தன் சுயசரிதை நூலான, 'அக்னி சிறகுகள்' நூலிலிருந்து அப்துல் கலாம் எழுதியது:
கடந்த, 1981ல் குடியரசு தினம், ஒரு சந்தோஷ ஆச்சரியத்தை அள்ளிக் கொண்டு வந்தது. உள்துறை அமைச்சகம், எனக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருப்பதாக டில்லியிலிருந்து தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தனர். அதையடுத்து, எனக்கு தொலைபேசியில் வந்த முக்கியமான விஷயம், பேராசிரியர் தவனின் வாழ்த்துச் செய்தி தான். என் குருவே என்னை பாராட்டியது போல பேரானந்தத்தில் பரவசமடைந்தேன். பேராசிரியர் தவனுக்கும், பத்மவிபூஷன் விருது கிடைத்ததில், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இதயம் நிறைந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன். பின், டாக்டர் பிரம்ம பிரகாஷிடம் தொலைபேசி மூலம் நன்றி கூறினேன். 'இந்த சம்பிரதாயம் எல்லாம் நமக்குள் எதற்கு...' என்று என்னை கடிந்து கொண்ட டாக்டர் பிரம்ம பிரகாஷ், 'என் மகனுக்கு விருது கிடைத்தது போல இருக்கிறது...' என்றார். என் மீது அவர் கொண்டிருந்த பாசத்தில் நெகிழ்ந்து போனேன். அதற்கு பின்பும் என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசையை, அறையில் தவழ விட்டேன். அந்த இசை, என்னை இன்னொரு காலத்திற்கு, வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது. நான் ராமேஸ்வரம் சென்றேன்; என் அம்மாவை கட்டியணைத்தேன்; அப்பாவின் விரல்கள் என் தலையை கோதின; என் வழிகாட்டி ஜலாலுதீன், இச்செய்தியை மசூதி தெருவில் கூடியிருந்தோரிடம் அறிவித்தார்.
என் சகோதரி ஜொஹரா எனக்காக விசேஷமான இனிப்புகளை தயாரித்துக் கொடுத்தார். லட்சுமண சாஸ்திரிகள் என் நெற்றியில் திலகமிட்டு, ஆசி வழங்கினார். தான் நட்ட செடி வளர்ந்து, மரமாகி இந்திய மக்களுக்கு கனிகளை தருவது கண்டு, அருட்தந்தை சாலமன் புனித சிலுவையை ஏந்தி என்னை ஆசீர்வதித்தார்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பலதரப்பட்டவர்களை, என் பத்மபூஷன் விருது கிளப்பி விட்டது. சிலர், என் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். வேறு சிலரோ, தேவையில்லாமல் எனக்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விட்டதாக கருதினர். என் நெருங்கிய சகாக்களில் சிலர், என் மீது பொறாமை கொண்டவர்களாக மாறி விட்டனர்.
கோணல் புத்தி கொண்டு தாறுமாறாக சிந்தித்து, ஏன் இப்படி சிலர் வாழ்க்கையின் உயர் நெறிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்... வாழ்க்கையில் சந்தோஷம், நிறைவு, வெற்றி எல்லாமே சரியான முடிவுகளை தேர்ந்தெடுப்பதை பொறுத்தே கிடைக்கின்றன.
உங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் வேலை செய்யக்கூடிய சக்திகள் வாழ்க்கையில் உண்டு. எவை நன்மை பயக்கும் சக்திகள், எவை தீங்கு விளைவிக்கும் சக்திகள் என்பதை, ஒருவர் இனம் கண்டு, தீயதை ஒதுக்கி, நல்லதையே நாட வேண்டும்.
என்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து விட்டதாக நீண்ட நாட்களாக எண்ணிக் கொணடிருந்தாலும், அதை அலட்சியப்படுத்தி வந்திருந்தேன். இப்போது அத்தருணம் வந்து விட்டது என்று என் அந்தராத்மா கூறியது. என், 'சிலேட்டு'ப் பலகையை துடைத்து, புதிய, கணக்குகளை நான் போட்டாக வேண்டும்.
முந்தைய கணக்குகளை நான் சரியாக செய்திருக்கிறேனா, வாழ்க்கை பள்ளியில், ஒரு ஆசிரியரின் மதிப்பீடு, அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை.
மாணவர்கள் தான் தனக்கான கேள்விகளை சுயமாக அமைத்துக் கொள்வதுடன் தன் சொந்த பதில்களையும் தேடிக் கொள்ள வேண்டும். சுய திருப்தி அடையும் வகையில், அப்பதில்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
தீர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், 'இஸ்ரோ'வின் 18 ஆண்டு கால வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டும் என்பது வேதனையான விஷயம். புண்பட்ட என் நண்பர்களை பொறுத்தவரையில், லூயி காரலின் கீழ்வரிகள் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது:
என் மீது நீங்கள்
கொலைபழி சுமத்தலாம்
அல்லது எனக்கு
புத்தியில்லை என்று சொல்லலாம்
சில சமயம் நாமெல்லாம்
பலவீனப்பட்டு விடுகிறோம்
ஆனால், போலி நடிப்பு மட்டும்
என் குற்றங்களில் ஒன்றல்ல!
- நடுத்தெரு நாராயணன்