கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2015
00:00

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பிரிமியம் சிஸ்டம் இயங்குகிறது. இதனுடன் சேர்த்து மைக்ரோசாப்ட் எசன்சியல்ஸ் செயலியை ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகப் பயன்படுத்தி வருகிறேன். இன்னும் ஏதாவது ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? நீங்கள் தரப்போகும் டிப்ஸுக்கு நன்றி.
கே.சிவக்குமார், சேலம்.
பதில்
:நீங்கள் குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் எசன்சியல்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனமே சிஸ்டத்துடன் வழங்கியது. இதனைத் தகவல் தொழில் நுட்ப துறையில், சுதந்திரமாகச் செயல்படும் ஆய்வு நிறுவனம் ஒன்று, அதன் திறன் குறித்து ஆய்வு செய்தது. இதனைச் சரியான ஒன்று என சான்றளித்தது. ஆனால், மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறந்தது என்று கூறவில்லை. 60 மால்வேர் தொகுப்புகளில், 59 ஐக் கண்டறிந்தது. இவற்றில் 53 ஐ நீக்கியது. மொத்தப் பயன்பாட்டில், 88% சிறப்பாக இருந்தது எனச் சான்றளித்தது.
வைரஸ் தொகுப்புகளை நீக்குவதில், 30ல், 26 தொகுப்பினைக் கண்டறிந்து நீக்கியது. Avast, AGV, Avira, Bitdefender, Kaspersky, Malwarebytes மற்றும் Norton. ஆகிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் இது ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இவை அனைத்துமே வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைக் கண்டறிந்து நீக்குவதில் சிறப்பாகச் செயல்பட்டன. பல தொகுப்புகள் மைக்ரோசாப்ட் எசன்சியல்ஸ் தொகுப்பினைக் காட்டிலும் கூடுதல் பயன்பாட்டைத் தந்தன. எனவே, நீங்கள், மேலே காட்டப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு
ஒன்றையும் பதிந்து இயக்கிப் பார்க்கலாம்.

கேள்வி: சமீபத்தில் நான் சில வட மாநிலங்களுக்கு டூர் சென்று வந்தேன். எங்கும் மக்கள், பல வகை ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி இணையம் பார்ப்பதனைப் பார்த்தேன். போன்களில் பிரபலமானவை முதல் சாதாரண ஸ்மார்ட் போன் வரை இருந்தன. இவர்கள் என்ன தான் பார்க்கிறார்கள்? எந்த மாநிலத்தவர் அதிகம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி இணையம் பார்க்கின்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம், சரியான பதில்கள் கிடைக்குமா?
என். சந்தியா ராஜன், திருவனந்தபுரம்.
பதில்:
நல்ல கேள்வி. யாரைப் பார்த்தாலும், ஸ்மார்ட் போனைக் கையில் வைத்து, என்னமோ செய்கிறார்கள்; அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று பலருக்கும் கேள்வியும், தெரிந்து கொள்ள ஆசையும் வரலாம். உங்களுக்கான சரியான பதிலை, அண்மையில், யு.சி. வெப் (UCWeb) என்னும் நிறுவனம் தன் ஆய்வின் மூலம் தந்துள்ளது. சுருக்கமாக அவற்றைத் தருகிறேன்.
1. 65% பேர் ரூ.10,000க்கும் குறைவான விலையுள்ள ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி இணையத்தைப் பார்க்கின்றனர்.
2. இவர்களில் 45% பேர், ரூ.10,000க்கு மேல் விலையுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்குவதற்காக இணையத்தைத் தேடுகின்றனர்.
3. இவர்களில் 23.8% பேர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; அடுத்து டில்லி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 15.8%. மேற்கு வங்காளத்தவர்கள் 14.1%. கர்நாடகா 5.8%.
4. இன்னும் உற்று நோக்கினால், மும்பை நகரத்தைச் சேர்ந்தவர்கள், முதல் இடத்தில் 17.28% பேருடன் மொபைல் போனில் இணையத்தைப் பயன்படுத்துப்வர்களாக உள்ளனர். டில்லி 16.96%. கொல்கத்தா 11.57%, சென்னை 8.07%, மற்றும் பெங்களூரு 5.94%.
5. இவர்களில் 80% பேர் 25 வயதிற்குட்பட்டவர்கள். 90% பேர் ஆண்கள்.
6. 70% பேர் தங்கள் போன்களில் அதிக பட்சம் 20 அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளனர்.
7. இந்த அப்ளிகேஷன்களைப் பொறுத்தவரை, 72% பிரவுசர்களைப் பயன்படுத்துகின்றன. 55.7% சமுதாய தளங்களைப் பயன்படுத்துகின்றன. விளையாட்டுகளைப் பார்ப்பவர்கள் 45.9%. உடனடி செய்தி அனுப்புபவர்கள் 37.1%.
8. இணையம் பயன்படுத்துவதில், டவுண்லோட் முதல் இடத்தையும், பேஸ்புக் பயன்படுத்துவது இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளன. தேடல், போட்டோ பார்த்தல், வர்த்தகம் மற்றும் செய்திகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன.
9. டவுண்லோட் செய்வதில், இசைப் பாடல்கள் முதல் இடத்தையும், விடியோ அடுத்த இடத்தையும், போட்டோ மற்றும் அப்ளிகேஷன்கள் அடுத்த இடங்களையும் கொண்டுள்ளன.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில், Hibernate ஆப்ஷன் கிடைப்பதில்லை. முன்பு வந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் மறைந்துவிட்டது. எதனால், இப்படி ஆனது? என மூளையைக் குழப்பிக் கொண்டதுதான் மிச்சம். என்ன செய்தும் கிடைக்கவில்லை. மீண்டும் கிடைக்க என்ன செட்டிங்ஸ் திருத்த வேண்டும்?
ஆ. ரத்தினவேல், சிவகாசி.
பதில்:
உங்கள் ஸ்டார்ட் மெனுவில், ஷட் டவுண் (Shutdown) பட்டனை அழுத்தினால் கிடைக்கும் ஆப்ஷன்களில் ஒன்றாக ஹைபர்னேட் இருக்கும். இது மறைந்துவிட்டது என வாசகர் ஒருவர் கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை. இதனை எப்படி மீண்டும் பெறுவது எனப் பார்ப்போம். ஸ்டார்ட் மெனு தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து தேடவும். Cmd என ஒரு விடை கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Run as Administrator என்பதில் கிளிக் செய்திடவும். உடனே, உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறீர்களா? என்று ஒரு கட்டத்தில் கேள்வி தரப்படும். Yes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் command prompt திறக்கப்படும். அதில், powercfg /hibernate on என டைப் செய்திடவும். எண்டர் செய்திடவும். இனி, நீங்கள் ஷட் டவுண் மெனு சென்றால், அதில் ஹைபர்னேட் ஆப்ஷன் இருப்பதனைக் காணலாம்.

கேள்வி: விண்டோஸ் 10க்குப் பின்னர், மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரப்படும் பாதுகாப்பிற்கான பேட்ச் பைல் தரப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதே. அப்படியானால், மாற்றங்களோ, பாதுகாப்பு வேண்டும் நிலையோ ஏற்படாதோ?
ஆர். சிவநேசன், திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி. பாதுகாப்பினைப் பலப்படுத்தும் பேட்ச் பைல் தரப்படவில்லை எனில், பாதுகாப்பு தேவைப்படாதா? அல்லது வேறு வழிகளில் பாதுகாப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. மாதந்தோறும் பாதுகாப்பு பைல் தரப்படும் வழக்கம் இனி இருக்காது. ஆனால், தேவைப்படும் போதெல்லாம், பாதுகாப்பு பேட்ச் பைல் வழங்கப்படும். எனவே, இனி சிஸ்டம் பேட்ச் பைல் அப்டேட் செய்வதனை, நாம் கட்டாயம் வாரம் ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் சிஸ்டம் அப்டேட் ஆகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

கேள்வி: கம்ப்யூட்டரில் ஒவ்வொரு வகை பைலையும், குறிப்பிட்ட செயலியின் மூலம் திறக்கிறோம். அதுவே மாறா செயலியாக, அந்த வகை பைலுக்கு அமைந்துவிடுகிறது. இதனை மாற்ற வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்? எங்கு சென்று செட்டிங்ஸ் மாற்றி அமைக்க வேண்டும்?
பொ.சிவசுப்ரமணியன், ஹோசூர்.
பதில்
: பைல் வகை ஒன்றினைப் புதிய செயலி ஒன்றின் வழியாகத் திறந்து பயன்படுத்த விரும்புகிறீர்கள். அதனையே மாறா நிலை புரோகிராம் ஆகவும் அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
பைல் பெயர் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open With என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பைலைத் திறந்து இயக்கக் கூடிய புரோகிராம்களின் பட்டியல் காட்டப்ப்படும். அதிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கலாம்.
அந்த வகை பைலை, எப்போதும் ஒரு குறிப்பிட்ட புரோகிராம் தான் திறக்க வேண்டும் என விரும்பினால், அதே Open With மெனுவில், Choose default programs என்பதில், நீங்கள் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், அடுத்து மாற்றப்படும் வரையில், அதே புரோகிராம் தான், அந்த வகை பைலைத் திறக்கும்.

கேள்வி: சென்ற வாரம் முழுவதும், பிரதமர் மோடி அவர்களின் “டிஜிட்டல் இந்தியா” குறித்து நிறைய செய்திகள் வந்தன. இந்த திட்டத்தின் செயல்பாடுகளைச் சுருக்கமாகக் கூற முடியுமா? என்னன்னவோ எல்லாம் எழுதுகிறார்கள். தெளிவாகவும் துல்லியமாகவும் எதுவும் புரியவில்லை. அதனால் தான் இந்தக் கேள்வி.
எம். ஜாய்லின் ஏஞ்சல், தாம்பரம்.
பதில்:
நல்ல கேள்வி தான். அவசியம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைக் கேட்டுள்ளீர்கள். நம் பிரதமர் மோடி இது குறித்து சுருக்கமாகவும் தந்துள்ளார். அவரின் உரையிலிருந்தே தருகிறேன்.
1. இ-~கவர்னன்ஸ் எனப்படும், இணைய வழி நிர்வாகம் இனி முதன்மை பெறும். மக்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை, இணையம் வழி பெறலாம்.
2. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் 'Design in India' என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். Make in India போல இதுவும் பிரபலப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும். பல்வேறு மொழியினருக்கும், பல வயது நிலைகளில் உள்ளவர்களுக்குமான டிஜிட்டல் திட்டங்கள் உருவாக்கப்படும். 125 கோடி மக்களுக்குத் தேவையானது வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்.
3. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
4. பேங்க் லாக்கர்கள் போல, டிஜிட்டல் கிட்டங்கிகள் உருவாக்கப்படும். இங்கு மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கலாம்.
5. இனிமேல், பைபர் ஆப்டிகல் நெட்வொர்க் எங்கெல்லாம் பயன்படுத்தக் கிடைக்கிறதோ, அங்கு தான் வாழ விருப்பப்படுவார்கள்.
6. ஒரு குழந்தை கூட டிஜிட்டல் பவர் என்றால் என்னவென்று உணர்ந்து கொள்ளும். குழந்தைகள், உங்கள் ஸ்மார்ட் போனைப் பறித்து, என்ன இதில் நெட் கனெக்ஷன் இல்லையா எனக் கேட்கும்.
7. நான் (பிரதமர்) கனவு காணும் டிஜிட்டல் இந்தியாவினை, இந்த உலகம் அடுத்த மாற்றம் என்ன என்று எதிர்பார்த்துப் பார்க்கும்.
8. இந்தியா, உயர்வழி டிஜிட்டல் சாலைகளால் இணைக்கப்படும். 120 மக்களும் இணைக்கப்படுவார்கள். புதுமைகள் பல இதன் மூலம் அறியப்படும்.
9. புதிய கண்டுபிடிப்புகள் மூலம், இந்தியா இணைய வழி பாதுகாப்பினைப் பலப்படுத்தும். இந்த ரத்தம் சிந்தாத யுத்தத்தில்,
இந்தியா முதல் வெற்றியைப் பெறும்.
10. இந்தியாவில் 25 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். ஆனால், இணையத்தை இன்னும் பயன்படுத்தாதவர்கள் அதிகமாக உள்ளனர். டிஜிட்டல் இந்தியா இந்த இடைவெளியை நீக்கும்.

கேள்வி: யு ட்யூப் தளத்தில் உள்ள விடியோ படங்களை எளிதாகக் காப்பி செய்ய முடிகிறது. இதே போல, பேஸ்புக்கில் தரப்படும் விடியோ படங்களை காப்பி செய்திட என்ன சாப்ட்வேர் வேண்டும்? ஆன்லைனில் இதற்கான வசதி உள்ளதா?
என். காமராஜ், புதுச்சேரி.
பதில்
: பேஸ்புக் தளத்திற்கு முதலில் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் திறந்து, பக்கத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் காப்பி செய்ய வேண்டிய விடியோ உள்ள இடம் செல்லவும். இதில் குறிப்பிட்ட வீடியோ பைலை, ரைட் கிளிக் செய்து, மெனு மூலம், தனி டேப்பில் திறக்கவும். இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும். பின்னர், http:// www.downvids.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்
கட்டத்தில்,மேலே சொல்லியபடி காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்து அருகே உள்ள download” என்பதில் கிளிக் செய்தால், அந்த வீடியோ பைலை டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். அந்த இணைப்பில் அழுத்தி, பின்னர் save as linkஎன்பதில் அழுத்தினால், வீடியோ பைல் சேவ் செய்யப்படும்.
இன்னொரு வழியும் உள்ளது. குறிப்பிட்ட வீடியோ பைல் காட்டப்பட்டுள்ள பக்கத்தினைத் திறக்கவும். அங்கு முகவரி கட்டத்திற்கு செல்லவும். அங்கு உள்ள http://www.facebook.com என்பதனை http://m.facebook.com என மாற்றவும்.
இது பேஸ்புக்கின் மொபைல் தளத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். விடியோ பைல் இயக்கப்படுகையில், விடியோ காட்சி மீது ரைட் கிளிக் செய்து, "save video as" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி, இந்த வீடியோ எந்த இடத்தில் சேவ் செய்யப்பட வேண்டுமோ, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X