அன்புள்ள அம்மா —
என் வயது 27; என் கணவரின் வயதும், 27. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சமீபத்தில் தான், எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில், என் கணவரின் பாக்கெட்டில், ஒரு கடிதம் பார்த்தேன். அதில், என் கணவரின் பெயர் போட்டு, 'நீயும் தப்பு செய்யல; நானும் செய்யல. சாமி தான் தப்பு செய்துடுச்சு. நான் உனக்கு வேணாம்; உங்க வீட்ல பாக்குற பொண்னை, கல்யாணம் செய்துக்க. உன் கூட, 'பஸ்ட் இயர்'ல சந்தோஷமா இருந்தேன். உங்க அப்பா நல்ல மனுஷன். நம் விஷயம் அவருக்கு தெரிய வேணாம்; மனசு கஷ்டப்படுவார். உங்க அக்கா ரெண்டு பேரும் சொல்றத கேளு. நீ என்ன காதலிக்கும் போது, என்ன ஜாதின்னு கேக்கல; நானும் சொல்லல. நான் வேற ஜாதி. இத உன்கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு மன்னிச்சிடு. உங்க அக்கா என்கிட்ட போன்ல பேசும் போது, உங்களோட வசதியப்பத்தி பேசினாங்க. அது, இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு. உனக்காக, நான், என் வீட்டை விட்டு வருவேன். ஆனா, நீ வர மாட்டேன்னு எனக்கு தெரியும். எனக்காக உங்க வீட்ல யார்கிட்டயும் சண்டை போட வேணாம்....' என்று எழுதியிருந்தது.
இக்கடிதத்தை படித்ததும், என் கணவரிடம் கேட்டேன். 'அது என்னோடது இல்ல; என் கூட வேலை செய்ற பையன் வைச்சிருந்தான். அதை, வாங்கி பார்த்தவன் திருப்பி தர மறந்துட்டேன்...' என்றார்.
அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தது. ஏனெனில், கடிதத்தில் அவருடைய அக்கா பெயர் இருந்தது. அதனால், 'இந்த லெட்டர் உங்களுக்கு தானே வந்தது; உங்களுக்கு பிடிக்காம கல்யாணம் செய்துக்க, நான் தான் கிடைச்சேனா?' என்று கேட்டேன். அதற்கு மறுத்து ஏதேதோ சொல்லி, என்னை சமாதானப்படுத்தினார்.
அதன்பின், மூன்று மாதம் சென்றதும், என் கணவரின் மொபைலை எதேச்சையாக பார்த்தேன். அதில், அவரின் பெயரோடு, அப்பெண்ணின் பெயர் சேர்த்து, ஒரு மெயில் வந்திருந்தது. 'இது யாரோடது'ன்னு கேட்டேன். 'தெரியாது...' என்றார். கோபத்தில் அவரை நன்றாக திட்டி விட்டேன்.
'எது கேட்டாலும் தெரியாதுன்னு எதுக்கு சொல்றீங்க... இனிமேல், எதுலயும், என் பேரோட சேர்த்து உங்க பேர எழுத மாட்டேன். நீங்க எனக்கு புடவை, பூ எதுவும் வாங்கி தர வேணாம். உங்க ரெண்டு பேருக்கும், காதலித்து ஊர் சுத்த தெரிஞ்சுது; கல்யாணம் செய்துக்க தெரியலயா... நீயும் புடிக்காம கல்யாணம் செய்துட்டு, எனக்கு ஒரு புள்ளய குடுப்ப. அவளும், புடிக்காம ஒருத்தன கல்யாணம் செய்துக்குட்டு, புள்ளய பெத்துக்குவா. உங்க ரெண்டு பேருக்கும் நானும், அவனும் ஏமாளியா தெரியுறோமா? வேணும்ன்னா அவள ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்கோ; நான் ஏதும் கேக்க மாட்டேன்...' என்று கூறினேன். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அன்றிலிருந்து கடந்த, 10 மாதங்களாக தினமும் அவர் என்னிடம் பேசும் போதெல்லாம், இதை சொல்லி காட்டியபடியே இருந்தேன். ஆனால், அவரோ எதுவும் நடக்காதது போல, என்னுடன் இயல்பாக பழகினார். ஆபிசுக்கு போனால், இரு முறையாவது போன் செய்து விசாரிப்பார். நான் ஊருக்குச் சென்றிருந்தாலும், ஒரு நாளைக்கு மூன்று முறையாவது போன் செய்து விடுவார்.
என்னிடம் பாசமாக இருப்பார். வேறு எந்த பெண்ணிடமும் போனில் கூட பேசுவதில்லை. அது எனக்கு நன்றாக தெரியும். 'இப்படிப்பட்ட கணவரை எனக்கு தந்ததுக்கு நன்றி'ன்னு கடவுளுக்கு கூட நன்றி சொல்வேன். சாப்பிடும் போது எனக்கு ஒரு வாய் ஊட்டிய பின்பே அவர் சாப்பிடுவார். என் தோழிகள், 'எங்க புருஷன் எங்கள செல்லமா கூப்பிட மாட்டாங்க; உன் நல்ல மனசுக்கு தான் ஆண்டவன் நல்லவரா குடுத்திருக்கார்...' என்பர்.
என் கணவர் எவ்வளவு லேட்டா வந்தாலும் ஏன்னு கேட்கவோ, என் அம்மா வீட்டுக்கு போயிருந்தா, 'என்ன பார்க்க வாங்க'ன்னோ கூப்பிட மாட்டேன்.
தற்போது, எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. ஒருநாள், என் கணவர் போனில் பேசும் போது, 'என்ன பாக்க வாங்கன்னு கூப்பிட மாட்டேங்கிற; லேட்டா வந்தா, ஏன் லேட்டா வர்றீங்கன்னு கேக்க மாட்டேங்கிற, போன் செய்யலன்னா, ஏன் போன் செய்யலன்னு கேக்க மாட்டேங்கிறியே...' என்றார். அதற்கு, 'எனக்கு, என் குழந்தையிடம் உரிமை இருக்கு; உங்களிடம் இல்ல. நான், உனக்கு இரண்டாவது பொண்டாட்டி தான். அதனால, 'எங்க வேணா போ; என்ன வேணும்ன்னாலும் செய்'ன்னு உரிமையோட நீங்க எதிர்ப்பாக்குற இதெல்லாம் நான் செய்யறதில்ல...' என்றேன்.
அன்றிலிருந்து அவர் எனக்கு போன் செய்வதில்லை. நான் ஏழெட்டு முறை, போன் செய்த பின்னரே, 'என்ன விஷயம்'ன்னு கேட்டு, 10 நிமிடங்கள் பேசிட்டு வெச்சிடறாரு. இதனால், அவரை இழந்துருவேனோன்னு பயமா இருக்கு. எனக்கு சரியான அறிவுரை கூறுங்கள்.
என் கணவரின் பழைய காதல் நினைப்பு வரும் போது, என்னால் அவரிடம் இயல்பாக பேச முடிவதில்லை. ஆனால், என் புருஷன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு நல்ல அறிவுரை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்புள்ள மகளுக்கு,
ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன் குறைந்தபட்சம், நான்கு பேரை காதலிப்பர். இரண்டு பேரை, ஒருதலையாய் காதலித்திருப்பர். வெளிப்படையாக இல்லை என்றாலும் மனதுக்குள்ளாவது, யாரையாவது காதலித்திருப்பர். பெரும்பாலோர், திருமணத்திற்கு பின், தங்கள் காதல்களை மறந்து விடுவர். திருமணத்திற்கு பின், எங்காவது தாங்கள் காதலித்தவர்களை சந்திக்கும் போது, தங்கள் வாழ்க்கைத் துணைக்கு, நண்பர் - தோழி என்றும், குழந்தைகளுக்கு, ஆன்ட்டி - அங்கிள் என்று அறிமுகப் படுத்துவர்.
உன் கணவனும் காதலை தலை முழுகி, மனைவியுடன் முழு மனதாய் குடும்பம் நடத்தும் குணம் கொண்டவனே!
கணவனை குத்திக்காட்டுவதில், உனக்கு ஒரு குரூர சந்தோஷம். தீப் புண்ணை விட மோசமான வலியை தரக்கூடியது, நாக்கினால் வீசப்படும் வசவு வார்த்தைகள். அடிக்கடி குத்தி காட்டுவதன் மூலம் மறந்து விட்ட முன்னாள் காதலியை உன் கணவனுக்கு நினைவூட்டுகிறாய். அத்துடன், 'நாமே மறந்துவிட்டவளை, நம் மனைவி நினைவூட்டி காயப்படுத்துகிறாளே... இவளை பழிவாங்க, அவளுடன் மீண்டும் தொடர்பு கொண்டால் என்ன...' என, உன் கணவனை நெகடிவ்வாக நினைக்க வைத்து விடும் உன் குத்தல் பேச்சு.
முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்? சட்டப்படி உன்னை மட்டுமே திருமணம் செய்து கொண்டார் உன் கணவர். அத்திருமணம் எப்படி இரண்டாம் திருமணம் ஆகும்? உன் ஏச்சு பேச்சு தாங்காமல் தான், உன் மீதான அக்கறை விசாரிப்பை, குறைத்துக் கொண்டுள்ளார்.
கடவுள் கொடுத்த வரம், உன் கணவன் என்கிறாய். அந்த வரத்தை சுரண்டி சுரண்டி ஏன் ரத்தம் வழிய வைக்கிறாய்?
உன் கணவனிடம் மனம் விட்டு பேசி, மன்னிப்பு கேள். இனிமேல், எக்காரணத்தை முன்னிட்டும் உன் கணவனின் முன்னாள் காதலை நினைவூட்டாதே!
முன்னாள் காதலியின் கடிதம் மற்றும் அவனின் மின்னஞ்சல் பற்றிய நினைவுகளை, உன் மனதிலிருந்து முழுமையாக அகற்று.
உன் குழந்தைக்கு சந்தோஷமாக தாய்ப்பால் புகட்டு. நீ, உன் குழந்தை மீது காட்டும் அன்பும், பாசமும் மறைமுகமாக கணவனின் மீது பாயும்; கணவனுக்கோ உன் மீது பாயும்.
பேச நினைப்பதெல்லாம் பேசாதே. பேசும் வார்த்தைகளை சென்சார் செய். மனதை பக்குவப்படுத்த, பெருந்தன்மையை வளர்த்துக் கொள்.
உன் கணவனை தூற்றவும் செய்யாதே; இந்திரன், சந்திரன் என்று புகழவும் செய்யாதே. இரண்டுக்கும் இடையில், மத்திம நிலையில் நில்.
உன் திருமண வாழ்வு சிறக்க, இறைவனை வேண்டுகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.