கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
00:00

கேள்வி: நான் கம்ப்யூட்டரில் அதிகம் கேம்ஸ் விளையாடுகிறேன். இந்த விளையாட்டுக்களை, புதியதாக வர இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விளையாட இயலுமா? வேகம் குறையுமா? அப்படி இருந்தால், நான் விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலேயே இருக்க விரும்புகிறேன். உங்கள் அறிவுரை என்ன?
என். தயாசேகரன், சென்னை.
பதில்:
நீங்கள் தான் கட்டாயம் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த சிஸ்டத்தில், DirectX என்ற தொழில் நுட்பத்தின் இன்றைய பதிப்பு கிடைக்கிறது. கேம்ஸ் விளையாடுகையில், சி.பி.யு. வால், விளையாட்டிற்குத் தேவையான சுழற்சியை தொடர்ந்து வழங்க முடியாத நிலை இதுவரை ஏற்பட்டு வந்தது. அந்தக் குறையை இந்த தொழில் நுட்பம் தீர்த்து வைக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை தொகுப்பு சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, DirectX பதிப்பு 11, விண்டோஸ் 7 மற்றும் 8.1 சிஸ்டங்களில் செயல்பட்டதைக் காட்டிலும் விரைவாகவும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்படுத்துவது உங்களுக்கு நிச்சயம் நிறைவான மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக இருக்கும்.

கேள்வி: என்னுடைய டாகுமெண்ட் ஒன்றில், புதியதாக மார்ஜினை உருவாக்கி அமைக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்துப் பார்த்துவிட்டேன். இதற்கான காரணம் தெரியவில்லை. இதனை எப்படிச் சரி செய்வது என அமைப்பு வழிகளைக் கூறவும். ஒரு சில டாகுமெண்ட்களில் மட்டுமே இந்த பிரச்னை ஏற்படுகிறது.
என். காசிமாணிக்கம், சிவகாசி.
பதில்:
ஒரு சில டாகுமெண்ட்களில் மட்டுமே இந்த பிரச்னை ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளீர்கள். எனவே, பிரச்னைக்குக் காரணம் வேர்ட் புரோகிராம் அல்ல. இந்த பிரச்னையைக் கொண்டுள்ள டாகுமெண்ட்களின் அமைப்பில் தான் பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. இந்த டாகுமெண்ட்கள் 'கரப்ட்' ஆகி இருக்கலாம். இவற்றை உங்கள் விருப்பப்படி அமைக்க கீழ்க்காணும் வழிகளைத் தருகிறேன்.
1. பிரச்னைக்குரிய டாகுமெண்ட்டினைத் திறக்கவும்.
2. தொடர்ந்து புதிய, காலியாக டாகுமெண்ட் ஒன்றையும் திறக்கவும்.
3. புதியதாகத் திறந்துள்ள டாகுமெண்ட்டில், உங்கள் விருப்பப்படி, அவை எப்படி காட்சி அளிக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதன்படி மார்ஜின் அமைக்கவும்.
4. பிரச்னைக்குரிய டாகுமெண்ட் சென்று Ctrl+A அழுத்தி, டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
5. இடது அம்புக் குறியினை, ஷிப்ட் கீயுடன் அழுத்தவும். இது பிரச்னைக்குரிய டாகுமெண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள பாராகிராப் அடையாளத்தினை (Paragraph Marker) நீக்கும். எனவே, இப்போது, டாகுமெண்ட்டில் உள்ள கடைசி பாரா மார்க்கர் தவிர அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
6. இனி, கண்ட்ரோல்+சி அழுத்தி டாகுமெண்ட்டினை கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடவும்.
7. புதிய டாகுமெண்ட் செல்லவும்.
8. கண்ட்ரோல்+வி அழுத் தவும். சிக்கல் உள்ள டாகுமெண்ட் அப்படியே, புதிய டாகுமெண்ட்டின் காலி பக்கங்களில் காப்பி செய்யப்படும்.
9. இனி இரண்டு டாகுமெண்ட்களையும் மூடவும். புதிய டாகுமெண்ட்டில் நீங்கள் விரும்பியபடி மார்ஜின் வெளிகளுடன் டாகுமெண்ட் அமைக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை என் விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அவ்வாறு பதியும் போது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் சில வசதிகளில் பெரிய அளவில், பிரச்னைகளைத் தரும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்படும் எனப் படித்தேன். இது உண்மையா? அவை யாவை? அதற்குப் பதிலாக என்ன செய்திடலாம்?
ஏ.எஸ். சரவணக் குமார், மதுரை.
பதில்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைமனைப் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது. அதன் படி, நீங்கள் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் 7 அல்ட்டிமேட், மீடியா சென்டருடன் விண்டோஸ் 8 ப்ரோ அல்லது விண்டோஸ் 8.1 ப்ரோ கொண்டிருந்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிந்தால், விண்டோஸ் மீடியா சென்டர் அகற்றப்படும். டி.வி.டி.க்களை இயக்கிப் பார்க்க தனியே ப்ளே பேக் சாப்ட்வேர் தேவைப்படும். விண்டோஸ் 7 டெஸ்க்டாப் வசதிகள் சில நீக்கப்படும்.
விண்டோஸ் 10 ஹோம் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் அப்டேட் தளத்திலிருந்து விண்டோஸ் அப்டேட் பைல்களைத் தானாகவே பெற்றுப் பயன்படுத்தலாம். விண்டோஸ் ப்ரோ மற்றும் என்ட்ர்பிரைஸ் பயன்படுத்துபவர்கள், அப்டேட் பைல்கள் தேவை இல்லை என்றால், விலக்கிவிடும் வசதியைக் கொண்டிருப்பார்கள்.
விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்தே தரப்பட்ட Solitaire, Minesweeper, and Hearts Games ஆகியவை, விண்டோஸ் 10 பதியப்படுகையில் நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாக, the “Microsoft Solitaire Collection” and “Microsoft Minesweeper.” என்னும் தொகுப்புகள் பதியப்படும். Windows Live Essentials உங்கள் சிஸ்டத்தில் பதியப்பட்டிருந்தால், ஒன் ட்ரைவ் அப்ளிகேஷன் நீக்கப்பட்டு, ஒன் ட்ரைவின் இன்பாக்ஸ் பதிப்பு தரப்படும்.

கேள்வி: கூகுள் நிறுவனம் குறித்து இதுவரை அறிந்திராத, தொழில் நுட்பம் சாராத தகவல்கள் ஏதேனும் தரவும். ஓர் ஆர்வத்தில் கேட்கிறேன். ஆசிரியராக நான் என் மாணவர்களுக்குக் கூறுவேன்.
என். ஞானகுருசாமி, தேனி.
பதில்;
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். பொதுவாக நூல்களில், கூகுள் குறித்த தொழில் நுட்ப தகவல்களே கிடைக்கும். அதன் நிறுவனரின் மனிதாபிமானம், ஊழியர்கள் பால் கொண்டுள்ள அன்பு, அதன் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும் சில வசதிகள் குறித்து தெரிந்து கொள்வதும் நல்லதே. இதோ நான் படித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள புல் தரைகளில் மேய்வதற்காக, தினந்தோறும் 200 ஆடுகள் வாடைகைக்கு எடுக்கப்படுகின்றன. இவை அங்கிருக்கும் தேவையற்ற கழை தாவரங்களை உண்பதுடன், புல் தரைகளையும் சீராக்குகின்றன. இயந்திரங்களைக் கொண்டு புல்வெளிகளைச் சரி செய்வதனைப் பார்ப்பதைக் காட்டிலும், இந்த ஆடுகள் மேயும் காட்சி ஊழியர்களுக்கு உற்சாகத்தைத் தருகின்றது.
கூகுள் நிறுவன ஊழியர்களின் குழந்தைகளை, அலுவலக நேரத்தில் கவனித்துக் கொள்வதற்காக மிகப் பெரிய (Day Care Centre) குழந்தைகள் நல மையம் நடத்தப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு இதன் கணக்கு வழக்குகளைப் பார்க்கையில், ஓராண்டின் ஒரு குழந்தைக்கு 37,000 டாலர் செலவாகிறது எனக் கண்டறியப்பட்டது. அதே ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலையில் கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்ட வகுப்பு மாணவர் ஒருவருக்கு 34,000 டாலர் தான் செலவானது.
கூகுள் தேடல் கட்டத்தில் ஏதேனும் ஒரு கூட்டல், பெருக்கல் கணக்கினை டைப் செய்து விடை தேடுங்கள். உடன் விடையுடன் கூடிய கால்குலேட்டர் திரையில் கிடைக்கும். மேலும் கணக்குகளைப் போடலாம்.
2010 ஆம் ஆண்டிலிருந்து கூகுள் வாரத்திற்கு சரரசரியாக ஒரு நிறுவனம் என்ற கணக்கில் வாங்கிக் கொண்டிருக்கிறது.
கூகுள் தேடல் தளம் சென்று I want to commit suicide என்று எழுதி தேடுங்கள். உங்கள் நாட்டில், இயங்கும் தற்கொலைக்கு எதிராக அறிவுரையினை வழங்கும் தொலைபேசி எண் தரப்படும்.
“google” என்ற வினைச் சொல், ஆங்கில அகராதியில், 2006 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. கூகுள் தேடல் தளம் மூலம், எந்த ஒரு தகவலையும் தேடும் செயலைக் குறிக்கும் வினைச்சொல்லாக இதனைப் பயன்படுத்தலாம். கூகுள் நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
கூகுள் நிறுவன அமெரிக்க ஊழியர் ஒருவர், பணியாற்றும் காலத்தில் இறந்தால், அவரின் வாழ்க்கைத் துணைவருக்கு அல்லது குடும்பத்தில் சார்ந்து இருப்பவருக்கு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் ஊதியத்தில் 50% வழங்கப்படும்.

கேள்வி: வரும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும்போது, என்னிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என்னவாகும்? தற்போதைய நிலையிலேயே இயங்குமா? அல்லது இயங்காமல் போய்விடுமா? விண்டோஸ் 10ல் அது இயங்கும் என்பதை எப்படி அறிவது?
டி. ஆர். வேதபிரகாசம், தாம்பரம்.
பதில்
: மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்படாத, ஆனால், மிகச் சிறப்பாக செயல்படும் தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையே (எ.கா. Norton, Kaspersky, McAfee, Panda, AVG) பலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த சந்தேகம் வருவது இயற்கையே. இவற்றிற்குப் பதிலாக, விண்டோஸ் 10 தன்னுடைய விண்டோஸ் டிபண்டர் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பதித்துவிடுமா? என்ற கேள்வியுடன் பல வாசகர்கள் கடிதம் எழுதி உள்ளனர். இது குறித்து மைக்ரோசாப்ட் தான் மேற்கொள்ள இருக்கும் நிலையைத் தெளிவு படுத்தியுள்ளது.
நாம் கம்ப்யூட்டரில் அமைத்துள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் சந்தா காலம் தொடர்ந்து இருந்தால், அது அப்டேட் செய்யப்பட்டு தொடரும். சந்தா காலம் காலாவதியாகிவிட்டிருந்தால், அப்டேட் செய்யப்பட்டு இயக்காமல் வைக்கப்படும். ஆனால், அது சார்ந்த செட்டிங்ஸ் அமைப்புகள் அப்படியே இருக்கும். சந்தா கட்டும் வரை மைக்ரோசாப்ட் காத்திருக்கும். அதுவரை தற்காலிகமாக, தன்னுடைய விண்டோஸ் டிபண்டர் மூலம் பாதுகாப்பினை வழங்கும். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://www.microsoft.com/en-US/windows/windows-10-specifications என்ற இணையதளத்தினைக் காணவும்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்டில் குறிப்புகளைத் தயார் செய்கிறேன். குறிப்புகளை டைப் செய்கையில், தொடர்ச்சியைக் குறிக்கும் வகையில் சிறிய இரட்டைக் கோடு (=) அடையாளங்கள் சிலவற்றை டைப் செய்தால், அது உடனே அழுத்தமான முழுக் கோடாக மாறிவிடுகிறது. இதனை நீக்க முடியவில்லை. கண்ட்ரோல் + இஸட் போட்டு, இந்த இரட்டைக் கோடு அடையாளத்தினை அடுத்து ஸ்பேஸ் அமைத்தால் மட்டுமே அப்படியே நிற்கிறது. ஒவ்வொரு முறையும் இதே வேலையாக உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? நீக்க டிப்ஸ் தரவும். நான் பயன்படுத்துவது எம்.எஸ். ஆபீஸ் 2007.
என். மஹேஸ்வரி, தென்காசி.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டரில், வேர்ட் தொகுப்பில் உங்களால் அல்லது பதியப்படும்போதோ ஏற்படுத்தப்பட்ட பார்மட்டிங் செட்டிங்ஸ் அமைப்பு தான் இதற்குக் காரணம். நாம் நீண்ட படுக்கைக் கோட்டினை டைப் செய்திட ஏற்படும் காலத்தை இது குறைக்கிறது. இது நல்லதுதான். ஆனால், உங்களைப் போன்றவர்கள், இந்தக் கோடு ஏற்படக் கூடாது. சமநிலையைக் குறிக்கு இரு சிறிய கோடு நான்கு அல்லது ஐந்து டைப் செய்தாலும், அவை அப்படியே இடம் பெற வேண்டும் என எண்ணுபவர்கள், அதற்கான செட்டிங்ஸ் அமைப்பில் மாறுதல்களை ஏற்படுத்தினால் போதும். அதற்கான செயல்முறைகளைக் கீழே தருகிறேன்.
முதலில் ஆபீஸ் பட்டன் அழுத்தி Word Options கிளிக் செய்திடவும். இது வேர்ட் ஆப்ஷன்ஸ் விண்டோவினைத் திறக்கும். இதில் இடது பக்கம் உள்ளவற்றில் Proofing என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் Auto Correct Options என்னும் விண்டோவினைத் திறக்கவும். இப்போது கிடைக்கும் Auto Correct விண்டோவில், Apply as you type என்ற பிரிவில் உள்ள Border Lines என்பதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு, அனைத்திற்கும் ஓகே அழுத்தி வெளியேறவும். இனி, நீங்கள் அமைத்த சம அடையாளக் குறி (=) எத்தனை இருந்தாலும், அது நீளமான கோடாக மாறாது.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் விண்டோஸ் எசன்சியல்ஸ் இன்ஸ்டலேஷன் ஆன மாதிரி தெரியவில்லை. இதனை எப்படி இன்ஸ்டால் செய்திடலாம்? இதற்கான இணைய முகவரி என்ன?
என். மஹிமா தினகரன், கோவை.
பதில்
: நிச்சயமாக அது உங்கள் சிஸ்டத்தில் பதியப்பட்டு இருக்கும். இல்லை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். தள முகவரி http://windows.microsoft.com/en-us/windows/security-essentials-download.
விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ், விண்டோஸ் லைவ் இன்ஸ்டாலர் என இது முன்னர் பெயரிடப்பட்டு இருந்தது என்பதைத் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X