தற்போது ஜூலை 29ல் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, மைக்ரோசாப்ட் தன் பாதுகாப்பினை, அக்டோபர் 2025 வரை வழங்கும் என அறிவித்துள்ளது. இதன் மூலம், மைக்ரோசாப்ட் வழக்கமாகத் தரும் பாதுகாப்பு மற்றும் சப்போர்ட் சேவை, நிறுவனத்தின் வழக்கம்போல, அடுத்த பத்து ஆண்டுகளுக்குக் கிடைக்கும்.
அத்துடன், தன்னுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கம்ப்யூட்டர்களை வடிமைத்துத் தரும் நிறுவனங்களும், பத்து ஆண்டுகளுக்கு சப்போர்ட் வழங்குவார்கள் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதற்கென எந்த தனி கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்தத் தேவையில்லை.
விண்டோஸ் 10க்கென வழங்கப்படும் அப்டேட் பைல்கள், பாதுகாப்பு சம்பந்தமானவை யாகவோ, அது இல்லாமலோ இருக்கலாம். அப்டேட் ஒன்றில் வழங்கப்படும் அனைத்து பைல்களும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இயங்கும் என்ற உறுதியைத் தரவில்லை. ஏதேனும், ஒரு கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர், அப்டேட் பைல்களுடன் இணைந்து செயலாற்ற முடியாததாக இருந்தால், அந்த அப்டேட் பைல், அந்த கம்ப்யூட்டருக்குக் கிடைக்காது. மேலும், அப்டேட் உரிமம் பெறும் நாள், கண்டம், நாடு, நெட்வொர்க் இணைப்பு, ஹார்ட்வேர் திறன் (ஸ்டோரேஜ் திறன், ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் போன்றவை) ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும்.
இதற்கு முன்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும், பல புதிய வசதிகளை, விஷயங்களை, மேம்படுத்தல்களை, விண் 10 கொண்டுள்ளது. எட்ஜ் எனப்படும் புதிய பிரவுசர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடிய கார்டனா (Cortana) டிஜிட்டல் அசிஸ்டண்ட், மெமரி நிர்வாகம், மொபைல் சாதனங்களுடனான இணைப்பு போன்ற பல புதிய வசதிகள் தரப்பட உள்ளன. இவற்றை ஏற்றுக் கொண்டு இயங்க முடியாத ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டரில், விண் 10 தரவிறக்கம் செய்யப்பட மாட்டாது.
தொடர்ந்து வழங்கப்படும் ஒவ்வொரு அப்டேட் பைல் தொகுப்பும், அதற்கு முன்னர் வந்த அப்டேட் பைல்கள் அனைத்தையும் கொண்டிருக்கும். எனவே, ஒருவர், சில அப்டேட் பைல்களைத் தன் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளத் தவறி இருந்தால், தவறவிட்ட அப்டேட் பைலுக்குச் செல்ல வேண்டியதில்லை. அப்போது தரப்படும் அப்டேட் பைலை மட்டும் தரவிறக்கம் செய்து பதிந்தால் போதும்.