மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டமிடுதல் அல்லது தொழில் நுட்ப பிரிவுகளில் என்ன தான் பிரச்னை? அறிவிப்பும், இறுதி செயல்பாடும் அடிக்கடி மாறுகின்றனவே? இலவசமாக விண்டோஸ் 10 தருவதில் பிரச்னை இருந்தது. இப்போது முழுமையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதிலும் அடிக்கடி மாறுதலான அறிவிப்புகள் வருகின்றன. இதிலிருந்து, விண் 10 சிஸ்டத்தில் பல புதிய நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வசதிகள் தரப்பட உள்ளன என்று தெரிகிறது. எதிர்பார்ப்போம்.
பேரா. டாக்டர் எம். சிவப்பிரகாசம், சாத்தூர்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் பின்னூட்டங்கள், இன்னும் பல பேட்ச் பைல்களை வேண்டுகிறது என்ற சூழ்நிலை தெரிகிறது. அதனாலேயே, அலை அலையாக விண்டோஸ் 10 வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் நமக்கு நல்லதுதான். எதிர்பாராத பிரச்னைகள், தவறுகள் இருப்பின், மைக்ரோசாப்ட் அவற்றைத் திருத்திய பின்னர், நாம் பெற்றுக் கொள்ளலாம். காத்திருந்து வரவேற்போம்.
பேரா. ஆ. சிவமோகன், மதுரை.
இணையம் குறித்து கிராம மக்களுக்கு சைக்கிள்களில் சென்று கற்றுக் கொடுக்கும் திட்டம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், தொடர்ந்து அவர்கள் பயன்படுத்த கம்ப்யூட்டர் இணைய வசதியினை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். முன்பு, கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களில், ரேடியோ அறிமுகமான சூழ்நிலையில், அதனை அறிமுகப்படுத்தி, விவசாயக் குறிப்புகள் மற்றும் செய்திகளைக் கேட்கும்படி செய்தனர். அதைப் போல இதனையும் செயல்படுத்தலாம்.
ஆர் .குணசேகரன், சென்னை.
எங்கள் மனதில் இருந்த கவலைகளை “விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 என்னவாகும்?” என்ற கட்டுரையில் விளக்கியதோடு, தெளிவாக என்ன நடக்கும் என்றும் காட்டியுள்ளீர்கள். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
கே. தெய்வேந்திரன், புதுச்சேரி.
மிகக் குழப்பமான தொழில் நுட்ப சங்கதிகளை, எளிமையுடனும், தெளிவாகவும் எடுத்துச் சொன்ன, “இணையத்தில் பின் தொடரலைத் தடுக்க” என்ற கட்டுரை தான், சென்ற வார கம்ப்யூட்டர் மலரின் சிறப்பான அம்சம். கட்டுரை எழுதியவர் அநேகமாக கிராமத்திலிருந்து படித்து பொறியாளராக வந்திருப்பார் என நினைக்கிறேன். வாழ்த்துகள்.
பேரா. ஆ. சுப்பையா, கோவை.
ஸ்மார்ட் போனில் அப்படி என்னதான் செய்வார்கள்? என்ற கேள்விக்கு, ஆய்விலிருந்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பதில் அளித்தது மிகவும் அருமை.
செ. கரிகாலன், தென்காசி.
இரண்டாவது செவ்வாய்க்கிழமை பேட்ச் பைல் இனி நின்றுவிடும் என்ற செய்தி கலக்கத்தினை ஏற்படுத்தியது உண்மை தான். அதன் பின்னணியையும், இனி என்ன செய்ய வேண்டும் எனப் பதில் தந்ததும் பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கே. ஆர். சுசிலா, திருப்பூர்.
டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் குறித்த பத்து அம்சங்களைச் சுருக்கமாக கேள்வி பதில் பகுதியில் தந்தது அதன் முக்கியத்துவத்தினையும், எதிர்கால இலக்குகளையும் தருவதாக உள்ளது.
எஸ். கார்த்திகேயன், விழுப்புரம்.