ஜூன் 28 முதல், தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
பிறை நிலவு, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. சித்திரை மாதத்தின் முதல் முகூர்த்தமோ என்னவோ, கடல் அலைகளின் பேரிரைச்சல்!
அதிகாலையில், கடற்கரையில் நடைபயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர் தேவர். தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது... பாடல் காற்றில் கலந்து, தேவரின் காதுக்குள் நுழைந்தது.
'இன்று எனக்கு ராசியான நாளோ... அது என்னா... கல்யாண வீட்டின் பாட்டுச் சத்தமா...' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவருக்கு, அன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகள் குறித்த எண்ணங்கள் மனதில் ஓடியது.
'அடேய் முருகா... நீ இருக்கும் போது எனக்கு என்னப்பா கவலை; பாம்பை வெச்சிக் கூடப் படம் எடுக்குறான்னு கேலி செய்றாங்க. நீ காப்பாத்திட்ட. வெள்ளிக்கிழமை விரதம் படம் நல்லா ஓடுது; போன் பேசி மாளல போ...' என்று, தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் மானசீகமாக பேசியபடி, விவேகானந்தர் இல்லம் மற்றும் அவ்வையார் சிலை, பாரதிதாசன், திருவள்ளுவர், உழைப்பாளர் சிலைகளை கடந்து, சென்னைப் பல்கலைக்கழகம் வரை சென்று, வீடு திரும்பினார்.
தேவரின் கைக்கடிகாரம் மணி, 4:45 என்று காட்டியது. ஆனால், உண்மையில் விடியற்காலை, 4:00 மணி. எப்போதும் அவர் கடிகாரம் முக்கால் மணி நேரம், கூடுதலாக காட்டும்படி வைத்திருப்பார். காரணம், எக்காரணத்தைக் கொண்டும் எதுவும் தாமதமாகி விடக்கூடாது என்பதற்காக!
அது, கோடைக் காலம்; அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள், அறையில் வெப்பம் தகித்தது. வியர்க்க வியர்க்க தண்டால், வெயிட் லிப்டிங் என, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார்.
பின், குளிக்கப் போனார்; சந்தனத் தைலம் கலந்த நீர், தயாராக இருந்தது.
குளித்து தயாராகி தன் அறைக்குள் வந்தார். ராணி முத்து காலண்டரில் எப்போதும் போல், கையில் வேலோடு பாலமுருகன் சிரித்தபடி இருந்தான். நாட்காட்டி தாளைக் கிழித்தார்; ஏப்., 22, 1974!
அடுத்த இரு மாதங்களில், அவருக்கு, 60வது வயது பிறக்க இருந்தது. வாழ்ந்த அத்தனை ஆண்டுகளும், முழு ஆரோக்கியத்துடன் நாட்கள் ஓடி விட்டன. இதுவரை, வியாதி என்று பெரிதாக எதுமில்லை என்றாலும், நீரிழிவு நோய் மட்டும், அவ்வப்போது தொல்லை தந்ததால், இன்சுலின் போட்டுக் கொண்டார்.
விடியலின் அழகைச் சொல்லி, பறவைகள் கத்திக் கொண்டிருந்தன. பூஜை அறைக்குள் புகுந்தார் தேவர். அவரது இஷ்ட தெய்வமான, மருதமலை கந்த பெருமானை, கண்ணீர் மல்க வழிபட்டார். வேலனுடன் வெளிப்படையாகச் சத்தம் போட்டுப் பேசுவதே, அவர் செய்யும் அர்ச்சனை!
'அடப்பாவி முருகா... எல்லா நல்ல புத்தியையும் கொடுத்து, கடுமையா உழைக்கக்கூடிய ஆற்றலையும் தந்தே... ஆனா, இந்தப் பாழாப் போன முன் கோபத்தால, என்னையே எனக்கு சகிச்சுக்க முடியலயே... யார் இருந்தாலும், இல்லாட்டியும் அசிங்கமா பேசிப்பிடுறேனே... நீ என்னடா கடவுள்... இந்த, 60 வருஷத்துல ஒரு நாள் கூட என்னை திருத்தணும்ன்னு உனக்கு தோணலயா...' என்பார்.
தேவர் அடித்தாலும், திட்டினாலும் அவரது ஊழியர்கள், அதைத் துடைத்து எறிந்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவர். காரணம், 'தேவர் பிலிம்சில்' எல்லாவற்றிற்கும் ஒரு தொகை உண்டு. அடித்தால், 5,000 ரூபாய்; திட்டினால், 2,000 ரூபாய். யாருக்கு வலிக்கும்!
ஒருமுறை தயாரிப்பு நிர்வாகி கணேசனை, காலால் உதைத்து, அடித்துத் துரத்தினார். பலன், கணேசனுக்கு சொந்த வீடு கிடைத்தது. அடி அளவுக்கு மீறியதால், தேவர் அளித்த அன்புப் பரிசு அது.
தேவர் உணவு விஷயத்தில் சாப்பாட்டு ராமன். அதிலும், அசைவம் என்றால் கொள்ளை ஆசை. கார்த்திகை மாதம் மட்டும் பல்லைக் கடித்தபடி நாட்களை ஓட்டுவார்.
காலை, 7:30 மணிக்கெல்லாம் சுடச்சுட சப்பாத்தி, இட்லி, முட்டை தோசை என, எல்லாமே இருக்கும். காபி மட்டும் இரண்டு டம்ளராக குடிப்பார். மீண்டும் செட்டில், 11:00 மணிக்கு கேப்பைக் கூழும், தொட்டுக் கொள்ள கீரையும் சாப்பிடுவார். பழங்கள், இனிப்பு இரண்டும் சற்று விலகியே இருக்கும்.
மணி, 8:00 - தேவர் தன் அலுவலகத்திற்குச் செல்லும் நேரம்; தன் மனைவியை அழைத்தார்.
கடந்த அக்., 12, 1936ல் தேவரின் வாழ்வில் நுழைந்து, அவரின், 'வாசுகி'யாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாரி முத்தம்மாள் வந்து நின்றார். 38 ஆண்டு கால தாம்பத்ய வாழ்வு. மகன் தண்டாயுதபாணி, மகள்கள் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரி என்று மூன்றே குழந்தைகள்.
கைக்கடிகாரத்தை எடுத்துக் கட்டியபடி, 'என்ன வேணும், ஏதாவது சொல்லணுமா...' என்று, கேட்டார் மனைவியிடம். இது, அவரது வழக்கமான வார்த்தைகள் தான். 'ஒண்ணுமில்லிங்கோ... போய்ட்டு வாங்கோ...' அதே வழக்கமான பதிலைச் சொன்னார் முத்தம்மாள்.
தன் அலுவலகத்தின் மாடி அறைக்குள் நுழைந்தார் தேவர். அறையில் இருந்த பெரிய மருதாசல மூர்த்தியின் படத்தை வணங்கினார்.
அறையில், 'ஏசி'யின் குளிர்; கூடவே, ஊதுவர்த்தி, சாம்பிராணி, தசாங்கம் மற்றும் முருகன் படத்தில் சுற்றியிருந்த ரோஜா மாலையின் வாசம். இவை போதாதென்று, சந்தனத்தில் குளித்து மூழ்கியிருந்த தேவரின் உடலிலிருந்த சந்தன மணம்... இத்தனையும் சேர்ந்து, அது, சினிமா கம்பெனி அலுவலகமா அல்லது திருச்செந்தூர் சன்னிதானக் கருவறையா என்ற கேள்வியை எழுப்பியது.
ஏற்றி வைத்த விளக்குகளின் தீப ஒளி, தேவருக்குத் திருப்தியைத் தந்தது. தன் அருகிலிருந்த இரும்பு பீரோவைத் திறந்தார். அதன் அலமாரிகளில், அடுத்து தயாரிக்க இருந்த படங்களின் கதைகளின் பைல்கள் மற்றும் நாள் தவறாமல் தன் கைப்பட எழுதும் டைரி தென்பட்டன. ஒரு பைலை உருவி மேஜை மீது வைத்தார். 'திருவருள்' என்று அதில் எழுதபட்டு இருந்தது.
நிமிர்ந்து உட்கார்ந்தவர், தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டார்.
தன் அன்றாட அலுவல்களை கவனித்துக் கொள்ள யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை தேவர். தன் பணிகளைத் தானே கவனித்துக் கொள்கிற ஒழுங்கும், நேர்த்தியும் தேவரிடம் இயல்பாகவே இருந்தன. அவருக்கு எதையும் யாரும் ஞாபகப்படுத்த வேண்டாம்.
சிவாஜியிடம், தேவருக்கு தொழில் ரீதியாக பழக்கம் கிடையாது. ஆனால், சிவாஜி வெறியர் என்று சொல்லும் அளவுக்கு அவரின் பரம ரசிகர். இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் குலம் சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் முன்னணியில் நிற்பர். அதுவரை, கணேசனின் அன்னை இல்லத்துக்கு செல்லும் வாய்ப்பை பெறவில்லை; அன்று செல்ல முடிவெடுத்தார்.
சிவாஜியின் நடிப்புக்கு ஆனந்தக் கூத்தாடுவார். ஆனால், கணேசனின் நையாண்டிப் பேச்சுகளில் முகம் சிவந்து விடுவார்.
பழைய நினைவுகளில் மூழ்கிப் போன தேவரை, தொலைபேசி ஒலி மீட்டது. பேசப் பேச தேவரின் முகம் பவுர்ணமியானது. 'நான் ஒண்ணும் செஞ்சிடலிங்க; எல்லாம் முருகன் செயல். நீங்க கொடுக்காத ஜூப்ளி படங்களா...' என்று கூறி, தனக்குக் கிடைத்த பாராட்டை பவ்யமாக மறுத்தார். எதிர்முனையில், ஏ.வி.எம்., வெள்ளிக்கிழமை விரதம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறி, அந்த சினிமாவைத் தெலுங்கில் தயாரிக்க விரும்புவதாகவும் கூறினார். தேவருக்கு ஏக குஷி; போன் பேசி முடித்தவர் பாட ஆரம்பித்தார்.
கல்லில்லாத நெல்லுச்சோறு... முள்ளில்லாத மீனுச் சோறு... - தமிழின் முதல் பேசும் படமான, காளிதாஸ் படத்தில் இடம் பெற்ற பாடல். மகிழ்ச்சியான தருணங்களில் தேவர் பாடும் பாடல் இது!
'தேவர் செம மூடில் இருக்கிறார்...' என்பதைப் பார்த்து ரசித்தபடியே, அறையில், 'கதைக்காரர்கள்' நுழைந்தனர்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்