1 காசநோய் என்றால் என்ன?
'டியூபர்செல் பாசிலஸ் எனும் கிருமியால் வரும் நோய் தாக்கத்தின் பெயர் டியூபர் குளோசிஸ்' இதன் சுருக்கம் தான் 'டிபி' எனும் காசநோய். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதும் காசநோய் வருவதற்கு காரணம். நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரை உருக்குலைத்து விடக்கூடியது இந்நோய்.
2காசநோயாளிகள் இந்தியாவில் அதிகம் என்கின்றனரே?
உலகில் நான்கு பேருக்குக் காசநோய் வந்தால், அவர்களில் ஒருவர் இந்தியர் என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் காசநோய் பற்றிய புள்ளிவிவரம். ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் 22 லட்சம் பேருக்குக் காசநோய் வருகிறது; உலக அளவில், 90 லட்சம் பேருக்கு இந்த நோய் வருகிறது.
3 இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த என்ன காரணம்?
மக்கள் தொகை தான் மிகப் பெரிய காரணம் என்கின்றனர், மருத்துவ வல்லுனர்கள். உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகை, 17 சதவீதம். ஆனால், காசநோய் மட்டும், இந்தியாவில், 25 சதவீதம் பேருக்கு வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்குத் தான் இந்த நோய் அதிகம் வருகிறது.
4 நோய் பரவுவதற்கான காரணம் என்ன?
காற்று மூலமே இந்த நோய் பரவுகிறது. சுகாதாரமின்மை, காற்றோட்ட வசதி இல்லாதது, மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற பல்வேறு காரணிகள், இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் இந்தக் காரணிகள் அதிகம் என்பதால் பரவுகிறது காசநோயின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
5 எவ்வாறு இந்த நோய் பரவுகிறது?
பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், சளியை வெளியில் துப்புவதன் மூலமுமே மற்றவர்களுக்கு, காற்று மூலம் இந்த நோய் பரவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால், இந்த நோய் எளிதில் தொற்றி விடுகிறது.
6 வேறு யாருக்கு இந்த நோய் எளிதில் தொற்றும் வாய்ப்பு அதிகம்?
எச்.ஐ.வி., உள்ளோருக்கு அடிப்படை பிரச்னையே, நோய் எதிர்ப்பு சக்தியை இழப்பது தான். எனவே, அவர்களுக்கு இந்த நோய் எளிதில் தொற்றி விடுகிறது. அதேபோல சிறுநீரகக் கோளாறு, நுரையீரலில் பிரச்னை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கு வர வாய்ப்பு உண்டு.
7 பொதுவாக ஒருவருக்குக் காசநோய் இருக்கிறதா என்பதை எப்படி அறிவது?
தொடர்ந்து இருமல், சளியுடன் ரத்தம் வருவது, காய்ச்சல், இரவில் குளிர் நடுக்கம், நெஞ்சில் வலி, இரவில் அதிகம் வியர்ப்பது ஆகியவை, இந்த நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ளோருக்கு காசநோய் இருக்கிறதா என்பதை, சளியை எடுத்துப் பரிசோதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.
8 பரிசோதனையை எங்கு எவ்வாறு செய்து கொள்வது?
இப்போது காசநோயை கண்டுபிடிக்க, 'ஜீன் எக்ஸ்பர்ட்' என்ற கருவி வந்திருக்கிறது. இந்தியாவில் இந்தக் கருவி, 100 இடங்களில் உள்ளது. சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்திலும், கோவை, மதுரை, வேலுாரிலும் இந்த கருவிகள் உள்ளன. அவற்றின் மூலம் பரிசோதிக்கும்போது, 75 சதவீதம் காசநோயை உறுதிப்படுத்த முடிகிறது. காசநோய் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
9 காசநோய் தீவிர நிலையை எப்போது அடைகிறது?
காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அப்படிக் கண்டுபிடித்து விட்டால், ஆறு மாதங்களில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு, குணப்படுத்தி விடலாம். காசநோயால் மரணம் ஏற்படுவது 'மல்டி டிரக் ரெசிஸ்டன்ஸ்' (எம்.டி.ஆர்.-டி.பி.,) என்ற நிலையில் தான்.காசநோய் வந்து சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல், முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதது போன்ற காரணங்களால், இந்த நிலைக்குச் செல்வோர் உண்டு. இந்த நிலைக்கு வருவோர் தான், மரணத்தைத் தழுவ நேரிடுகிறது.
10 குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பி.சி.ஜி., தடுப்பூசி போட வேண்டும். காசநோயாளிகள் உள்ள வீட்டில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பு மருந்து சாப்பிட வேண்டும்.காசநோயாளிகளை காற்றோட்டமுள்ள அறையில் தங்க வைப்பதன் மூலம், அவர்களிடம் இருந்து வெளிப்படும் பாக்டீரியா வெளியே சென்றுவிடும். எனவே, வீட்டில் உள்ளோருக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
- ராஜேந்திரன்,
பொது மருத்துவர்.
சென்னை.