அன்புடன் அந்தரங்கம்! (அனுராதா ரமணன்)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2010
00:00

அன்புள்ள அம்மாவிற்கு—
என் வயது 32. திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. எனக்கு இரண்டு மகன்கள். முதல் மதிப்பெண் பெறும் அளவிற்கு படிக்கின்றனர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, அழகான, எனக்கு பொருத்தமான கணவர் கிடைத்துள்ளார். என் கணவருக்கு அம்மா, அண்ணன், அக்கா மட்டும்தான். அக்கா திருமணம் ஆனவர். என் கணவரின் அண்ணனுக்கு, உடலில் சிறு நோய் காரணமாக, எங்கள் திருமணம் முடிந்து, இரண்டு வருடம் கழித்து, அவர் திருமணம் நடந்தது. எனக்கு அம்மா, அப்பா, தம்பி மட்டும்தான்.
எனக்கு திருமணமாகி, ஒரு மாதம் வரை தான், என்னிடம் நன்றாக பேசினார் என் மாமியார்; அதன்பின், என்னென்ன கெட்ட வார்த்தைகள் கூற முடியுமோ, அத்தனையும் பேசினார். நான், என் குழந்தையையும் சுமந்து, மாமியாரின் பேச்சையும் பொறுத்துக் கொண்டேன். என் கணவரின் அண்ணனும், நிறைய சண்டை போடுவார்; என் கணவரின் அண்ணி, எல்லாவற்றுக்கும் கணக்கு பார்ப்பாள்.
இப்படி இருக்கையில், ஒரு மொட்டை கடிதம் வந்தது. அதில், நான் திருமணத்திற்கு முன் வேலை பார்த்த இடத்தில், ஒருவரை காதலித்தேன் என்றும், என் கணவரின் அண்ணன் திருமணம் நடக்கக் கூடாது என்று, நான் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னதாகவும் எழுதியிருந்தது. அதில், என் கையெழுத்து, ஜெராக்ஸ் எடுத்து போடப்பட்டிருந்தது.
இதற்கு பிறகு, என் மாமியார், என் குழந்தையை, "இவன் யாருக்கு பிறந்தானோ?' என்று, என் மனம் நோகும்படி, எவ்வளவு பேச முடியுமோ, அந்த அளவுக்கு பேசுகிறார். "இன்னும் ஏன் இங்கு இருக்கிறாய்... என் சொந்த வீட்டை விட்டு வெளியே போ...' என்று கூறுகிறார். எத்தனை நாளைக்குத் தான் பொறுத்துக் கொண்டு வாழ்வது. நாங்கள் ஒரே வீட்டில், தனித் தனியாக தான் தற்போது வாழ்ந்து வருகிறோம். என் கணவர் என்னை சிறிதும் தவறாக நினைக்கவில்லை. தன் அம்மாவின் குணத்தை அறிந்து, மிகவும் வெட்கப்படுகிறார். என் மாமியார் பேச்சை எதிர்த்து, பதில் பேசாமல் இருப்பது தவறா?
எங்களுக்கு கடையும், வீடும் ஒன்று தான். தொழிலை இடம் மாற்றுவது மிகச் சிரமம். கடன் வாங்கித் தான், இந்த இடத்தை, விலைபேசி முடித்தோம்; அவருடைய அண்ணனுக்கு, தனியாக செல்ல பணம் கொடுத்தோம். என் பிரச்னை என்னவென்றால், என் குடும்பத்தில் இருந்து, என் அம்மா, அப்பா, தம்பி யாருமே வந்து என்னை பார்க்க முடியாத சூழ்நிலை. நான், என் மாமியார் பேச்சிற்கு பதில் பேசவா... இல்லை என் வீட்டை வேறு இடம் மாற்றிக் கொள்ளவா? மொட்டை கடிதத்திற்கு என்ன தீர்வு? உங்கள் பதில் தான், என் குடும்பத்தை கவுரவப்படுத்த முடியும். என் மீது என்ன தவறு? நான் பெண்ணாக பிறந்து, திருமணம் செய்து கொண்டது தானா? உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. பல மாமியார்கள், மகனை, தங்களின் கைக்குள் வைத்துக் கொள்ள, மருமகளைப் படாதபாடு படுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். அன்பினால், அகிலத்தையே ஆள முடியும் என்பது தெரியாதவர்கள்.
ஆனால், கண்ணம்மா... உன் கணவர், உன்னிடம் பிரியமாகவும், தன் தாய் மற்றும் அண்ணியின் அடாவடித்தனம் தெரிந்தும் இருக்கிறாரே... அந்த மட்டுக்கும், நீ புண்ணியம் செய்திருக்கிறாய். "கொண்டவன் துணையிருந்தால், கூரை ஏறிச் சண்டை போடலாம்...' என்று, ஒரு பழமொழியே உண்டு; அதற்காக, நீ யாருடனும் சண்டையெல்லாம் போட வேண்டியதில்லை. உன்னுடைய தூய்மை பற்றியும், உன் மகன் - தன் மகன் தான் என்பதும் உன் கணவருக்குத் தெரியும். அவர், அது பற்றி ஒரு போதும் உன் மேல் சந்தேகப்படவில்லை என்ற பட்சத்தில், யாருக்கும் நீ பயப்படத் தேவையில்லை. இப்படி தினந்தோறும் அசிங்கமாய் சண்டை போடும் வீட்டில், நீ குடியிருக்க வேண்டியதில்லை என்று நான் சொல்லி விடுவேன். கடையும், உன் மாமியார், கணவரின் அண்ணன் குடும்பமும் ஓரிடத்தில் இருக்க, நீ வேறிடம் பார்த்துப் போவது, தற்காலிக நிம்மதியை வேண்டுமானால் தருமே தவிர, பிற்காலத்தில், அனாவசிய பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
"துஷ்டரைக் கண்டால், தூர விலகு!' என்பது அந்தக் கால பழமொழி; "எதிரியை, எப்போதும் எதிரிலேயே வை!' என்பது புது மொழி!
உண்மை... நீ எங்கோ கணவர், குழந்தைகளுடன் இருந்து கொண்டு, மாய்ந்து, மாய்ந்து குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருப்பாய். ஆனால், தினமும் கடையை கவனிக்கப் போகும் உன் கணவர், உன் மாமியார், அண்ணி இவர்களோடுதான், நாளின் பெரும் பகுதியைக் கழிக்க வேண்டியிருக்கும். "அடி மேல், அடி வைத்தால், அம்மியும் நகரும்...' என்பதும், "கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும்...' என்பதும் கூட, நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பழமொழிகள்.
அதனால், வீட்டை மாற்றாதே... அங்கேயே அடமாய் உட்கார். உன் கணவரிடம் இக்கடிதத்தைக் காட்டு. தாராளமாய் உன் தம்பி, தாயாரை அழைத்து வந்து வைத்துக் கொள். பயந்தால்தான் இவர்களுக்கு, குஷி பொங்கும். "இந்த வீட்டில், அவர்களுக்கும் வந்து தங்க உரிமை உண்டு!' என்பதை, உன் கணவரை விட்டுக் கூறச் சொல். அவர் பாட்டுக்கு, "பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்...' என்பது போல, மேம்போக்காக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கட்டத்தில், குரலை உயர்த்தித்தான் ஆக வேண்டும். அதிகம் பேசாதே... ஆனால், பேசுகிற ஒவ்வொரு சொல்லும், பொட்டில் அறைந்தாற்போல் இருக்க வேண்டும்.
மறுபடி மொட்டைக் கடிதத்தைப் பற்றியோ அல்லது உன் குழந்தை யாருக்குப் பிறந்தது என்றோ யாராவது பேசினால், குடும்ப கவுரவத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, "போலீசுக்குப் போய் விடுவேன்!' என்று அழுத்தமாய் சொல். உன் குழந்தை யாருக்குப் பிறந்தது என்பதை நிரூபிக்க இக்காலத்தில் முடியும். அப்படி நிரூபித்தால், உன் மாமியாரும், ஓரகத்தியும் வீட்டைக் காலி செய்கின்றனரா எனக் கேள்.
கவனி... இப்படி கேட்பதற்குப் பெயர் சண்டையில்லை; உரிமை. குரல் ஓங்காவிட்டாலும் கூட, உரிமையின் தொனி வலிமை வாய்ந்ததுதான். மறக்காதே! வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
அன்புடன், அனுராதா ரமணன்.
* * *


அறிவிப்பு!
வாரமலர் இதழில், "அன்புடன் அந்தரங்கம்' பகுதி மூலமாக, பெண்களுக்கும், ஆண்களுக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்த எழுத்தாளர் அனுராதா ரமணன், மே 16ம் தேதி, இயற்கை எய்தினார். அவர், உடல் நலத்துடன் இருக்கும்போது, எழுதித் தந்த நான்கு கடிதங்களுக்கான ஆலோசனைகள், ஜூன் 20, 2010 வரை வெளியாகும். பிரச்னைகளுக்கு தீர்வு காண, அடுத்தவர் தயாராகிறார். வாசகர்கள், வழக்கம்போல் கடிதங்களை எழுதி அனுப்பலாம்.


— பொறுப்பாசிரியர்.
* * *


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X