ஆடு மேய்த்து படிக்கும் இளைஞர்!
கிராமத்தில் இருக்கும் என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டுற்கு சென்றிருந்தேன். மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே, அவரது ஓட்டு வீடு அமைந்திருந்தது. ஆடு, மாடு மற்றும் விவசாயம் என, அருமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதை கண்டு வியந்து, 'உன் பையன் இப்போ என்ன செய்றான்?' என்று கேட்டேன். வெளியே எட்டி பார்த்தவாறு, 'அதோ... அங்க ஆடு மேய்ச்சிட்டு இருக்கான் பாரு...' என்றார்.
நான் அதிர்ச்சியாகி, 'ஏன்... படிக்க வைக்கலயா?' என்று கேட்டதற்கு, 'பி.காம்., ரெண்டாவது வருஷம் படிக்கிறான்...' என்றார். அதற்குள், அந்த இளைஞன் என்னிடம் வந்து, நலம் விசாரித்தான். 'படிச்சுகிட்டே வீட்டுக்கு உதவியா ஆடு, மாடு மேய்க்கிற போல...' என்றேன்.
'இல்ல மாமா... நான் பிளஸ்2 முடிச்சதும், 'காலேஜ் போக வேணாம். விவசாயத்தை பாத்துகிட்டு, சந்தைக்கு போய் வியாபாரத்தை பாரு'ன்னு அப்பா சொன்னாரு. நான்தான் பிடிவாதமா பி.காம்., 'அப்ளிகேஷன்' போட்டேன். உடனே, அப்பா, 'என்னால நீ கேக்குறப்போ பணம் கொடுக்க முடியாது; நம்ம கிட்ட எட்டு ஆட்டுக்குட்டி இருக்கு. தினமும் சாயங்காலம் அதை மேய்ச்சு, ஆண்டுக்கு ரெண்டு ஆட்டை வித்து பீஸ் கட்டிக்கோன்னு சொன்னாரு. போன வருஷம் புதுசா ரெண்டு குட்டியும் பிறந்திடுச்சு. இப்போ படிக்கிறதுக்கு பண கஷ்டம் இல்ல...' என்று முடித்தான்.
உலகிலேயே ஊழல், பொய் புரட்டு இல்லாதது ரெண்டு தொழில் தான். ஒன்று, விவசாயம்; மற்றொன்று கால்நடை வளர்ப்பு!
கல்லூரி மாணவனாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை புரிந்து, கவுரவம் பார்க்காமல் கால்நடையை மேய்க்கும் அந்த இளைஞனை பாராட்டிவிட்டு வந்தேன்.
— பி.சதீஷ்குமார், சிக்கந்தர் சாவடி.
உறவுகளை புறந்தள்ளும் புதிய கலாசாரம்!
சமீபத்தில், என் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். விசேஷ வீட்டில் நல்ல கூட்டம் என்றாலும், வந்தவர்களில் பெரும்பாலானோர், என் நண்பரின் கல்லூரி மற்றும் தொழில்முறை நண்பர்களே! பெயருக்கு கூட உறவினர்கள் யாரும் இல்லை. இத்தனைக்கும் நண்பர் மற்றும் அவரது மனைவி வீட்டுச் சொந்தங்கள் அதிகம். இருப்பினும், உறவினர்கள் யாரும் தென்படாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
விசேஷம் முடிந்தவுடன், இதுபற்றி நண்பரிடம், 'கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத... உன் குடும்பத்தை விட, உன் மனைவி குடும்பம் மிகப் பெரியது; ஆனா, ரெண்டு பேரும் உங்க உறவினர் ஒருவரை கூட அழைக்காமல் விழா நடத்துவது சரியா?' என்றேன். அதற்கு, அருகில் இருந்த நண்பரின் மனைவி, 'சொந்தக்காரங்க எல்லாம் பொறாமை பிடிச்சவங்களா இருக்காங்க; அதுதான் வேண்டாம்ன்னு தவிர்த்துட்டோம். நீங்கல்லாம் அவரோட நண்பர்கள் தான். ஆனாலும், காலையில இருந்து ஒரு நிமிஷம் கூட உட்காராம பம்பரமா சுத்தி, எவ்வளவு சந்தோஷமா எங்களுக்கு வேலை பாத்து கொடுத்தீங்க. இதே பொறுப்ப எங்க சொந்தக்காரங்ககிட்ட கொடுத்திருந்தா எவ்வளவு சங்கடப்படுவாங்க தெரியுமா... எல்லாத்துக்கும் குறை வேறு சொல்வாங்க.
'உங்கிட்ட சொல்றதுக்கு என்னண்ணே... போன விசேஷத்துக்கு இவரு அக்கா வீட்டுக்காரர மொய் நோட்டு எழுத சொன்னோம். அதுல கணக்குல கொஞ்சம் பணம் கொறஞ்சது. அத கேட்டவுடனே, 'என்னை சந்தேகப்படுறியா'ன்னு கேட்டு, பெரிய பிரச்னை செய்திட்டாரு. இது போதாதுன்னு, இவரு தம்பி பொண்டாட்டி, தன்னோட தாய்மாமனை சரியா உபசரிக்கலன்னு சண்டை போட்டு பாதியில போயிட்டாங்க. இதுபோக என்னோட சொந்தக்காரங்க பாதி பேரு வேணும்ன்னே லேட்டா வந்து சாப்பாடு இல்லன்னு சங்கடபட்டுகிட்டாங்க...' என்று, நண்பரும், அவர் மனைவியும் சொந்தங்களைப் பற்றி குற்றம், குறைகளை அடுக்கிக் கொண்டே போயினர்.
அவர்களின் கூற்றில் நியாயம் இருந்தாலும், இது, எல்லாருக்கும் இருக்கும் பிரச்னை தானே... இரு தரப்பினருமே கொஞ்சம் அனுசரித்து போயிருக்கலாமே... என்று தோன்றியது.
கூடப்பிறந்த உறவுகளை புறந்தள்ளி, நண்பர்களை மட்டும் வைத்து விசேஷம் செய்யும் அளவிற்கு நம் சமூகம் மாறி விட்டதை நினைத்து வருந்தினேன். நம் சமூகம் எங்கே போகிறது?
— சி.த.பழனியப்பன்,மதுரை.
பள்ளி வாகனம் ஓட்டுபவருக்கு பரிசு!
சமீபத்தில், ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, 'மைக் செட்' போடச் சென்றிருந்தேன். அவ்விழாவில், அப்பள்ளியின், பஸ் ஓட்டுனரை மேடைக்கு அழைத்து, 'இந்த ஆண்டு ஒரு சிறு விபத்து கூட இல்லாமல் பஸ்சை இயக்கிய, நம் ஓட்டுனரைப் பாராட்டி, பள்ளியின் சார்பில் அரை சவரன் மோதிரமும், பெற்றோர் சார்பில், 10,000 ரூபாய் பண முடிப்பும் பரிசாக வழங்குகிறோம்...' என்று கூறி ஓட்டுனரிடம் வழங்கினர்.
கரகோஷம் ஒலிக்க, அதை பெற்று, நன்றி கூறிய ஓட்டுனர், 'நம் பள்ளியில் பயிலும் குழந்தைகளை என் குழந்தைகளாக, பேரன், பேத்திகளாக கருதுகிறேன்; இதனால் தான், கவனமாக ஓட்டுகிறேன். விபத்தில்லாமல் இயக்குவதே என் லட்சியம்...' என்று கூறினார்.
இதைக் கேட்ட போது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக கருதும் இத்தகைய ஓட்டுனர்களை, இவ்வாறு நிர்வாகத்தினரும் பாராட்டி ஊக்குவித்தால், விபத்தை தவிர்க்கலாம். மற்றவர்களும் யோசிப்பரா?
— ஏ.கே.ஆர்.யு.குணசீலன், திருப்பூர்.