சி.எட்வீன்ராஜ், மாடம்பாக்கம்: தங்கள் பிரச்னைகளையே எப்போதும் பெரிதுபடுத்திப் பேசுவோரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சொல்கிறேன்... ரொம்ப கொஞ்சமாக மனநோய் உள்ளவர்கள் இவர்கள்! சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கமும், அடுத்தவர் பேசும்போது, பொறுமையாக கேட்காமல், குறுக்கே பேசும் சுபாவமும் இவர்களிடம் இருக்கும். இந்த குறைகளினாலேயே மற்றவர்களால் ஒதுக்கப்படுபவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் மீது அனுதாபம் கொள்ளுங்கள்; அவர்களது பிரச்னைகளைக் கேட்டு, ஆதரவாகப் பேசுங்கள் இது தான் நம்மால் செய்ய முடியும்!
பொ.பானுசந்தர், குன்றத்தூர்:உற்றார், உறவினர்களை வெறுத்து, ஒதுக்கி யார் வாழ்கின்றனரோ, அவர்களுக்கு கடைசி காலம் வரை பணத் தொல்லை என்பதே இருக்காது என்பது என் அபிப்ராயம். உங்க கருத்து என்ன?
உண்மைதான். ஆனால், வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை. ஒரு, 'சேப் - டிஸ்டன்ஸ் மெயின்டெயின்' செய்தாலே போதுமே!
ப.மனோகரன், ஜடயம்பாளையம்: வேலையில் இருப்போருக்கு மீண்டும் மீண்டும் ஊதிய உயர்வு வழங்குவதை விட, வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு அரசு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரலாமே!
'அரசு வேலை' எனக் கேட்காமல், 'வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரலாமே!' எனக் கேட்டதில் சந்தோஷம்! ஆனால், விஷம் போல் ஏறிவரும் விலைவாசியில், எப்போதோ நிர்ணயித்த ஊதியத்தில் எப்படி காலந்தள்ள முடியும் என, யோசித்துப் பாருங்கள்!
எஸ்.ரங்கராஜ், பரவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறையை வரவேற்கிறீர்களா?
சனிக்கிழமை விடுமுறை அளிக்கும் போது, அது மிச்சம், இது மிச்சம், அரசுக்கு கோடிக்கணக்கில் செலவு குறையும் என்றவர்கள், எது மிச்சமாச்சோ இல்லையோ இன்னமும் பற்றாக்குறை பட்ஜெட் தான் போடுகின்றனர். ஜனங்களுக்கோ ஏகப்பட்ட கஷ்டம் சனிக்கிழமை விடுமுறையால்! மனிதனை சோம்பேறியாக்கும் சனிக்கிழமை விடுமுறையில் எனக்கு ஒப்புதல் இல்லை!
எஸ்.முகம்மது அலி, மதுராந்தகம்: ஐஸ்கட்டியை உருக வைத்து, அதில் இளம் நுங்கை போட்டு சாப்பிட்ட அனுபவம் உண்டா?
ஓய்... நுங்கின், 'டேஸ்டை'யே கெடுத்து விடும் உமது, 'காம்பினேஷன்!' காரணம், ஐஸ் தண்ணி, நுங்கை, 'டைல்யூட்' செய்து விடும். அதற்கு பதில், இரண்டு, மூன்று இளநீரை வெட்டி, நீரை, 20 நிமிடங்கள், 'பிரிட்ஜில்' வைத்து, அத்துடன் சுத்தமாக தோல் உரிக்கப்பட்ட இளம் நுங்குகளைப் போட்டு, கொஞ்சூண்டு நன்னாரி சர்பத் சேர்த்து, ஒரு அடி அடித்துப் பாரும்! ஆஹா... அருமை என்பீர்!
டி.வீரகேசவபெருமாள், தாராபுரம்: ஆண்களை, பெண்கள் ஓரக்கண்ணால் பார்க்கின்றனரே... ஏன்?
நேருக்கு நேர் பார்த்தால், 'நாணம் இல்லை; வெட்கம் இல்லை...' என பட்டம் சூட்டி விடுவரே!
ஜெ.கரிகாலன், புதூர்: மூன்றாம் மனிதரிடம், மனைவியை அறிமுகம் செய்யும் போது, 'இவள் என் மிசர்ஸ்!' என்று சொல்ல வேண்டுமா அல்லது 'இவள் என் ஒய்ப்!' எனச் சொல்ல வேண்டுமா?
இரண்டாவது தான் சரி என்கிறார், ஆங்கில புலமை கொண்ட பெண் உதவி ஆசிரியை!