கேள்வி: பைனரி மற்றும் டெசிமல் அமைப்பு குறித்து
எங்கள் பள்ளி கணினி ஆசிரியர் சிறப்பு வகுப்பில் விளக்கினார். ஆனாலும்,
எடுத்துக் காட்டுகள் தெளிவாக இல்லாததால் புரியவில்லை. புத்தகத்திலும்
சரியான விளக்க முறை இல்லை. முன்பு கம்ப்யூட்டர் மலரில் தாங்கள்
எழுதியுள்ளதாக என் நண்பன் கூறினான். இதனை விளக்கும் வகையில், அதே போல
எடுத்துக் காட்டுகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.பிரகாஷ், மேலூர்.
பதில்:
கம்ப்யூட்டரின் அடிப்படைச் செயல்பாட்டினை உணர்ந்து கொள்ள, டெசிமல் மற்றும்
பைனரி குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணிப்பொறி
அறிவியலைப் பாடமாக எடுத்துள்ளீர்களா என்று உங்கள் கடிதத்தில் எழுதவில்லை.
இருப்பினும் நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி விளக்கம் அளிக்கிறேன்.
நாம்
அனைவரும் எண்களை டெசிமல் சிஸ்டம் வழி பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி
என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள் தான் இந்த முறையில் அடிப்படையாக
இயங்குகின்றன. நன்றாகக் கவனியுங்கள், 0 முதல் 9 வரை இலக்கங்கள், எண்கள்
இல்லை. . இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம்.
ஆனால்,
கம்ப்யூட்டர்கள் வேறு வகையில் எண்களைக் கையாள்கின்றன. இரண்டே இரண்டு
இலக்கங்கள் தான்; அவை 0 மற்றும் 1. கம்ப்யூட்டர் எதனைச்
செயல்படுத்தினாலும், டெக்ஸ்ட், சொல், கடிதம், படங்கள் என எதுவாக
இருந்தாலும், அவை இந்த இரண்டு எண்களால் தான் குறிப்பிடப்படுகின்றன.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை 0 என்பது “off” நிலை, 1 என்பது “on” நிலை.
இதனைத்தான் பைனரி (binary) எனக் குறிப்பிடுகின்றனர். நீங்கள் புரோகிராமிங்
அல்லது கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து தீவிரமாகக் கணினியில்
செயல்பட்டால் தான், இது குறித்து தீவிரமாக அறிந்து செயல்பட
வேண்டியதிருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
டெசிமல்
சிஸ்ட த்தில், 1x10 = 10, 10x10=100, 100x10= 1000 எனத் தொடர்கிறோம்.
பைனரியில் 1x2=2, 2x2=4, 4x2=8, 8x2=16, 16x2=32 எனச் செல்ல வேண்டும். கீழே
இந்தக் கட்டத்தினைக் கவனியுங்கள். இது 10011 என்ற பைனரி எண் அமைப்பை
விவரிக்கிறது.
16(8×2) 8(4×2) 4(2×2) 2(1×2) 1
1 0 0 1 1
ஒரு
கட்டத்தில் “1” இருந்தால் அது “on” நிலை. அதன் மதிப்பு எடுத்துக்
கொள்ளப்படும். அதன்படி இங்கே 1+2+16 எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆக
மொத்தம் 19. பைனரி எண் 10011 மதிப்பு 19. அதாவது 19 என்ற எண் மதிப்பைக்
கம்ப்யூட்டருக்குத் தர 10011 என்ற பைனரியைத் தர வேண்டும்.
ஒரு டெசிமல்
எண்ணை எடுத்து, அதனைப் பைனரி எண்ணாக மாற்றினால், இது இன்னும் சற்று
தெளிவாகப் புரியும். எடுத்துக் காட்டாக 55 என்ற டெசிமல் எண்ணை எடுத்துக்
கொள்வோம். பைனரி மதிப்பு எண்களில் (1,2,4,8,16,32,64) எந்த எண் இதனைக்
கொள்ளும் மிகப் பெரிய எண் எனக் காண வேண்டும். அது 32. இந்த மதிப்பில் 1
என்ற மதிப்பை அமைக்கவும். இனி 55லிருந்து இந்த 32 ஐக் கழிக்க நமக்கு 23
கிடைக்கிறது. இதனைக் கொள்ளும் மிகப் பெரிய எண் 16. இதில் 1 என்ற மதிப்பை
அமைக்கவும். இப்படியே ஒவ்வொரு மதிப்பைக் கணக்கிட்டு அதற்கான பைனரி எண்ணில் 1
என்ற மதிப்பை அமைக்கவும். இப்படியே 0 கிடைக்கும் வரை
அமைக்கவும்.கீழ்க்காணும் வகையில் “55ன்” பைனரி அமையும்.
32(16x2) 16(8×2) 8(4×2) 4(2×2) 2(1×2) 1
1 1 0 1 1 1
அதாவது டெசிமல் எண் 55ன் பைனரி எண் 110111. இப்போது பைனரி குறித்து அறிந்திருப்பீர்கள்.
கேள்வி:
என் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 10க்கு
முன்பதிவு செய்துவிட்டேன். ஜூலை 29ல், விண்டோஸ் 10 என் கம்ப்யூட்டரில்
தானாக, தரவிறக்கம் செய்யப்பட்டுவிடுமா?
கா. செபாஸ்டியன், புதுச்சேரி.
பதில்:
அண்மையில் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 29ல்,
விண்டோஸ் 10 வெளியிடப்பட்டாலும், அது முதலில், இதன் சோதனைத் தொகுப்பினை,
“இன்சைடர் புரோகிராம்” மூலம் பயன்படுத்திய உறுப்பினர்களுக்கு மட்டுமே
தரப்படும். இவர்கள் இந்த முழுமையான சிஸ்டத்தினை இயக்கிப் பார்த்து,
இன்னும் பின்னூட்டுகள் கொடுப்பார்கள். அவற்றின் அடிப்படையில், ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, மற்றவருக்கு வழங்கப்படும். ஏன்,
அவசரப்படுகிறீர்கள்? ஏதேனும் சிக்கல் இருந்தால், அது தீர்க்கப்பட்டு
ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைப்பது நல்லதுதானே. ஓராண்டு வரை நீங்கள் புதிய
சிஸ்டத்தினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு.
கேள்வி:
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதென முடிவெடுத்துவிட்டேன். தற்போது
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2013 என இரண்டு கம்ப்யூட்டர்களில்
பயன்படுத்தி வருகிறேன். இவை விண் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுமா?
நான் அப்கிரேட் செய்யப் போவது இலவச விண் 10 தொகுப்பினையே.
என். கார்த்திகேயன், கோயமுத்தூர்.
பதில்:
ஆபீஸ் 2013 நிச்சயம், விண்டோஸ் 10ல் செயல்படும். விண்டோஸ் பிரிவியூ
தொகுப்புடன் ஆபீஸ் 2007 செயல்பட்டது. எனவே, அதுவும் செயல்படும். நீங்கள்
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு ரிசர்வேஷன் செய்திடும் போதே, அது உங்கள்
கம்ப்யூட்டர்களில் இயங்கும் செயலிகளை அலசி, எவை எல்லாம் புதிய ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தில் செயல்படும் என்பதை உங்களிடம் தெரிவிக்கும்.
கேள்வி:
நான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், இணைய தள முகவரிகளை அதிகம் இணைக்கிறேன்.
கட்டுரைகளில் இவை இடம் பெற வேண்டியதுள்ளது. இதில் பிரச்னை என்னவென்றால்,
ஸ்பெல் செக் டூல், இவற்றில் பலவற்றில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்
காட்டிக் கொண்டுள்ளது. இதனால், டாகுமெண்ட்களைக் கையாள்கையில், அதிக நேரம்
எடுக்கிறது. இதனை எப்படித் தடுக்கலாம்?
எஸ். ஜெயப்பிரியா, புதுச்சேரி.
பதில்: இணைய முகவரிகளை, ஸ்பெல்லிங் செக் டூல் சோதனையிடாமல் செட்டிங்ஸ் அமைத்துவிடலாம். அதற்கு கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. முதலில் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Proofing என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
3.
இங்கு Ignore Internet and File Addresses என்பதன் அருகே உள்ள செக்
பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து
வெளியேறவும். இனி இணைய முகவரிகள், ஸ்பெல்லிங் சோதனைக்கு உள்ளாகாது.
கேள்வி:
கைராஸ்கோப் என்பது ஒரு சாதனமா? ஸ்மார்ட் போனுடன் அது எப்படி
சம்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த சாதனத்தைச் சிறியதாக, ஸ்மார்ட் போனுள்ளாக
வைத்துள்ளார்களா? சிறிய விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ஸ்ரீதர், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. கைரோஸ்கோப் (gyroscope) என்பது ஒரு தொழில் நுட்பம். ஓர்
அசைவு எந்தக் கோணத்தில் ஏற்படுகிறது என்பதைப் பல முனைகளிலிருந்து
கண்காணித்து, அதற்கேற்ப தன் செயல்பாட்டினை வகுத்துச் செயல்படுத்தும் தொழில்
நுட்பம் இது. ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, டேப்ளட் பி.சி. மற்றும் சில
சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முதலில் சாதனம் ஒன்று எந்த
நிலையில் இயங்குகிறது என்பதனை இது கண்டறிகிறது. எடுத்துக் காட்டாக,
வயர்லெஸ் மவுஸ், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்குகையில், இந்த தொழில்
நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அக்ஸிலரோமீட்டருடன் இது செயல்படுகையில், ஓர்
அசைவின் ஆறு திசைகள் இதன் மூலம் கண்டறியப்படுகின்றன. இடது, வலது, மேல்,
கீழ் மற்றும் முன்பாக, பின்புறமாக என ஆறு நிலைகள் அறியப்படுகின்றன. நம்
கரங்களின் அசைவுகளுக்கேற்ப செயல்பாடுகளை மேற்கொள்ளவும் இது பயன்படுகிறது.
முதலில், இந்த தொழில் நுட்பம் ஐபோன் 4ல் பயன்படுத்தப்பட்டது. தொடக்கத்தில்
MEM எனப்படும் (micro-electro-mechanical-systems) கைராஸ்கோப்
பயன்படுத்தப்பட்டது. தற்போது இதன் இடத்தில், மிகச் சிறிய அளவில்
வடிவமைக்கப்படும் ஆப்டிகல் கைராஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒரு
குண்டூசியின் தலையளவு இடத்தில் வைத்து இயக்கலாம். மருத்துவ துறையில், உடல்
உள்ளாக வைக்கப்படும் சாதனங்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி:
என்னிடம் இரண்டு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஒன்றில் விண்டோஸ் 7,
மற்றொன்றில் விண்டோஸ் 8.1 உள்ளது. இவற்றோடு சேர்த்து இலவசமாகக் கிடைக்க
இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்தையும், டூயல் சிஸ்டமாகப் பயன்படுத்த
முடியுமா?
எஸ். ஜெயகாந்தி, சேலம்.
பதில்: இலவசமாகத் தரப்படும்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏற்கனவே கட்டணம் செலுத்திப் பெற்ற
விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1க்கான அப்கிரேட் சிஸ்டம் ஆகும். எனவே,
இரண்டு சிஸ்டங்களை இயக்க முடியாது. உங்களுக்கு டூயல் சிஸ்டம் தான் வேண்டும்
என்றால், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை விலை கொடுத்துப் பெற்று, ஏதேனும் ஒரு
கம்ப்யூட்டரில், இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இன்ஸ்டால் செய்து
கொள்ளலாம்.
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், கீ லாக்கர் உள்ளது
என்றும், அது நாம் பாஸ்வேர்ட்களை டைப் செய்திடுகையில், அப்படியே காப்பி
செய்து வைத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறதே. உண்மையா? இதனைத் தவிர்க்க
என்ன செய்திடலாம்?
என். நிரஞ்சனா, புதுச்சேரி.
பதில்: சுருக்கமாகப் பதில் தருகிறேன். இல்லை. விரிவாகப் பதில் வேண்டும் என்றால், http://www.zdnet.com/article/does-windows-10-really-include-a-keylogger-spoiler-no/ என்ற முகவரியில் உள்ள கட்டுரையில் பார்க்கவும்.
கேள்வி:
இணையத்தில் உலா வருகையில், சில தளங்களில் கிளிக் செய்கையில், நாம் வேறு
ஒரு தளத்திற்கு இழுக்கப்படுகிறோம். விளம்பர தளங்களும் தோன்றி, ”இதைச் செய்,
அதைச் செய்” என்று கட்டளை இடுகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் தோன்றும்,
இணைய முகவரிகளை அனுப்பி, அந்த தளத்தில் நம்மை சிக்கவைக்கும் மால்வேர்
மற்றும் வைரஸ் இருக்கின்றனவா? என்று கண்டறிய முடியுமா?
என். ராஜாராமன், கோவை.
பதில்:
மிக அருமையான கேள்வி. இணையத்தில் தேடல் என்பது எந்த நேரத்திலும்,
மால்வேர்களால் தாக்கப்படலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
அப்படிப்பட்ட வேளைகளில், நம் பாதுகாப்பிற்கு உதவிடும் வழிகளை நாம் அறிந்து
கொண்டு தான் ஆக வேண்டும். நீங்கள் கேட்டுள்ள உதவியை
http://www.urlvoid.com/ என்ற முகவரியில் உள்ள தளம் மேற்கொள்கிறது. இணையத்
தேடலின்போது, உங்களுக்குச் சந்தேகம் ஏற்படும் இணையதள முகவரிகளை, இந்த தளம்
சென்று அதில் உள்ள கட்டத்தில் உங்களை இழுக்கும் இணைய தள முகவரியை ஒட்டி
Scan Now என்ற பட்டனைத் தட்டினால், இந்த தளத்தில் உள்ள செயலி, குறிப்பிட்ட
முகவரியில் உள்ள தளம் எப்படிப்பட்டது என அறிந்து, நமக்கு அறிக்கை
தருகிறது.
கேள்வி: என் டாஸ்க் பாரில், வலது ஓரத்தில்,
கடிகாரத்திற்கு அருகாமையில் காட்டப்படும் ஐகான்களை நான் நீக்க முடியுமா?
சில வேளைகளில் அளவுக்கு அதிகமாக இவை தென்படுகின்றன. இதற்கான வழிகளைச்
சொல்லவும்.
எம். சதுரகிரி மகாலிங்கம், சிவகாசி.
பதில்: இந்த
ஐகான்களை சிஸ்டம் ஐகான்கள் என்று அழைக்க வேண்டும். அதனால், இந்த பகுதி
சிஸ்டம் ட்ரே (System Tray) என அழைக்கப்படுகிறது. நாம் அவற்றை அழிக்க
முடியாது. மறைத்து வைக்கலாம். சிஸ்டம் ஐகான்கள் முழுவதையும் கூட நீங்கள்
மறைத்து வைக்கலாம். உங்கள் ஸ்டார்ட் மெனுவில் தேடல் கட்டம் செல்லவும்.
விண்டோஸ் 8 என்றால் சார்ம் பார் செல்லவும். பின்னர், “Turn system Icons on
or off” என டைப் செய்திடவும். கிடைக்கும் தேடல் முடிவுகளில், முதலாவதாகக்
காட்டப்படுவதில் கிளிக் செய்திடவும். இப்போது Taskbar and Start Menu
ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ திறக்கப்படும். இதில் customize என்பதில் கிளிக்
செய்திடவும். இன்னொரு விண்டோ காட்டப்படும். கீழாக Turn System Icons on or
off என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஐகான்கள் காட்டப்படும். அவை
ஒவ்வொன்றின் அருகேயும், ஐகான் காட்டப்பட வேண்டுமா, இல்லையா என்பதற்கான
ஆப்ஷன் கிடைக்கும். நீங்கள் விரும்பாத ஐகான்கள் காட்டப்படுவதனை இதன் மூலம்
மறைக்கலாம். இங்கு சம்பந்தப்பட்ட செயலிக்கான நோட்டிபிகேஷன்கள் வேண்டுமா
என்பதனையும் தீர்மானிக்கலாம்.