02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு | நலம் | Health | tamil weekly supplements
02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
00:00

எனது மருத்துவமனையின் வரவேற்பறையில் மாட்டி வைத்திருந்த, அம்மா மற்றும் இரு குழந்தைகள் கைகோர்த்தபடி இருக்கும், புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், என்னையும் அறியாமல் கண்கலங்கி விடுவேன்.
காரணம், மனோகரி. அவள், என் வீட்டிற்கும், எனக்கும் உதவிக்கு வந்தவள்; எனக்கு ஒரு சகோதரி போல் இருந்தாள். மருத்துவ தொழில் காரணமாக, பல நாட்கள் வீடு திரும்ப தாமதமாகி விடும். அப்போதெல்லாம், ஒரு தாயைப் போல் என் குழந்தைகளை கவனித்து கொண்டவள்.
என் குழந்தைகள், என் மடியில் தவழ்ந்ததை விட, மனோகரி மடியில் தவழ்ந்தது தான் அதிகம். என் வரவேற்பறையிலுள்ள படம், மனோகரியின் மூத்த மகன் வரைந்த படம். மனோகரி நினைவாக என்னிடம் உள்ள பொக்கிஷம்.
மனோகரி, சில ஆண்டுகளுக்கு முன், தன் தாய்மாமனை திருமணம் செய்து கொண்டாள். லாரி ஓட்டுனரான அவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை. அதிலும், ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தொல்லை தாங்காமல், முதல் மனைவி நிரந்தரமாக தாய் வீட்டிற்கு சென்று விட்டாள்.
அப்போது அவருக்கு சமைத்து போட, துணிகளை துவைத்து போட, ஆள் தேவைப்பட்டதால், அவர் மனோகரியின் தாயிடம் சென்று சண்டையிட்டார். 'சொந்த அக்கா, நீயே எனக்கு உன் பெண்ணைத் தரவில்லை என்றால், வேறு யார் தருவார்' என, சண்டையிட்டதும், சகோதர பாசத்தில் தன் மகளை தம்பிக்கு திருமணம் முடித்து தந்தார், மனோகரியின் தாய். சில ஆண்டுகளில், மனோகரிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இதற்குள், மனோகரியின் கணவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது. இருமல், தோலில் படை போன்று, பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. மருத்துவரிடம் சென்று காட்டியதில், 'எய்ட்ஸ்' நோய் தாக்கி, கடைசி கட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. லாரி ஓட்டுனரான, தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும், திருமணத்திற்கு முன்பே, தனக்கு இந்த வியாதி இருப்பது தெரிந்தும், மனோகரியின் வாழ்வை பாழாக்கி விட்டதாக, பாவமன்னிப்பு கேட்டு விட்டு இறந்து விட்டார். இதற்குள் நான் பணி நிமித்தமாக வெளிநாடு சென்று திரும்பியபோது, மனோகரி தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரியவந்தது. கணவன் இறந்தபின், மனோகரி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அனைவருக்கும், 'எய்ட்ஸ்' கிருமித் தாக்கம் இருப்பது, அறிந்து கவலையுற்றாள். தன் பிள்ளைகளுக்கு இப்படியொரு நோய் இருப்பது தெரிந்தால், பள்ளியில் இருந்து துரத்தி விடுவரோ என, பயந்தாள். பயந்து, பயந்து வாழ்ந்தவள். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், தன் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் அதை உண்டு இறந்து போனாள்.
'எய்ட்ஸ்' என்பது என்ன?
'எய்ட்சால்' பாதிக்கப்பட்ட அனைவருக்கும், எச்.ஐ.வி., இருக்கும். எச்.ஐ.வி., தாக்கப்பட்ட அனைவரும் ,'எய்ட்ஸ்' நோயாளி என்று கூறிவிட
முடியாது. ஆனால், எச்.ஐ.வி., தொற்று உள்ளோர் அனைவரும், 'எய்ட்ஸ்' நோயாளியாக மாறுகின்றனர்.
பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் 'எய்ட்ஸ்' நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில், 'எய்ட்ஸ்' தற்போது பரவி வருகிறது. எச்.ஐ.வி.,யால் தாக்கப்பட்டவர், மூன்று ஆண்டுகளில் இருந்து, 10 ஆண்டு வரை அந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.அறிகுறிகள் தென்படும்போது தான், அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும். மனோகரியின் மரணம் என்னை பாதித்துவிட்டது; நான் என் சகோதரியை இழந்துவிட்டேன்.

- லலிதா குமாரி,
மகப்பேறு மருத்துவர்.
லலிதா கிளினிக், திருச்சி.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X