அன்று அலுவலகத்துக்கு, பிரபல இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் அர்த்தநாரி வந்திருந்தார். என் கையால், காபி வாங்கி குடிப்பதில் அவருக்கு அலாதிபிரியம்; சர்க்கரை, சூடு எல்லாம் சரியான பக்குவத்தில் கொடுப்பேன் என்று கூறுவார்.
அப்போது, திண்ணைப் பகுதிக்கு மேட்டர் கொடுக்க வந்த நடுத்தெரு நாராயணன், தன் பக்கத்து வீட்டுக்காரர், தனக்கு சொந்தமான இடத்தில் ஓரடி நிலத்தை அபகரித்து, காம்பவுண்டு சுவர் எழுப்பியதை பற்றி புலம்பினார்.
'போனது போகட்டும் விடுங்க சார்... வினை விதைச்சா வினை அறுக்கணும்; முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்ன்னு சொல்லியிருக்கிறாங்களே கேள்விப்பட்டதில்லயா... இதுக்கு போய் கோர்ட்டு, கேஸ்ன்னு அலைய போறீரா?' என்று கூறி, சமாதானப்படுத்தினேன். எங்களது பேச்சை செவிமடுத்த டாக்டர் அர்த்தநாரி, மருத்துவத் துறையில் தான் கேள்விப்பட்ட, விஷயங்களை நினைவு கூர்ந்தார்.
அவர் கூறியதின் சாராம்சம்...
இதய நோய் நிபுணராக, 30 ஆண்டுகள் அனுபவத்தில், பேராசிரியராக இருந்த போதும், பிரபல மருத்துவமனைகளில் பணிபுரிந்த போதும், நோயாளிகளின் மருத்துவ வரலாறுகளை கேட்கும் போதும், பல உண்மைகளும், வேதனைகளும் வெளி வரும். அவைகளிலிருந்து, கடவுள் உள்ளார் என்பதற்கு, இரண்டு உதாரணங்களை சொல்ல முடியும். அவை:
என்னிடம் இதய நோய்க்கு வைத்தியம் பார்க்க வந்த, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் வருமானம் ஈட்டி தரும் பகுதி ஒன்றில் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். ஒரு நாள் அவர் காவல் நிலையத்தில் இருந்தபோது, 'இளம் பெண் ஒருத்தி தீக்குளித்தார்...' என்ற அவசர தொலைபேசி தகவலைக் கேட்டு, இவரும், மற்றொரு போலீஸ்காரரும் விரைந்துள்ளனர். தீயில் கருகிய, இளம்பெண், 'இதற்கு காரணம், என் மாமனார் தான்...' எனக் கூறி, இறந்து போனாள்.
இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் மேற்கூறிய இந்த இரு காவலர்கள் தான், இந்த வழக்கை விசாரணை செய்துள்ளனர். குற்றவாளியான, அந்த பெண்ணின் மாமனாரை, காவலர்கள் அடித்து, வெளுத்துள்ளனர். இருந்தும், என்ன பயன்? குற்றவாளி பெரும் செல்வந்தர், வியாபாரி.
குற்றத்தை திசை திருப்ப இன்ஸ்பெக்டருக்கு, ஒரு லட்சம் ரூபாய் தந்துள்ளார். 40 ஆண்டுக்கு முன், ஒரு லட்சம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதை சொல்ல வேண்டியதில்லை. எப்.ஐ.ஆர்., எழுதிய சப் - இன்ஸ்பெக்டருக்கு, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டு காவலர்களில், ஒருவர் பணம் வாங்க மறுத்து விட்டதால், மற்றவருக்கு மட்டும், 25 ஆயிரம் ரூபாய் என, பகிர்ந்து கொடுத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விட்டார்.
சில ஆண்டுகள் சென்ற பின், ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய இன்ஸ்பெக்டரின் மனைவி மேல், ஸ்டவ் வெடித்து, தீப்பிடித்து கொண்டது. மனைவியை காப்பாற்றுவதற்காக அவரை அணைத்து தீயைத் தடுத்தார் இன்ஸ்பெக்டர். ஆனாலும், மனைவி பிழைக்கவில்லை; தீக்காயங்களோடு உயிர் பிழைத்தார் இன்ஸ்பெக்டர்.
எப்.ஐ.ஆர்., எழுதிய சப் -இன்ஸ்பெக்டரோ, மோட்டார் பைக் விபத்தில், வலது கையை இழந்தார்.
கையூட்டு வாங்கிய காவலர், லஞ்ச பணத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டி, தன் செல்ல மகளுக்கு, தடபுடலாக திருமணம் செய்து வைத்தார். ஆனால், ஒரே வாரத்தில், விபத்தில் புது மாப்பிள்ளை உயிர் துறந்தார்; மகள் விதவையானாள்.
சேலத்தில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி...
கடந்த 1982ல் மாதமிருமுறை, முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், இதய நோயாளிகளை பார்க்க, சேலம் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது, என் கைப்பையிலிருந்த, 10 சவரன் கழுத்துச் செயின் காணாமல் போனது. இதைப் பற்றி, அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஒரு மாதம் ஆகியும் எந்த தகவலும் இல்லை.
இரண்டு மாதங்கள் சென்றன. ஒரு நாள் என்னிடம் சிகிச்சைக்கு வந்த மற்றொரு இன்ஸ்பெக்டரிடம் நகையை மீட்டு தர சிபாரிசு செய்யக் கூறினேன். அந்த இன்ஸ்பெக்டரோ ஆழ்ந்த கவலையில் இருந்தார்.
அவரிடம், 'உங்க இதய நோயைப் பற்றி கவலைப்படாதீங்க; எல்லாம் சரியாகும்...' என்று கூறினேன்.
'நான் நோயைப் பற்றி கவலைப்படல; மூணு ஆண்டுகளுக்கு முன் என் மூத்த மகள், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாள். இப்ப, என் ரெண்டாவது மகள், திருமணம் ஆன ஒரு மாதத்தில் கிணற்றில் விழுந்து, தற்கொலை செய்து கொண்டாள். என்னால எப்படி கவலைப்படாம இருக்க முடியும்...' என்றார்.
இது பற்றி, என் தாயாரிடம் கூறிய போது, 'அந்த இன்ஸ்பெக்டர், எத்தனை நிரபராதிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரோ...' என்றார்.
இவை இரண்டும், நான் கேட்டறிந்த உண்மை சம்பவம். ஆனால், நம் அரசியல்வாதிகள், தன் மகன், மகள், பேரன்மார் என்று, எல்லாருக்கும் வஞ்சனை இல்லாமல், எங்கும், எதிலும் அதிகாரம், பொருள் வளத்தில் பகிர்ந்து கொடுத்து வாழ்வதைப் பார்த்தால், கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று நினைக்கத் தோன்றுகிறது, என்று முடித்தார் டாக்டர்.
- படித்து, நேர்மையாக உழைத்து, 30 - 40 ஆண்டுகள் பணியாற்றி, தன் பிள்ளைகளுக்கு படிப்பு தவிர, வீடு, வாசல், கார், நிலபுலன் என்று வேறு எதுவும் கொடுக்க முடியாமல், வேதனையோடு, வாழ்க்கையில் போராடி வரும் மக்களுக்கு இடையே, படிப்பறிவு இல்லா அரசியல்வாதிகளின் வாரிசுகள், சகல வசதிகளையும் அனுபவித்தபடி வலம் வருவது எந்த வகையில் நியாயம்... பட்ட பின் தான் திருந்துவரோ!
ஈ.வெ.ரா., தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம்: தம்மை தாம் பெரியவராகவும், தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருப்போர் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவர்.
இவர்களுக்கு எவ்வளவு பெரிய பதவியும், அதற்கேற்ப வருமானமும் வந்தாலும், ஆசையால் மனம் வாடி, சதா அதிருப்தியில் ஆழ்ந்தபடியே இருப்பர். ஆதலால், வருவாய் போதாமல் இருப்பதற்கும், கடன்காரர்களாயிருப்பதற்கும் காரணம், தம் பலவீனத்தின் பயனான பேராசையும், அவசரமுமேயாகும்!
என்னை, 'நான், சின்னவன்; குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதி உடையவன்' என்று எண்ணிக் கொண்டிருப்பதாலேயே என் யோக்கியதைக்கும் மீறி, மிகப் பெருமையுடையவனாகவும், தாராளமாக செலவு செய்பவனாகவும் கருதிக் கொண்டிருக்கிறேன்.
நான் மூட்டை தூக்கி, பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே ஒழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதுபோல், மனதைக் கட்டுப்படுத்த சக்தியிருந்தால், எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
- 'பி.ஏ., படிச்சிட்டேன்... எம்.ஏ., முடிச்சிட்டேன்... என் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்க மாட்டேங்குது...' என, 'ஒயிட் காலர்' வேலைக்காக, கனவு காணும் இளைஞர்கள் தலையில் கொட்டியது போல இருக்கிறது அல்லவா?