கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

கேள்வி: என் பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்க விரும்புகிறேன். இன்னொரு பெயரில் என் அக்கவுண்ட் ஏற்கனவே நண்பர்களுக்குத் தெரிந்ததாக உள்ளது, நான் நீக்க விரும்புவது முதன் முதலில் அக்கவுண்ட் ஒன்று என்ன என்பது தெரியாமல் ஆரம்பித்தது. எனவே எப்படி அதனை நீக்கலாம் என்பதற்கு டிப்ஸ் தரவும்.
எஸ். சுந்தர மகாலிங்கம். கோவில்பட்டி.
பதில்:
எளிதாக நீக்கலாம். அதற்கான கீழ்க்காணும் செயல்முறை வழிகளைப் பின்பற்றவும். பலரும் பயன்படுத்தும் இந்த தளத்திலிருந்து தங்கள் அக்கவுண்ட்டினை நீக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்குக் காரணம், ஒருவரே பல அக்கவுண்ட்களில், பெயர்களில் சிறிய வித்தியாசத்துடன் அக்கவுண்ட்களை அமைத்துவிடுவதே ஆகும்.
1. முதலில் பேஸ்புக் இணைய தளத்தில் உங்களுடைய, நீக்க விரும்பும் குறிப்பிட்ட அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Account -> Account Settings என்பதில் செல்லவும்.
2. இது Settings பக்கத்தினைத் திறக்கும்.
3. இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
4. அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
5. "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்களுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
6. http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற இணைய தளம் சென்று, நிரந்தரமாக பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

கேள்வி: எனக்கு தேதிகளை பார்மட் செய்து அச்சிடுவதில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு பிரச்னை உள்ளது. வீட்டில் பார்மட் செய்கையில், mm/dd/yy என்ற பார்மட்டில் தேதியை செல்களில் அமைக்கிறேன். அலுவலகக் கம்ப்யூட்டரில் அதனைப் பதிவு செய்து, அச்சிடுகையில், mm/dd/yyyy என்ற பார்மட்டில் அச்சிடப்படுகிறது. இது அச்சின் பார்மட்டில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதன் தோற்றம் சரியாக அமைய மறுக்கிறது. சில வேளைகளில் பக்கத்து செல்களில் உள்ள டேட்டா நீக்கப்பட்டு அச்சாகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்?
ஆ. ஸ்ரீவத்ஸன், சென்னை.
பதில்
: உங்கள் வீடு மற்றும் அலுவலகக் கம்ப்யூட்டர்களில், சிஸ்டம் தேதி மாறுபாடான பார்மட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதே இந்தப் பிரச்னைக்குக் காரணம் ஆகும். ஒன்றில் ஆண்டு இரண்டு எண்களிலும், இன்னொன்றில் நான்கு எண்களிலும் அமைக்கப்பட்டுள்ளதே காரணம். இது எப்படி எக்ஸெல் புரோகிராமினைப் பாதிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் என நீங்கள் எண்ணலாம். எக்ஸெல் புரோகிராம், விண்டோஸ் சிஸ்டம் செட் செய்த வகையில் தேதியின் பார்மட்டை எடுத்துக் கொள்கிறது. இதனை Format Cells டயலாக் பாக்ஸில், Number டேப் டிஸ்பிளேயினைக் காணும் போது நீங்கள் உணரலாம். சில பார்மட் வகையினைப் பார்த்தால், இதனைக் காணலாம். அதில் ஒரு ஆஸ்டெரிஸ்க் (asterisk) அடையாளம் இருக்கும். இது "system date" பார்மட்டைக் குறிக்கிறது. இதனைத் தேர்ந்தெடுக்கையில், எக்ஸெல் அது இயங்கும் சிஸ்டத்தின் டேட் பார்மட்டினை எடுத்துக் கொள்ளும். அதே போல, வேறு ஒரு கம்ப்யூட்டரில் இந்த ஒர்க் புக்கினைப் பயன்படுத்துகையில், அந்த சிஸ்டம் தரும் வடிவத்தை எடுத்துக் கொள்ளும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு, நீங்கள் எந்த வகையில் தேதி அச்சாக வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ, அதற்கேற்ற வகையில், சிஸ்டம் டேட் பார்மட்டினை மாற்றுவதுதான். ஆஸ்டெரிஸ்க் மார்க் இல்லாத பார்மட்டினை அமைத்துக் கொண்டும் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டலாம். அந்த நிலையில், எக்ஸெல் ஒர்க்புக் நீங்கள் வடிவமைத்த பார்மட்டினையே எடுத்துக் கொள்ளும்.

கேள்வி: நான் மைக்ரோ எஸ்.டி. கார்ட்களை என் கேமராவிலும், எம்.பி. 3 ப்ளேயர்களிலும் பயன்படுத்துகிறேன். இந்த கார்ட்கள் குறித்த விளம்பரத்தில் ஸ்பீட் குறித்தும் வாசகங்கள் உள்ளன. சிலவேளைகளில் அவற்றின் வகை மட்டுமே குறிக்கப்படுகிறது. இவை சரியாகப் புரியவில்லை. இதற்கான கூடுதல் விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். ஆர். ஷ்யாமளா, கோவை.
பதில்:
நீங்கள் சொல்வது சரியே. மைக்ரோ எஸ்.டி. கார்ட்களின் வேகத் தன்மை இப்போது அவை குறித்த சிறப்பு தகவலாகக் காட்டப்படுகின்றன. ஏனென்றால், இப்போது வரும் கார்ட் ரீடர்கள், அதிவேக அளவில் டேட்டா பரிமாறிக் கொள்ளும் தன்மையினைக் கொண்டுள்ளன. லேப்டாப் கம்ப்யூட்டரில் தரப்படும் போர்ட்களும் வேகமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, இந்த கார்ட்களில் விநாடியில் எத்தனை மெகா பைட்ஸ் (megabytes per second (MB/sec)) அளவில் டேட்டா பரிமாறப்படும் என வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கும். சில கார்ட்களில் அவை எந்த வகையைச் (Class) சார்ந்தவை என்று காட்டப்படும். சில கேமராக்களும், சாதனங்களும் அதி வேக கார்ட்களை சப்போர்ட் செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கும். இவற்றில் அதற்கேற்ற கார்ட்களைப் பயன்படுத்துகையில், டேட்டா வேகமாகப் பரிமாறப்படும். அதில் காட்டப்பட்டுள்ள வேகத்திற்குக் குறைவான வேகம் உள்ள கார்ட் என்றாலும், அதனால் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது.
இங்கு வகை மற்றும் அவை சார்ந்த டேட்டா பரிமாற்ற வேகம் தருகிறேன். சில கார்ட்களில் எக்ஸ் (X) என்ற அளவுடன் தரப்படும். இது சி.டி. க்களின் தகவல் பரிமாற்ற வேகத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு எக்ஸ் என்பது விநாடியில் 150 கே.பி. டேட்டா பரிமாற்றமாகும்.
Class 2: குறைந்தது 2 எம்.பி./விநாடி அல்லது 14 எக்ஸ்
Class 4: குறைந்தது 4 எம்.பி./விநாடி அல்லது 28 எக்ஸ்
Class 6: குறைந்தது 6 எம்.பி./விநாடி அல்லது 40 எக்ஸ்
Class 10: குறைந்தது 10 எம்.பி./விநாடி அல்லது 66 எக்ஸ்
Class 10 UHS-I: குறைந்தது 30 முதல் 95 எம்.பி./விநாடி அல்லது 200 எக்ஸ்+

கேள்வி: நான் தற்சமயம் என் லேப் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். சரியான உரிமம் பெற்ற ஓ.எஸ். என்பதால், விண்டோஸ் 10 ரெடி, ரிசர்வ் செய்து கொள்ளுங்கள் என்ற ஐகான் என் சிஸ்டம் ட்ரேயில் உள்ளது. இதனை நான் ஏற்றுக் கொண்டு, ஜூலை 29 முதல், விண்டோஸ் 10 பயன்படுத்த இருக்கிறேன். ஒரு வேளை, என்னால், தொடர்ந்து விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்காமல் போனால், என்ன செய்யலாம்? தற்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து செயலிகளையும் விண் 10 ஆல் இயக்க முடியுமா?
என். ஆனந்தி, திருநெல்வேலி.
பதில்
: நல்ல கேள்வி. பல வாசகர்கள் இதே போல கேள்விகளை அனுப்பி உள்ளனர். எல்லாருக்கும் பயம். எங்கே, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பல புதிய அம்சங்களை, விண் 8 போல அறிமுகப்படுத்தி, சிக்கலில் மாட்டிவிட்டிடுமோ என்ற அச்சம்.
நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருவதால், விண்டோஸ் 10 சிஸ்டம் இயக்குவதற்கு எளிதாகவே இருக்கும். உங்கள் கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 ஏற்றுக் கொள்ள தகுதி கொண்டுள்ளதா என அறிய, தற்போது காணப்படும் விண்டோஸ் 10 ஐகானில், ரைட் கிளிக் செய்து, compatibility checker என்ற டூலை இயக்கிப் பார்க்கவும். மீண்டும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் போக முடியுமா என்பது சந்தேகமே. விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பில், மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்ல வழி தரப்பட்டிருந்தது. ஆனால், முழுமையான மக்கள் தொகுப்பில் அது கிடைக்குமா என்பது சந்தேகமே. இதற்கான காரணம், அனைவரும் ஒரே இயக்கத்தின் குடைக்குள் வர வேண்டும் என மைக்ரோசாப்ட் விரும்புவதே. ஆப்பிள் இதைத்தான் தன் ஐ.ஓ.எஸ். மற்றும் ஓ.எஸ்.எக்ஸ் செயலிகளைச் செயல்படுத்தி வருகிறது.
விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் ரெஸ்டொரேஷன் புள்ளி ஒன்று தரப்பட்டுள்ளது. அதன் மூலம் நாம் திரும்ப பழைய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பொறுத்த வரை, இந்த வசதியைப் பயன்படுத்த இயலாது. எனவே, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். எப்படி செய்தாலும், முக்கிய பைல்கள் அனைத்தையும், ஒன்று அல்லது இரண்டு இடங்களில் பேக் அப் செய்து வைத்துக் கொள்ளவும். சில அப்ளிகேஷன் புரோகிராம்களை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருந்தால், அவற்றிற்கான முழுத் தொகுதி கோப்புகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். பேக் அப் பைல்களாகவும், டிஸ்க் இமேஜ் செட் அப் ஆகவும் வைத்துக் கொள்ளவும்.
புதிய சிஸ்டம் இன்ஸ்டால் செய்து இயங்கப் போகும்போது, மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சென்றுவிடலாம் என்பது, திருமணம் செய்து கொள்ளப் போகும்போதே, தேவைப்பட்டால், விவாகரத்தும் செய்து கொள்ளலாம் என்று எண்ணுவதற்கு ஒப்பாகும். உங்களால், முழு மனதுடன் புதிய சிஸ்டத்தில் ஈடுபாடு கொள்ள வைக்காது. எனவே, தொடக்க நிலை சிரமங்கள் இருந்தாலும், புதிய வசதிகள் பல தர இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயங்கிப் பார்க்கவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் குறித்த தகவல்களை, அதன் டாகுமெண்ட்டிலேயே அறிந்து கொள்ள வழிகள் உள்ளன என்று சொல்கிறார்கள். அவற்றை எப்படி பார்க்க முடியும். அதற்கான செட்டிங்ஸ் என்ன?
என். பார்த்திபன், புதுச்சேரி.
பதில்:
நீங்கள் எந்த வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும், இரண்டு தொகுப்புகளுக்கான தகவல்களைத் தருகிறேன். வேர்ட் நாம் பணியாற்றுகையில், குறிப்பிட்ட டாகுமெண்ட் குறித்த சில ஆர்வமூட்டும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. சில வழக்கமான தகவல்களும் இதில் அடங்கும். பைல் பெயர், டைரக்டரி, டாகுமெண்ட் டெம்ப்ளேட் ஆகியன வழக்கம் போல கிடைக்கும். இவை தவிர, யார் இறுதியாக ஒரு டாகுமெண்ட்டினைக் கையாண்டார்கள், எப்போது அது இறுதியாக அச்சிடப்பட்டது, அந்த டாகுமெண்ட் எடிட் செய்யப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்த நேரம் போன்ற தகவல்களையும் பெறலாம். இறுதியாக, எவ்வளவு நேரம் டாகுமெண்ட் திறக்கப்பட்டு இருந்தது என்ற தகவலும் கிடைக்கும். இந்த தகவல்களை வேர்ட் 2007ல் பெற, கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, இடது பக்க மெனுவில், Prepare | Properties எனச் செல்லவும். வேர்ட், டாகுமெண்ட் மேலாகத் தொடக்கத்தில், தகவல் கட்டத்தைத் தரும்.
2. இங்கு Prepare | Properties என்னும் கீழ்விரி மெனுவினை (மேலே சொல்லப்பட்ட கட்டத்தின் மேல் இடது மூலையில் இது கிடைக்கும்.) அழுத்தி Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Properties டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு Statistics என்ற டேப்பினை அழுத்தித் தேர்ந்தெடுக்கவும்.
3. வேர்ட் ஏற்கனவே மேலே கூறப்பட்ட தகவல்களைக் காட்டும்.
4. இந்த புள்ளி விபரங்களைக் கண்டு முடித்த பின்னர், ஓகே அழுத்தி வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2010 அல்லது 2013 தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. ரிப்பனில் File என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. தொடர்ந்து Info | Properties | Advanced Properties எனச் செல்லவும். வேர்ட் Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. அடுத்து Statistics டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸில் தகவல்கள் கிடைக்கும்.
4. இவற்றைப் பார்த்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X