கம்ப்யூட்டர் மலரில் வாசகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பகுதி ஷார்ட் கட் கீ தொகுப்புகள் என்பதனை, தினமலர் அலுவலகத்திற்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கை தெரிவிக்கிறது. சில வாசகர்கள், இணைய தளத்தில் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளனவா என்று பலமுறை கேட்டுள்ளனர். இணையத்தில் பல தளங்களில் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தளத்தில் இவற்றை வெளியிட்டுள்ளது. பல வலைமனைகளிலும் இவை இடம் பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு தேடுதல் சாதனம் மூலம் ஷார்ட்கட் கீ தொகுப்புகளைத் தேடினால், இந்த தளங்களின் முகவரி கிடைக்கும். இருப்பினும் அண்மையில் நான் கண்ட ஒரு தளம் இந்த வகையில் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.
அதன் முகவரி: http://www. shortcutworld.com
இந்த தளத்தில் நுழைந்தவுடன், உலகின் மிகப் பெரிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளின் தகவல் தளம் என்ற விளக்கத்துடன் நமக்கு இந்த தளம் கிடைக்கிறது. இதில் பயர்பாக்ஸ், குரோம், வேர்ட் 2010, எக்ஸெல், போட்டோஷாப், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஜிமெயில், ஒன் நோட் 2010, உபுண்டு டெஸ்க்டாப், வி.எல்.சி. மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா பிளேயர் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களுக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த பிரிவுகள் காட்டப் படுகின்றன. இவற்றில் கிளிக் செய்து, சம்பந்தப் பட்ட தளங்களைப் பெற்று, தகவல்களைப் பெறலாம்.