்படுத்தலாம். இன்னொன்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஆட்டோ சேவ் செய்திடுகையில், உங்கள் பைல் சேவ் செய்யப்படுவதில்லை. பைல் கிராஷ் ஆகி, அடுத்த முறை அதனை ரெகவர் செய்திட முயற்சிக்கையில், வேர்ட் புரோகிராமிற்குத் தேவையான தகவல்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட் தயாரிக்கும்போது, நெட்டு வரிசை, படுக்கை வரிசைகளை சில நேரங்களில் இன்ஸெர்ட் செய்கிறேன். அப்போது இடைச் செருகல் செய்த இடத்தில், பிரஷ் போன்ற ஒரு டூல் பார் காட்டப்படுகிறது. அதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால், அதில் சிறிய மெனு ஒன்று தெரிகிறது. இதனை நீக்க முடியுமா? இது டேட்டா அமைப்பதில் தேவையற்றதாய் அமைகிறது. இதற்கான வழி இருந்தால் தரவும்.
என். தெய்வேந்திரன், கடலூர்.
பதில்
: நீங்கள் குறிப்பிடும் மெனு Insert Options button என அழைக்கப்படுகிறது. இது உங்கள் கவனத்தைத் திசை திருப்புவதாக நீங்கள் கருதினாலோ, அல்லது இது பயன்படுத்தப் படப்போவதில்லை என்று முடிவு செய்தாலோ, இதனைக் காட்டாதவாறு செய்திடலாம்.
1. முதலில் Excel Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம், Advanced என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கின்ற பல்வேறு ஆப்ஷன்ஸ் கொண்ட பட்டியலில் named Cut, Copy, and Paste என்று இருப்பது வரை ஸ்குரோல் செய்து செல்லவும்.
4. அங்கு Show Insert Options Buttons என்று இருப்பதில், செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து
வெளியேறவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X