விருதை குறி வைக்கும் தனுஷ்!
வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த, ஆடுகளம் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ். அதிலிருந்து விருதுகளை நோக்கியே அவரது கதை தேர்வு இருந்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் அதே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கும், வடசென்னை படம், அவருக்கு, மறுபடியும் விருதை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இப்படத்தில் தனுஷுக்கு மூன்று விதமான வேடம். அதில், இரு வேடம், இதுவரை அவர் நடித்திராத, வித்தியாசமான வேடம் என்கின்றனர். அந்த வேடங்களுக்காக தன், 'பாடி லாங்குவேஜை' மாற்றி நடிக்கிறார் தனுஷ்.
— சினிமா பொன்னையா
ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலை, 'கேட்ச்' செய்த தமன்னா!
அஜித்தின், வீரம் படம் மூலம், 'ரீ - என்ட்ரி' கொடுத்த தமன்னா, ஆர்யாவுடன், விஎஸ்ஓபி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, முன்வரிசை கதாநாயகர்களுடன் நடிப்பதற்காக முண்டியடித்து வந்த தமன்னா, ஆர்யாவின் நண்பரான விஷாலை பிடித்து, லிங்குசாமி இயக்கத்தில், அவர் நடிக்கும், சண்டைக்கோழி - ௨ படத்தை கைப்பற்றி விட்டார். இப்படத்தில், அக் ஷரா ஹாசனைத் தான் முதலில் நடிக்க வைப்பதாக இருந்தார் லிங்குசாமி. ஆனால், ஆர்யாவின், 'ஸ்ட்ராங்க் ரெகமண்டேஷன்' காரணமாக, விஷாலும் அவருக்கு சாதகமாக பேசியதால், இப்போது, தமன்னாவே அப்படத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளார். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
- எலீசா
கலை நிகழ்ச்சி நடத்தும் அமலா பால்!
இயக்குனர், ஏ.எல்.விஜயை திருமணம் செய்து செட்டிலாகி விட்டபோதும், தன் தாய்மொழியான மலையாளத்தில், அவ்வப்போது நடித்து வருகிறார் அமலாபால். அத்துடன், வெளிநாடுகளில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். விருது வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் நடிகர், நடிகையரை துபாய் மற்றும் சிங்கப்பூர் அழைத்துச் சென்று, அங்கு, நடனமாட வைத்து கலைநிகழ்ச்சி நடத்துகிறார். இதன் மூலமாக, சினிமாவில் நடித்து சம்பாதித்ததற்கு இணையாக பெருந்தொகையை சம்பாதித்து வருகிறார். ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது!
— எலீசா
விஷாலை டென்ஷன் செய்யும் விஜய் - அஜித் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகி விட வேண்டும் என்பதற்கான முதல்கட்ட முயற்சியாக, நடிகர் சங்கத்தை பிடித்து விட வேண்டும் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால், நாடக நடிகர்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார். அத்துடன், இப்பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கும் விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களை ஓரங்கட்டி விட வேண்டும் என்பதும் அவரது, 'டார்க்கெட்!'
அதனால், தற்போது தன் ரசிகர் மன்றத்தையும் வளர்த்து வருகிறார். இதனால், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், செம காண்டாகியுள்ளனர். அதனால், விஷாலுக்கு எதிரான செய்திகளை இணைய தளங்களில் பரப்பி, அவரை டென்ஷன் செய்து வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பப்ளிமாஸ் நடிகையின் அழகை, நடிகர்கள் வட்டாரம் மானாவாரியாக வர்ணித்துக் கொண்டிருக்க, நீயா நடிகை, சமீபத்தில் ஒரு பட விழாவில், அவர் எதிரிலேயே, 'இவரெல்லாம் ரொம்ப சாதாரணமான பெண்...' என்று கூறி விட்டார். இதனால். அதிர்ச்சியடைந்த பப்ளிமாஸ் நடிகை, தன் அபிமான கதாநாயகர்களை அழைத்து, தன்னை மட்டம் தட்டிய அந்த நடிகையை, வார்த்தைகளால் கிழி கிழியென்று கிழித்து வருகிறார்.
அட்டகத்தி நடிகைக்கு, மேல்தட்டு கதாநாயகர்களுடன், 'டூயட்' பாடும் ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால், இயக்குனர்களின் பார்வை, அவர் பக்கம் திரும்பாததால், தற்போது இரண்டாம் தட்டு கதாநாயகர்கள் சிலருடன், ரகசிய, 'மீட்டிங்' போட்டு வரும் நடிகை, படு கவர்ச்சியான உடை அணிந்து சென்று, எதிரில் இருப்பவர்களை கிறங்கடித்து வருகிறார்.
பையா நடிகையை, நள்ளிரவு பார்ட்டிகளுக்கு வருமாறு சில நடிகர்கள் அடிக்கடி டார்ச்சர் கொடுக்கின்றனர். ஆனால், அம்மணியோ, 'போதைக்கு வசப்பட்டால் தன் உடல் பெருத்து, அசிங்கமாகி விடுவோம்...' என்று நினைத்து, 'டேக்கா' கொடுத்து வருகிறார். அதேசமயம்,
நடிகர்களுடன் ஆசைதீர குத்தாட்டம் போட்டு, 'பார்' திறக்கும் நேரம் வரும் போது, நைசாக, 'எஸ்கேப்'பாகி விடுகிறார்.
சினி துளிகள்!
கமல் நடித்த, பாபநாசம் படத்தை தயாரித்த நடிகை ஸ்ரீப்ரியா, அடுத்து ஒரு மலையாள படத்தை தமிழில், 'ரீமேக்' செய்யும் முயற்சியில் இருக்கிறார்.
உப்புக்கருவாடு படத்தில், கருணாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நந்திதா.
அவ்ளோதான்!