உறவைத்தேடி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2015
00:00

வாசலில் கிடந்த காலணிகள், வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருப்பதை தெரிவித்தது. 'யாராக இருக்கும்...' என்ற யோசனையுடன் தாழ் போடாமல், சாத்தியிருந்த கதவை திறந்து, வீட்டிற்குள் நுழைந்தான் வினோத்.
சோபாவில் அமர்ந்து, தொலைக்காட்சியில் கவனம் பதித்திருந்தவன், ஆள் அரவம் கேட்டு நிமிரவும், மின்சாரம் தாக்கியது போலானான் வினோத்.
அவனையும் அறியாமல், ''பிரபு அண்ணா...'' என வாய் முணுமுணுத்தது. கண்கள் அனிச்சையாக பிரபுவின் நெற்றியை நோக்க, வலது புருவத்தில் தெரிந்த தழும்பை கண்டவுடன், குற்ற உணர்ச்சி தலை தூக்கியது.
வினோத்தை கண்ட பிரபுவின் முகம் மலர்ந்து, ''எவ்ளோ வருஷம் ஆச்சு... ஒல்லிகுச்சி வினோத், இன்னைக்கு தொப்பை போட்டு குண்டா ஆகிட்ட,'' என்று சொன்னவன், இரண்டே எட்டில், வினோத்தை கட்டிக் கொண்டான்.
பதில் சொல்லாமல், பிரபுவின் கைகளை நாசுக்காய் விலக்கி, சித்ராவை தேடி சமையலறைக்கு சென்றான். சித்ராவுடன் சமையற்கட்டில் இருந்தவள், பிரபுவின் மனைவி என்று புரிந்தது.
''எப்போ வந்தீங்க... காலிங் பெல் சத்தமே கேட்கல... அண்ணன் கதவை திறந்தாரா?''என்று கேட்டாள் சித்ரா.
''கதவு திறந்தே இருந்துச்சு.''
''ஏங்க... இவங்க ரமா; எனக்கு அக்கா முறை, தூரத்து உறவு; அதோட இவங்க உங்க அண்ணன் மனைவி,''என்றாள்.
சம்பிரதாயமாக ரமாவைப் பார்த்து தலையசைத்தவன், ''எனக்கு காபி எடுத்துட்டு வா,'' என்று கூறி, தன் அறைக்கு சென்றான்.
''உங்க அண்ணன், நீங்க எப்போ வருவீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தார். அவர் கூட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருங்க. நான் காபியோட வரேன்,'' என்று, அவனை சகஜமாக்க முயல, ''சொன்னதை செய்,'' என்று அவளை முறைத்தான்.
சிறிது நேரத்தில் காபியுடன் வந்த சித்ரா, அருகிலிருந்த மேஜையில் காபி டம்ளரை வைத்தபடி, ''சூடா இருக்கும்போதே குடிங்க,'' என்றாள்.
''என்ன கிண்டலா... சூடா இருக்கேன்னு சொல்லிக் காட்டறியா...''
''எனக்கு சமையல் வேலை இருக்கு; உங்ககிட்ட பேச நேரமில்லை,'' என்று வெளியே செல்ல எத்தனிக்க, கை பிடித்து தடுத்தான்.
''அவங்கள ஏன் உள்ள விட்டே...''
''புரிஞ்சு தான் பேசறீங்களா... அவர், உங்க சொந்த பெரியப்பா பையன். இத்தனை நாளா கோல்கட்டாவில் சொந்தம், பந்தம் எதுவும் இல்லாம தனிச்சு இருந்தவங்க, இப்போ தம்பின்னு உங்கள பாக்க வந்திருக்காங்க. வீடு தேடி வந்தவங்கள, துரத்தியா விட முடியும்... இதான், நம்ம பண்பாடா...''
''ஏய்... எங்க அப்பாக்கும், பெரியப்பாக்கும் இருந்த பகை உனக்கு தெரியாதா?''
''ஆமாம் பொல்லாத பகை. பாக பிரிவினையில, வீடு, உங்க பெரியப்பா பேருக்கு போச்சு; நிலம் உங்க அப்பாக்கு வந்துச்சு. உங்கப்பா வீட்டை கேட்டு பிரச்னை செய்தார்; அதுக்கு உங்க பெரியப்பா ஒத்துக்கல. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதையே பிடிச்சுகிட்டு தொங்கப் போறீங்களோ...''
''அப்படியில்ல; பெரியப்பா எங்கேயோ தானே இருந்தார்... அவர் விட்டு கொடுத்துருக்கலாம்ல...''
''எல்லாத்தையும் உங்களுக்கே சாதகமா பாருங்க... மத்தவங்களப் பத்தி கொஞ்சமும் நினைக்காதீங்க. கோல்கட்டா பக்கம் பாங்கில் வேலை பாக்கறவர், கிராமத்துல நிலத்தை வச்சுக்கிட்டு என்ன செய்றதுன்னு வீட்டை விட்டு கொடுத்திருக்க மாட்டார்.
''உங்கப்பா பக்கத்து டவுனில் தானே வாத்தியாரா இருந்தார். அவரால நிலத்தை ஈசியாக பராமரிக்க முடியும்ன்னு உங்க பெரியப்பா நினைச்சு இருக்கலாம்ல,''என்று சித்ரா கூறியதும், 'ஒரு வேளை சித்ரா சொல்வது தான் சரியோ... இத்தனை ஆண்டுகளாய், பெரியப்பா அநியாயம் இழைத்து விட்டதா நினைச்சுக்கிட்டிருந்தது தவறோ...' என்ற எண்ணம் எழுந்தது.
பெரியப்பாவின் மேல் துவேஷத்தை அப்பா வளர்த்துக் கொண்டதும் இல்லாமல், பகை உணர்வை தனக்கும் வளர்த்து விட்டு விட்டாரே என தோன்றிய வருத்தம், பெருமூச்சாய் வெளி வந்தது.
பாக பிரிவினை முடிந்த மறு ஆண்டு, ஊர்த் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார் பெரியப்பா. குளிப்பதற்காக குளத்துக்கு சென்று கொண்டிருந்தான் வினோத்; எதிரே குளித்து முடித்து வந்தான் பிரபு. ஏற்கனவே, அப்பாவின் போதனையில் பகை உணர்ச்சி தலைக்கேறியுள்ள நிலையில், என்ன செய்கிறோம் என்பதை உணராமல், கீழே கிடந்த கல்லை எடுத்து, பிரபுவை நோக்கி எறிந்தவன், திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு ஓடி வந்து விட்டான்.
பிரபுவிற்கு நெற்றியிலிருந்து ரத்தம் கொட்ட, அப்பாவிடம் கத்திவிட்டு போனார் பெரியப்பா. ஆனால், அதற்காக, அப்பா அவனை கண்டிக்கவில்லை. எதிரியின் பிள்ளை அடிப்பட்டதில், அவர் முகத்தில் சந்தோஷமே தெரிந்தது. அம்மா தான் வருத்தப்பட்டாள். உறவு வேண்டும் என்று அறிவுரை சொன்னாள்.
அதன்பின், சில நெருங்கிய உறவினர் வீட்டு நல்லது, கெட்டதற்கு பெரியப்பா மட்டும் வருவார். அவர் வந்தது தெரிந்தால், அந்த பக்கமே போக மாட்டார் அப்பா. அத்துடன், வீட்டினரையும் போக விடமாட்டார். பிரபுவின் திருமணத்திற்கு, அழைப்பு அனுப்பியிருந்தார் பெரியப்பா. ஆனால், நேரில் வந்து அழைக்கவில்லை என்று பெரியப்பாவை திட்டி, அம்மாவையும் திருமணத்திற்கு போக கூடாதுன்னு, உத்தரவு போட்டு விட்டார். இவன் திருமணத்திற்கு மறந்தும், பெரியப்பாவிற்கு அழைப்பு அனுப்பவில்லை.
''என்ன யோசனை... முதல்ல வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடுங்க. நியாயமா பாத்தா பிரபு அண்ணன் தான், நீங்க செய்த காரியத்துக்கு உங்களோட பகையுணர்ச்சியோட இருக்கணும். அவரே எல்லாத்தையும் மறந்து வந்து இருக்கார், உங்களுக்கு என்ன...'' என்றாள்.
''நீ ரொம்ப பேசற சித்ரா... எதிர்பாக்காம பிரபு அண்ணனை பாத்ததில் ஒண்ணும் புரியல. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல, 25 வருஷமா அவரை பாக்கலை. அப்பா வளர்த்து விட்ட பகை உணர்வு, இன்னும் மனசுக்குள்ள இருக்கு போல! அண்ணன் சகஜமா என்கிட்ட பேசற மாதிரி, என்னால சட்டுன்னு ஒட்டிக்க முடியல,''என்றான்.
''அவர் மேல உங்களுக்கு பாசம் இல்லாமலா, இத்தனை வருஷம் கழிச்சும், அவரை அடையாளம் கண்டுபிடிச்சீங்க! அண்ணன்னு மரியாதை கொடுத்து, நீங்க சொல்லும் போதே, உங்க மனசுல அவர் மேல பாசம் இருக்குன்னு தெரியுது. சின்னப் பையன்களா இருக்கும்போது, ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுவீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்,'' என்றாள் சித்ரா.
விடுமுறைக்கு பிரபு ஊருக்கு வரும்போதெல்லாம், இருவரும் சேர்ந்து விளையாடியது கண் முன் நிழலாடியது. பிரபுவுக்கும், இவனுக்கும் மூன்று வயது தான் வித்தியாசம். அதனால், விளையாடுவதில் இருவர் விருப்பமும், ஒரே மாதிரி இருக்கும். இவன் நண்பர்களுடன், அவனும் சேர்ந்து விளையாடுவான்.
''இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்க போறீங்க... உங்க வீட்டிலும் சரி, என் வீட்டிலும் சரி, நாம ரெண்டு பேருமே ஒத்த பசங்க. உடன் பிறந்தவங்க கிடையாது. நமக்கும், ஒரே பொண்ணா போயிட்டா... நாளைக்கு அவளுக்குன்னு உறவு யாருமே வேணாமா...'' என்றாள் சித்ரா.
'பெரியவங்களுக்குள் பிரச்னைன்னா, அது அவங்களோட போகாம, ஒற்றுமையா இருந்த எங்களையும் பிரிச்சுட்டாங்களே... இப்ப பிரபுவிற்கு, எத்தனை குழந்தைகள், ஆணா, பெண்ணான்னு கூட தெரியாத நிலைமை வந்துருச்சே...' என்று நினைத்தவனுக்கு கோபமும், வருத்தமும் ஒரு சேர எழுந்தது.
அவன் பார்வையை உணர்ந்த சித்ரா, அவன் கைபிடித்து, ''போங்க... போய் பேசுங்க; உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து காபி எடுத்துட்டு வரேன்...'' என்று கூறி, கணவன் குடிக்காததால் ஆறிப்போன காபி டம்ளரை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
எப்படி துவங்குவது என்று குழம்பியவாறே வந்தவன், பிரபுவின் கனிவான பார்வையில், தலை தாழ்த்தினான்.
''வினோத்... இன்னுமா நீ பழசை நினைச்சுக்கிட்டு இருக்க...'' என்ற பிரபுவை நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில் மன்னிப்பு கோரும் பாவனை இருந்தது. அருகில் வந்து பாசமாய் அவன் கைகளைப் பற்றினான் பிரபு. மவுனமாகவே சில நொடிகள் கரைந்தது.
அப்போது, மற்றொரு அறையில் இருந்து வந்த பிள்ளைகளின் சிரிப்பொலி, வினோத்தின் கவனத்தை இழுத்தது. சத்தம் வந்த அறையை நோக்கி திரும்பியவனிடம்,
''நாம விளையாடுவோமே... ராஜா, ராணி, திருடன், போலீஸ் விளையாட்டு. அதை பசங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். எப்பவும் கம்ப்யூட்டர், ஐ - பாட்ன்னு தானே இருக்காங்க... அதான், கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த விளையாட்ட சொல்லிக் கொடுத்தேன்,'' என்று பிரபு சொல்லவும், வினோத்திற்கு சிரிப்பு வந்தது.
சட்டென புரிந்து கொண்ட பிரபு, ''இன்னும், நீ எதையும் மறக்கலயாடா?'' என வினவ, அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் பலமாக சிரித்து விட்டான்.
''என்ன சிரிப்பு சத்தம் பலமா இருக்கு...'' என்று கேட்டபடியே, காபி கோப்பைகளுடன் சித்ராவும், ரமாவும் வந்தனர்.
''சொல்லிடவா,'' என்று, பிரபுவை பார்த்து வினோத் கேட்க, ''வேணாம்டா ப்ளீஸ்...'' என்று கெஞ்சினான் பிரபு. இறுக்கம் தளர்ந்து அண்ணனும், தம்பியும் விளையாடுவது கண்டு, சித்ராவுக்கு நிம்மதி பிறந்தது.
''ப்ளீஸ்... சொல்லுங்க, நாங்களும் சிரிப்போம்ல,'' ரமா கேட்கவும், பிரபுவைப் பார்த்து கண்ணடித்தான் வினோத்.
''உங்க அண்ணி கேட்கறாங்க இல்ல... சொல்லுங்க என்னான்னு...'' என்றாள் சித்ரா.
''அது ஒண்ணுமில்ல சித்ரா, ஒரு நாள் நாங்க எல்லாரும் ராஜா, ராணி, திருடன், போலீஸ் விளையாடினோமா... அண்ணனுக்கு இந்த விளையாட்டப் பத்தி தெரியாததனால, சீட்டுல அண்ணனுக்கு திருடன்னு வந்ததும், 'ஐயோ... நான் திருடன்னு தெரிஞ்சா எங்கப்பா அடிப்பாரே'ன்னு ஒரே அழுகை. சமாதானம் செய்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு,'' என்றான் சிரித்துக் கொண்டே!
''இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா... உன் கூட திரும்பவும் பேச மாட்டோமான்னு எவ்வளவு ஏங்கி இருக்கேன்,'' என்றான் பிரபு.
''நம்ம பிரிவுக்கு காரணமா இருந்த சொத்தை, அப்பாவும், பெரியப்பாவும் அவங்கவங்க தேவைக்காக எப்போவோ வித்தாச்சு. இப்போ அவங்களும் இல்ல. ஆனா, நாம தான் கடைசியில, அவங்களால ஏற்பட்ட பகையை சுமந்துகிட்டு, சேர்ந்து சந்தோஷமா இருந்திருக்க வேண்டிய எத்தனையோ தருணங்களையும், ஒருத்தொருக்கொருத்தர் ஆதரவா இருந்திருக்க வேண்டிய சமயங்களையும் இழந்துட்டோம்,''என்றான் வினோத்.
''ஆமாண்டா, இவ்ளோ காலமும் யாருமே இல்லாத மாதிரி இருந்துட்டோம். சித்தப்பாவும், சித்தியும் விபத்தில் இறந்த சமயத்தில, உன்னை பாக்கணும்ன்னு துடிச்சேன். ஆனா, நீ சின்ன வயசுல செய்தத, மனசுல வச்சிக்கிட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டார் எங்கப்பா. அந்த சமயத்துல, அப்பாவும் ரொம்ப முடியாமத் தான் இருந்தார். அவர் உடல் இருந்த நிலைமையில அவர மீறி வந்தா என்னாகுமோன்னு பயந்துகிட்டு தான் வரல,''என்றான்.
''அதேமாதிரிண்ணே... பெரியப்பா, பெரியம்மா ரெண்டு பேரும், அடுத்தடுத்து இறந்தது ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது. நான் அப்ப ஒரு புராஜெக்ட்டுக்காக, வெளிநாட்டுல இருந்தேன். அந்த சமயத்தில் போன் செய்ய கூட எனக்கு தோணல. என்னை மன்னிச்சுடு,'' என்றான்.
''பரவாயில்ல விடுடா. என்ன... அப்பாவும், சித்தப்பாவும் கடைசி வரை மனசு மாறவே இல்ல; அதான் எனக்கு வருத்தம்.''
''ஆமாண்ணா... ரொம்பவே வருத்தமா இருக்கு. சொத்து பெருசுன்னு உறவை தூக்கி போட்டுட்டாங்க.''
பிரபு, வினோத் இருவரின் குரலிலும் உண்மையான வருத்தம் தொனித்தது.
''ரமாவின் சித்தப்பா பையன் அங்க வரும்போது எல்லாம், எனக்கு உன் நினைவு வரும். பசங்ககிட்ட, 'உங்களுக்கு மாமா இருக்கற மாதிரியே, சித்தப்பாவும் இருக்கார்'ன்னு சொல்வேன். ஆனா, நேரா வந்து உறவை புதுப்பிச்சுக்க கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ரமாவும், சித்ராவும் உறவுங்கிறதால ரமா, சித்ராகிட்ட பேசினாள். ரெண்டு பேரும், ஒரு வழியா நம்மை சேர்த்து வைச்சுட்டாங்க. நானும் வேலை மாற்றல் கேட்டு இருக்கேன். இனி, உன் பக்கத்துல தான் இருக்கப் போறேன்,''என்றான் பிரபு.
நன்றியுடன் ரமாவைப் பார்த்த வினோத்தின் கண்கள், சித்ராவிடம், ''நீ என்கிட்ட ஒண்ணுமே சொல்லலையே...'' என்றான்.
''உங்களுக்கு, ஒரு அதிர்ச்சி வைத்தியம் தரணும்ன்னு தான், இவங்களை நேரா கிளம்பி வர சொன்னேன். நம்ம பொண்ணுக்கும், அண்ணன், தங்கச்சி எல்லாம் கிடைச்சாச்சு,''என்றாள் சித்ரா மகிழ்ச்சியுடன்!
''பையனுக்கும், பொண்ணுக்கும் என்ன பேரு வச்சுருக்கீங்க அண்ணா?'' என்று கேட்டான் வினோத்.
''சித்தப்பா... அத எங்களக் கேட்டா சொல்ல மாட்டோமா,'' என்று பிரபுவின் பிள்ளைகள், ஒரே குரலில் கேட்டபடி அங்கே வர, உடனே நடுவில் புகுந்த வினோத்தின் பெண், ''அப்பா... அண்ணன் பேரு திருடன்... சரியா, பெரியப்பா...'' என்று கிண்டலாய் பிரபுவைப் பார்த்து இழுக்க, ''ஏய்... வாலு...'' என்று, மற்ற இரு குழந்தைகளும், அவளை துரத்த, அங்கே எழுந்த உறவுகளின் சிரிப்பொலி, இனி சந்தோஷம், எப்போதும் நிரந்தரம் என்று உணர்த்தியது.

நித்யா பாலாஜி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh kumar V - Udumalaipettai ,இந்தியா
23-ஜூலை-201518:08:53 IST Report Abuse
Suresh kumar V Nice story. Thanks to my sister for referring this article. But only when two hands join together, it can a sound. I would want my sister to refer this article to my brother. Hoping for the Best.
Rate this:
Cancel
Prabagar B. - Long Island,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201500:07:15 IST Report Abuse
Prabagar B. Excellent Story, Thank you
Rate this:
Cancel
Senthilnathan - Mumbai,இந்தியா
19-ஜூலை-201509:15:36 IST Report Abuse
Senthilnathan உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அருமையான கதை. படைப்பிற்கு நன்றி நித்யா பாலாஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X