நாம் அன்றாட வாழ்வில் இணையப் பயன்பாடு இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருக்க இடம், சாப்பிட உணவு, உடுக்க உடை என்பது போல, ஒவ்வொரு தனி மனிதனின் உரிமையாக இணையம் இன்று இடத்தைக் கொண்டுள்ளது. ஒருவர் கம்ப்யூட்டர், இணையம் குறித்து எதுவும் அறியாதவராக இருக்கலாம். ஆனால், அவரின் அன்றாட வாழ்க்கையில், இணையம் வழியாக அவருக்கு ஏதேனும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியானல், உலகளாவிய இணையத்தில் என்னதான் நடக்கிறது? உலகில் உள்ள அனைவருக்கும் இணையத்தில் ஏதாவது தொடர்பு உள்ளது என்றால், அது எவ்வளவு வேகத்தில் இயங்க வேண்டும். எந்த அளவிலான டேட்டா சுழல வேண்டும். இதனை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம் உள்ளது. http://pennystocks.la/internetinrealtime/ என்ற முகவரியில் அது இயங்குகிறது.
இந்த தளத்தில், என்ன வேகத்தில், இணையத்தில் டேட்டா சுழன்று வருகின்றன என்று ஆச்சரியத்துடன் பார்க்கலாம். இதில் நுழைந்தவுடன், நீங்கள் அந்த தளத்தில் இருக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது. இணையத்தில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனத்தின் இணையதளத்திலும் என்ன நடக்கிறது என்று வண்ண வண்ணக் கட்டங்களில் காட்டப்படுகிறது. ட்விட்டரில் இது தொடங்குகிறது. அந்த நொடியில் எத்தனை அக்கவுண்ட் தொடங்கப்பட்டன; எத்தனை செய்திகள் பதிவு செய்யப்பட்டன என்று கடிகாரம் ஓடுவது போலத் தொடர்ந்து காட்டப்படுகிறது. யு ட்யூப்பில் எத்தனை விடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டன. அந்த ஒரு விநாடியில், எத்தனை மணி நேரம் ஓடக் கூடிய விடியோக்கள் பார்க்கப்பட்டன என்று காட்டப்படுகிறது. கூகுள் தளத்தில், எத்தனை தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது மட்டுமின்றி, அந்த நொடியில், கூகுள் நிறுவனம் விளம்பரம் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளது என்றும் காட்டுகிறது.
இப்படியே, ஸ்கைப், அமேஸான், போன்ற தளங்களில் என்ன நடக்கின்றன; எந்த அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல்கள் கிடைக்கின்றன. பேஸ்புக்கில் எத்தனை பேர் 'லைக்' தெரிவித்தனர்;
எத்தனை பேர் புதிய தகவல்களைப் பதிந்துள்ளனர் என்று ஸ்பீடா மீட்டர் போல காட்டப்படுகிறது. வாட்ஸ் அப் தளத்தில், அந்த நொடியில் எத்தனை அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டன மற்றும் எத்தனை தகவல்கள் அனுப்பப்பட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இறுதியில், கீழாக, நீங்கள் எவ்வளவு நேரம் இந்த தளத்தில் இருந்தீர்கள். அந்த காலத்தில் எத்தனை ஜி.பி. அளவில் டேட்டா இணையத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்றும் காட்டப்படுகிறது. நான் இருந்த 11 விநாடிகளில், மொத்த இணையத்தில் 248314 ஜி.பி. டேட்டா பரிமாறப்பட்டது. இணையத்தின் பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்ள இதைக் காட்டிலும் வேறு ஒரு அளவு கோல் கிடைக்காது. அவசியம் சென்று பாருங்கள்.