விண்டோஸ் 10 வர இருக்கும் நிலையில், வாசகர்களிடமிருந்து பல வகையான சந்தேகங்களைக் கொண்டு கடிதங்களும், அழைப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. விண்டோஸ் விஸ்டா பயன்படுத்தும் வாசகர்களின் கடிதங்கள் சிறிது அச்சத்துடன் உள்ளன. “நீங்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 /8.1 சிஸ்டத்திலிருந்து மாறத் தயாராய் இருக்கும் வாசகர்களுக்குச் சரியான பதிலைத் தொடர்ந்து அளித்துக் கொண்டுள்ளீர்கள். நானும் என் நண்பர்களும் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்தி வருகிறோம். எங்கள் நிலை என்ன?” என்கிற ரீதியில் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. விண்டோஸ் விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1க்கு அப்கிரேட் செய்யப்படும் கம்ப்யூட்டர்களுக்கே, இலவசமாக விண்டோஸ் 10 கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும், அனைத்து கம்ப்யூட்டர்களும் அதனை இயக்க முடியுமா என்பது சந்தேகமே. அந்தக் கம்ப்யூட்டர்களில், விண் 10 சிஸ்டத்தினை இயக்கக் கூடிய ப்ராசசர் இருக்க வேண்டும்.
மேலும், விண்டோஸ் 8 இயக்கிக் கொண்டிருந்தாலும், அதனை இலவசமாக விண் 8.1க்கு அப்கிரேட் செய்த பின்னரே, விண் 10 தரவிறக்கம் செய்து பதிந்து இயக்க முடியும். விஸ்டா வைத்திருப்பவர்களுக்கு இலவச விண் 10 கிடைக்காது. உங்கள் கம்ப்யூட்டர் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஹார்ட்வேர் கொண்டிருந்தால், 100 டாலர் விலை கொடுத்துத்தான், அதனைப் பெற வேண்டியதிருக்கும்.
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான குறைந்த பட்ச ஹார்ட்வேர் தேவைகள் பின்வருமாறு.
ப்ராசசர், குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்குக் கூடுதலான வேகத்தில் இயங்க வேண்டும். ராம் மெமரி, 32 பிட் என்றால், 1 ஜி.பி, 64 பிட் என்றால் 2 ஜி.பி. இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் இடம் குறைந்தது 16 ஜி.பி. Microsoft DirectX 9 graphics device with WDDM driver கொண்ட கிராபிக்ஸ் கார்ட் தேவை. இவை அனைத்துமே, விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்தத் தேவையான ஹார்ட்வேர் தேவைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம்.
ஒரு கூடுதலான தேவையும் உள்ளது. உங்கள் ப்ராசசர் PAE, NX and SSE2 போன்றவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும். PAE என்பது, 32 பிட் ப்ராசசருகு, 4 ஜி.பி. டிஸ்க் ஸ்பேஸ் பயன்படுத்தும் திறனைத் தரும். NX என்பது, மால்வேர் புரோகிராம்களின் தாக்குதல்களிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரைத் தடுக்கும் திறனைத் தரும். SSE2 ப்ராசசர் இயக்கத்தில், வரையறை செய்யப்பட்ட வரைமுறைகள். இவற்றைத்தான் தர்ட் பார்ட்டி தரும் அப்ளிகேஷன்கள் மற்றும் ட்ரைவர் புரோகிராம்கள் சார்ந்திருக்கும்.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா வைத்திருந்தால், http://windows.microsoft.com/enus/windows8/upgradeassistantdownloadonlinefaq என்ற இணைய தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 ஏற்றுக் கொள்ள உகந்ததா? என்ற கேள்விக்கு விடையைப் பெறலாம்.