ஒவ்வொரு குழந்தையையும் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும்போது, தாலாட்டு பாடுவது வழக்கம். ஆனால், இத்தலைமுறைகளுக்கு தாலாட்டு பாட்டு என்றால், என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது.
முன்னோர்கள் தங்களது குழந்தைகளை ஆராரோ... ஆரிராரோ... என தாலாட்டு பாட்டுகளை பாடித்தான் தூங்க வைத்தனர். பொருளாதார தேடலால், வெளியூர்களில் வசிக்கும் சிலருக்கு, அவரது முன்னோர்கள் உடன் இருக்க மாட்டார்கள். ஆதலால், தாலாட்டை கேட்டு தூங்கும் பாக்கியத்தை குழந்தைகள் பெற முடிவதில்லை.
குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போதே, விஞ்ஞானியாக வர வேண்டும் என எண்ணி, அப்போதே பல முயற்சிகளை பெற்றோர்கள் எடுக்கின்றனர். ஆனால், குழந்தை பிறந்ததும் அதற்கான முயற்சியை தொடருவதில்லை. குழந்தைகள் தூங்கும் போது தாலாட்டு பாடுவது, நம்முடன் ஒருவர் இருக்கிறார் என்ற பாதுகாப்பு எண்ணத்தை ஏற்படுத்தும்.
எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகளுக்கு உள்வாங்கும் உணர்வு அதிகம். ஆகவே, முடிந்தளவு ஜீனியஸ் ஆக்க வேண்டும் என்பதற்கான முயற்சியை கற்று கொடுக்க இத்தருணம் சிறந்ததாகும். ஆனால், இக்காலத்தில், யாருக்கும் தாலாட்டு பாட தெரியவில்லை எனினும், பின்வரும் குறிப்புகளை கடைப்பிடிக்கலாம்.
* ஆறு மாதம் வரை குழந்தைகள் நம் முக பாவனைகளையும், அசைவுகளையும் தான் உள்வாங்கும், அதனால், சிரிப்புடன் அவர்களை அணுகுங்கள். அவர்களை கொஞ்சி சிரிக்க வைத்து கொண்டே இருங்கள். அப்போதுதான் முகம் எப்போதும் சிரிப்புடன் காணப்படும்.
* ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தைகளுக்கு நாம் பேசும் வார்த்தைகளை கவனிக்கும் மனநிலை உருவாகும். அப்போது, அவர்களிடம் நிறைய பேசுங்கள். அச்சமயம், தாலாட்டும்போது, அ,ஆ,இ,ஈ., ஒன்று, இரண்டு, மூன்று...., ஏ,பி,சி,டி.,' ஐ பாடி தாலாட்டலாம். இதை பழக்கப்படுத்தும் போது, இதனை புரியும் மனநிலை உருவாகும்.
* நடக்கும் பருவம் வந்ததும், அவர்களின் உடலிலுள்ள நரம்புகள் இயக்க துவங்குகின்றன. இப்போதும், அவர்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கும் போது, வா வா என்று சொல்லாமல், ஒன்று, இரண்டை...., கூறியும் அழைக்கலாம்.
* அடுத்தடுத்து வரும் பருவங்களில், ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு, குழந்தைகளை வளர்ப்பது அவசியம். அப்போது தான் ஒரு குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து, ஒரு சிறந்த மாணவனாக பள்ளிக்கு அடியெடுத்து வைக்க முடியும்.
* அடிப்படை பண்புகளை வீட்டில், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் போதே, சமூகத்தின் பார்வைக்கு செல்லும் போது, ஒரு சிறந்த நற்குணங்களை கொண்ட மனிதனாக குழந்தைகள் உருவாகும்.
தாலாட்டில் துவங்கும் ஒவ்வொரு தாய்மாரின் பாசமிகு கற்பிக்கும் பண்பே, இறுதி வரை அவர்களை நல்வழிப்படுத்தும்.