கொடுத்தால் கிடைக்கும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கொடுத்தால் கிடைக்கும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஆக
2015
00:00

''உங்க சம்பளத்துக்கு, எந்த வங்கிக்கு போனாலும், அதிகபட்சம் எட்டு லட்சம் ரூபா வரை தான் லோன் கிடைக்கும். ஆனா, வீடு கட்ட குறைஞ்சது, 15 லட்சம் ரூபாயாகும்,'' என்றார் பில்டர்.
''பதினைஞ்சு லட்சமா...'' என்றான் யோசனையுடன் அரவிந்தன்.
''பில்டிங் மெட்டீரியல் எல்லாம், ஏகத்துக்கு விலையேறிப் போச்சு. ஆள் கூலியும் எகிறிடுச்சு. கட்டுமானம் ஆரம்பிச்சு முடியற நேரம் இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படலாம்,'' என்று கான்ட்ராக்டர் பேசிக் கொண்டு போக, 'லோன் எட்டு லட்சம் ரூபான்னா, மேற்கொண்டு சேமிப்பு பணம், நகைகளை விற்றுன்னு மூணு லட்சம் ரூபா திரட்டினாலும், நாலு லட்சம் துண்டு விழுதே...' என யோசனையில் ஆழ்ந்தான் அரவிந்தன்.

அவன் மைண்ட் வாய்சை படித்தவர் மாதிரி, ''வீடு கட்ற யாருமே மொத்தமா கையில பணத்தை வச்சுகிட்டு ஆரம்பிக்கறதில்ல. வீட்டு லோன் மற்றும் கையிருப்பு போக உறவு, நட்புங்க கிட்ட கடன், கைமாத்துன்னு வாங்கி தான் சமாளிக்கறாங்க. இன்னைக்கு அவங்க உதவினால், நாளைக்கு நீங்க உதவப் போறிங்க... அவ்வளவுதானே! முயற்சி செய்து பணம் தயார் செய்திட்டு சொல்லுங்க. பூஜை போட்டு வேலைய ஆரம்பிச்சுடலாம்; எண்ணி நாலு மாசத்துல, புது வீட்டு சாவிய கொடுத்துடுவோம்,'' என்றார்.
யார் உதவப் போகின்றனர் என்ற யோசனையுடன், பில்டர் அலுவலகத்தை விட்டு வெளியேறியவன், மனைவிக்கு போன் செய்து, ''நான் கொஞ்சம் வெளியே போறேன்; என்ன ஏதுன்னு வந்து சொல்றேன்,'' என்று சொல்லி, பூந்தமல்லிக்கு பஸ் பிடித்தான்.
பெரியப்பாவின் வீட்டில் போய் இறங்கினான் அரவிந்தன்.
அடையாளம் தெரியாமல் விழித்தார் பெரியவர்.
''என்ன தெரியலயா பெரியப்பா... நான் தான் உங்க தம்பி மகன் அரவிந்த்,'' என்றான்.
''அடடா அரவிந்தனா... இப்பதான் உனக்கு இந்த பெரியப்பா நினைவு வந்ததா... அடிக்கடி வரப்போக இருந்தாத் தானே அடையாளம் தெரியும். இப்படி ஒரேடியாய் ஆண்டுக் கணக்குல வீட்டுப் பக்கம் வராம இருந்தா எப்படி? எனக்கு உன் முகம் மறந்து போச்சு அதோட பார்வையும் மங்கிப்போச்சு,'' என்றார். பெரியம்மாவை வணங்கி, கொண்டு வந்திருந்த பழக்கூடையை நீட்டினான்.
''ஊர்ல மனைவி, மகனெல்லாம் சவுக்கியமா?'' என்று கேட்டாள் பெரியம்மா.
''சவுக்கியம் பெரியம்மா, இப்ப உங்க உதவிய எதிர்பாத்து வந்திருக்கேன். ஊர்ல, ஒரு இடம் வாங்கிப் போட்டிருந்தேன். வீடு கட்ற வாய்ப்பு இப்பதான் கூடி வந்திருக்கு. மொத்தம், 15 லட்சம் ரூபாய்க்கு எஸ்டிமேஷன்; வீட்டு லோன் கையிருப்பு போக, நாலு லட்சம் துண்டு விழுது. பெரியப்பா கொடுத்து உதவணும். இன்னைக்கே கொடுக்கணும்ன்னு இல்ல. வேலை ஆரம்பிச்சு, ரெண்டு மாசத்துக்கு பின், கைக்கு கிடைச்சா போதும்,'' என்றான்.
''நாலு லட்சமா!'
''உங்ககிட்ட அதுக்கு மேலயும் இருக்கும்ன்னு தெரியும். ரிடையரான போது, பி.எப்., கிராஜுவிடின்னு வந்திருக்குமே...''
''அது ஆச்சே அஞ்சாறு வருஷம்... கையில வாங்குனேன், பையில போடல, காசுபோன இடம் தெரியலங்கற மாதிரி போய்ட்டுதுப்பா,'' என்றார்.
''எப்படி பெரியப்பா... உங்களுக்கு என்ன செலவு?''
''மருத்துவ செலவுதான்; வேறென்ன... ஏன் உனக்கே தெரியுமே... ஒரு முறை ஹார்ட் ஆப்ரேஷனுக்கு உன்கிட்ட கூட பணம் கேட்டிருக்கேன்,'' என்றார்.
''முயற்சி செய்து பாருங்க, உங்ககிட்ட இல்லன்னாலும், தெரிஞ்சவங்க யார் கிட்டயாவது சொல்லி ஏற்பாடு செய்ங்க. நான் உங்க தம்பி மகன், உங்கள விட்டா எனக்கு யார் இருக்கா,'' என்றான்.
''பென்ஷன்ல வாழ்க்கை ஓடுது; வயசு போன காலத்துல, யார்கிட்ட போய் ஜாமின் நின்னு உனக்கு பணம் வாங்கித்தர முடியும் சொல்லு... வாய் விட்டு கேட்டுட்டே ஏதாவது கிடைச்சா சொல்றேன்,'' என்றார் பிடி கொடுக்காமல்!
அங்கிருந்து கிளம்பி ஆவடி போனான்.
வெளியில புறப்பட்டு கொண்டிருந்த மாமாவை நிறுத்தி வணக்கம் போட்டான்.
''மாமா... நான் அரவிந்தன்.''
''சொல்லுப்பா,'' என்று தோளில் ஆதரவாக கைபோட்டார். அவர் பார்வை சந்தேகமாக, அவனை வருடியது.
தேடி வந்த காரணத்தை சுருக்கமாக சொல்லி, ''நீங்க தான் உதவணும் மாமா,'' என்றான். ''அடடா...'' என்ற மாமாவின் குரலிலேயே, பாதி தெரிந்து விட்டது.
''எனக்கும் வீடு கட்டும் வேலை ஆரம்பமாயிடுச்சு. பட்ஜெட் எக்கசக்கம்... எனக்கே பணம் தேவைப்படுது,'' என்றார்.
''நாம எங்கே வீடு கட்டப்போறோம்... சொல்லவே இல்லயே...'' என்று கேட்ட மனைவிக்கு கண் ஜாடை காட்டி, ''அதான் அந்த வேளச்சேரி காலிமனை, சுரேஷ் சொல்லிட்டு போனானே...''என்று இழுத்தார்.
''ஓ... ஆமாம் ஆமாம்...''என்றாள்.
தன்னை தவிர்க்கின்றனர் என்று தெரிந்ததும், ''பார்த்து செய்யுங்க மாமா; ரெண்டு மாசத்துல கொடுத்துடுவேன்,'' என்று சொல்லிவிட்டு வந்தான்.
இன்னோர் இடத்தில் முழு விவரம் கேட்டு, 'எல்லாம் சரி... உன் ஒருத்தன் சம்பாத்தியம். பையன் படிப்பு முடிச்சு, வேலை கிடைச்ச பின் தான் பணத்தை பார்க்க முடியும். அதுக்கு இரண்டு ஆண்டுகளோ, நாலு ஆண்டுகளோ ஆகலாம். அதுவரைக்கும், உன் சம்பளத்தில லோன் கட்டுவியா, வீட்டு செலவ கவனிப்பியா, பையன் படிப்பு செலவு செய்வியா... இவ்வளவு செலவுக்கு நடுவுல, பணத்தை எப்படி கொடுப்பே... அதுவும் சில மாசத்துல! உன் வயித்து வலிக்கு, வாய்க்கு வந்ததை சொல்லி பணம் கேட்கற... திரும்ப வாங்கறது கஷ்டம் போல் தெரியுதே...' என்று கைவிரித்தனர்.
பால்ய நண்பனோ, 'இல்லேன்னு சொல்ல முடியாது; ஆனா, அவ்வளவு பணம் என்கிட்ட இல்ல. 50 ஆயிரம் ரூபாய் வரை எதிர்பாக்கலாம்; அதுவும் இப்ப இல்ல, நாளாகும்...' என்றான்.
'பணம் இருக்கு; ஆனா, பொண்ணு கல்யாணம் எந்த நேரத்துலயும் கூடி வரும் போலிருக்கு... கைப்பணத்தை கொடுத்துட்டு, எங்களால அலைய முடியாதுப்பா...' என்று ஆளாளுக்கு சொன்ன பதில்களை சுமந்து, வீடு திரும்பினான் அரவிந்தன்.
கைப்பையை வீசி எறிந்து, நாற்காலியில் தொப்பென்று சாய்ந்தான் அரவிந்தன்.
''ஏங்க, என்னங்க ஆச்சு... எங்க போனிங்க? ஏன் இப்படி சோர்ந்துபோய் வர்றிங்க...'' என்று பதறினாள் மனைவி சுதா.
''சொந்தக்காரன்கள்ல பாதிபேர் ஓவர் நைட்ல பிச்சைக்காரனாயிட்டானுங்க; மீதிப்பேர் பரதேசியாயிட்டாங்க. எவன்கிட்டயும் எனக்கு கொடுக்க ஓட்டைக் காலணா கூட இல்ல,'' என்றான் விரக்தியாக!
''புரியறமாதிரி சொல்லுங்க; நீங்க, ஏன் அவங்ககிட்ட போனீங்க?''
''வீடு கட்டலாம்ன்னு பேசினோமே... அது விஷயமா காலைல பில்டர் கிட்ட பேசினேன். 15 லட்சம் ரூபாயாகும்ன்னு சொன்னார். வரவு, செலவு எல்லாம் கணக்கு போட்டு பாத்ததுல, நாலு லட்சம் ரூபா துண்டு விழுந்தது. கடனா கேட்டுப்பாக்கலாம்ன்னு பெரியப்பன், மாமன், மச்சான், பிரெண்டுன்னு ஒரு ரவுண்டு பாத்துட்டு வந்தேன். பலன், பூஜ்ஜியம். இவங்கெல்லாம் சொந்தக்காரங்க... இவங்கள நம்பறதுக்கு பிச்சைக்காரன நம்பலாம்,'' என்று புலம்பித் தள்ளினான்.
அப்போது தான் கல்லூரியிலிருந்து திரும்பிய மகன், தந்தை டென்ஷனுடன் இருப்பதைப் பார்த்து, அம்மாவிடம், ''என்னம்மா பிரச்னை,'' என்று கேட்டான்.
''வேற ஒண்ணுமில்ல ராஜா... வீடு கட்டலாம்ன்னு இருந்தோம் இல்லயா... பில்டர் சொன்ன பட்ஜெட்டுக்கு கொஞ்சம் பணம் குறைஞ்சது. சொந்த பந்தங்க கிட்ட கேட்டுப் பாக்கலாமேன்னு பூந்தமல்லில ஆரம்பிச்சு பல இடங்களுக்கும் அலைஞ்சு திரும்பிட்டார் உங்கப்பா. ஒருத்தரும் கொடுக்கறேன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லல,'' என்றாள்.
''எப்படிம்மா கொடுப்பாங்க... நாம யாருக்கு கொடுத்தோம்?'' என்று, பட்டென்று கேட்டான் மகன்.
''டேய்... என்னடா பேசற?''
''ஆமாம்மா... அப்பா எப்போதாவது யாருக்காவது சொந்தம், பந்தம்ன்னு உதவி செய்திருக்கிறாரா இல்ல உதவின்னு கேட்டு வந்தவங்களுக்கு தான் கொடுத்துருக்காரா... எந்த உரிமையில, தைரியத்துல மத்தவங்க கிட்ட பணத்துக்காக பாக்கப் போனாரு,'' என்று கேட்டவன், தன் தந்தையின் பக்கம் திரும்பி, ''கோபப்படாதீங்கப்பா... எனக்கு நினைவு தெரிஞ்சு, பல பேர் பண உதவி கேட்டு, நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. கிராமத்து பெரிய தாத்தா வைத்திய செலவுக்கு பணம் கேட்டு வந்திருக்காரு; மகள் கல்யாணத்துக்கு உதவி கேட்டு ஒருத்தர் வந்தாரு. இன்னொருவர், கடன் தொல்லையால பணம் கேட்டு வந்தாரு. அப்பெல்லாம் நம்மகிட்ட நிறைய பணம் இல்லன்னாலும், ஓரளவு இருந்துச்சு.
''ஆனா, நீங்க யாருக்கும் பணம் கொடுக்கல. 'ஏம்பா கொடுக்கல'ன்னு நான் கேட்கும் போதெல்லாம், 'கேட்டதும் கொடுத்தா நம்ம கிட்ட நிறைய இருக்குன்னு அடிக்கடி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. பேங்க்ல இருந்தா வட்டி வரும்; இவங்களுக்கு தந்தா அசலும் வராது; பணத்தை திருப்பி கேட்டு அலையணும்'ன்னு சொன்னிங்க.
''இன்னும் சிலருக்கு, 'சிகிச்சைக்கு ஏன் கடன் வாங்கறீங்க... தேறலைன்னா பணம் நஷ்டம் தானே... பேசாம கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்துடுங்கன்னும், கல்யாணத்தை ஏன் மண்டபத்துல வைக்கறீங்க... வீண் செலவு. ஏதாவது கோவில்ல வச்சு, தாலி கட்டலாமே'ன்னு சொல்லி அனுப்பியிருக்கீங்க. யாராவது உதவி கேட்டு வந்தால், வீட்டில் இருந்துகிட்டே இல்லேன்னு சொல்லியிருக்கீங்க.''
''ராஜா...''
''அப்பா... உங்கள புண்படுத்தறது என் நோக்கமில்ல. ஆனா, பிறருக்கு உதவாத நாம, பிறர் உதவிய எதிர்பாக்க தகுதியில்லன்னு சொல்ல வந்தேன். இன்னிக்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமே, உங்களுக்கு உணர்த்தியிருக்கும். இனி, யார்கிட்டயும் பணம் எதிர்பார்த்து, கை நீட்டாதீங்க.
''இப்பவே வீட்டை கட்டியாகணும்ன்னு எந்த நிர்பந்தமும் இல்ல. இத்தனை வருஷங்களா வாடகை வீட்ல வாழ்ந்த நாம, இன்னும் ஒரு சில வருஷம் இப்படியே வாழ்வோம். எனக்கு படிப்பு முடியட்டும்; சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன். நானே வீடு கட்டி கொடுத்துடறேன் போதுமா?'' என்று சொல்லி, தன் அறைக்குள் சென்றான்.
''அவன் ஏதோ துடுக்குத்தனமாக பேசிட்டான்; நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க. நீங்க வேணும்ன்னா பணத்தை மறைச்சு, வந்தவங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்க; எந்த நேரமும் நமக்கு அவசிய தேவை வரலாம்; அப்ப சமாளிக்க பணம் வேணும்ன்னு ஒரு முன் எச்சரிக்கையாத் தானே பணத்தை இறுக்கி வச்சீங்க. அது பையனுக்கு எங்க புரியும்...''என்று கணவனுக்கு ஆறுதல் கூறினாள்.
''இல்ல சுதா... அவன் சொல்றது ஒரு வகையில உண்மை தான். நான் இதுவரை யாருக்கும் எதுவும் செய்யலைங்கறது, சம்பந்தப்பட்டவங்ககிட்ட பணம் கேட்கும் போது நினைவுக்கு வந்து, தயக்கத்தோடு தான் போனேன். எல்லாரும் ஒட்டு மொத்தமா கை விரிச்சாங்க. பழைய விஷயத்தை நினைவுல வச்சு தான், என்னை கை விட்டாங்கன்னு ஒரு எண்ணம் இருந்தது. அதை, நம் மகன் உறுதி செய்துட்டான். அவன் சொன்னது போல, நாம செய்வது தானே நமக்கு திரும்ப வரும்; இனியாவது கொடுக்க கத்துக்கணும்,'' என்றான்.
அதன்பின், வீட்டு பிராஜக்ட்டை தள்ளிப் போட்டான். வழக்கம் போல் அலுவலகம் போய் வந்தான். உடன் வேலை செய்யும் அலுவலர், 'கொஞ்சம் பண நெருக்கடி; 50 ஆயிரம் வரை தேவைப்படுது. எத்தனை வட்டினாலும் பரவாயில்ல...' என்று தயங்கி தயங்கி கேட்டவரை, கைகாட்டி அமர்த்தி, 'ஐம்பாதியிரம் போதுமா...' என்று கேட்டு, மறுநாளே பணத்தை கொடுத்ததோடு, 'வட்டி எல்லாம் வேணாம்; பணத்தை உடனே திருப்பி தரணும்ன்னு இல்ல. சில வருஷத்துக்கு பிறகு தான் வீடு கட்டப் போறேன். அப்ப கொடுத்தால் போதும்...' என்றான்.

எஸ்.யோகேஸ்வரன்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X