'நாத்தனாரா... ஆள் வைத்து அடி; சகோதரனா... கூலிப்படை வைத்துக் கொல்!'
நம், 'டிவி' சீரியல்கள் நமக்கு இப்படி சொல்லிக் கொடுக்கின்றன. இதற்கு, திரைப்படங்கள் மற்றும் வானொலிகள் எவ்வளவோ பரவாயில்லை.
இன்றைய கல்வித் தளங்களோ, பண்பாட்டை எங்கே சொல்லித் தருகின்றன! சொந்தக் காலில் நில், உயர்ந்த சம்பளம், பெரிய பதவி இவை தாம் வாழ்நாள் லட்சியங்கள் என்றும், காசு, துட்டு, மணி என்ற புதுப்பாடங்களை அல்லவா சொல்லி தருகின்றன.
பெண்களுக்கு தரப்பட்ட கல்வி, கலாசாரம் போன்றவை பண்பாட்டு தளங்களில் சரி வர வேலை செய்கிறதா என்றால், விவாகரத்துகள், மேலைநாட்டு விவாகரத்து விகிதாச்சாரங்களை தொட்டு விடுமோ என்கிற அச்சமே ஏற்படுகிறது.
சொந்த பந்தங்கள் மீது இருந்த அன்பு மாறி, சொத்து, வசதிகள், ஆடம்பரங்கள் மீது கண்கள் பதிந்து விட்டன.
அக்காலத்தில், மூத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இருந்த போராட்ட காலகட்டம் குறைவாக இருந்தது.
இப்போது, 'பெரிசு'களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு விட்டதால், இவர்களுக்குள் உள்ள இழுபறி காலம் ரொம்பவும் நீண்டு, ரசாபாசத்தில் நிறுத்தி விட்டது.
இரு தலைமுறைகளுக்கும் இடையே இருந்த பேச்சு வார்த்தைகள் சுருங்கி, 'என்னன்னா என்னன்னு இருந்துக்கிறது தான், நமக்கு மரியாதை'ங்கிற பாதுகாப்பு அரண் கட்டிக் கொண்டு விட்டது மூத்த தலைமுறை.
'ரொம்ப பேசாதீங்க; எல்லாம் எங்களுக்கு தெரியும்...' என்கிற மனோபாவம், இளைய தலைமுறைக்கு வந்து விட்டது.
'கண்டும் காணாதிருத்தல் கவுரவம்; பேசினால் சண்டை...' என்கிற தத்துவத்தைப் பின்பற்றாத மூத்த தலைமுறை, கடைசியில் நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறது.
பாரம்பரியப் பெருமைகளுக்கும், நவீனங்களுக்கும் இடையே நடக்கும் ஓட்டப் பந்தயத்தில், பாரம்பரியப் பெருமைகள் நொண்டிக் குதிரைகளாகி பிந்துகின்றன; பின் வாங்கவும் செய்கின்றன.
போய் சேராதா என்று இளைய தலைமுறையும், போய்ச் சேரமாட்டோமா என்று மூத்த தலைமுறையும் ஆசைப்பட ஆரம்பித்து விட்டது.
சொல்புத்தி; சுயபுத்தி இல்லை; முட்டி மோதித் தெரிந்து கொள்ளட்டும் என, மூத்த தலைமுறை பாதை விடாமல் வழிமறித்து நிற்க, இளைய தலைமுறையும் காயம்பட்டு தெரிந்து கொள்ளத் தயாராகி விட்டது.
என் அனுபவத்தில், 70 வயதுகளில் இறந்தவர்களுக்கு அமைதியான அஞ்சலியோ அல்லது சிரிப்பொலியோ தான் கிடைத்திருக்கிறது.
தமிழக சட்டமன்றப் பேரவையின் முன்னாள் சபாநாயகர் புலவர் கோவிந்தன் இறந்தபோது அவருக்கு வயது, 72; இவரது மறைவிற்கு நான் செய்யாறு போயிருந்தேன். அந்த வீட்டில் ஒலித்த அழுகையின் உச்சபட்சங்கள், அவர் வாழ்ந்த உயர்ந்த, பாசமிகு வாழ்வை எனக்கு உணர்த்தியது.
நிபந்தனைகளற்ற முறையில் அன்பு காட்டுதல்; வீணே மூக்கை நுழைக்காதிருத்தல்; தேவைப்பட்டாலொழிய ஆஜராகாதிருத்தல்; உடலால், மனதால், பொருளாதாரத்தால் இயன்ற உதவிகள்; அதிகமாக எதையும் எதிர்பாராதிருத்தல், எந்த விதத்திலும் பாரமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுதல் ஆகிய இந்த ஏழு ஸ்வரங்களையும் ஒழுங்காக வாசித்தால், இளைய தலைமுறையுடனான முரண்பாடு பெட்டிப் பாம்புகளாகி விடும் என்பது நிச்சயம்.
லேனா தமிழ்வாணன்