"டியூபர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால், காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது, பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும், மூளை, சிறுநீரகம், முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது.
அறிகுறி: தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள். நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம், இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகிறது. ஆண்டுதோறும், 17 லட்சம் பேர் பலியாகின்றனர்.
ஆசியாவில் அதிகம்: காசநோயின் பாதிப்பு, உலகம் முழுவதும் உள்ளது. உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உட்பட 22 நாடுகளில், காசநோயால் புதிதாக பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.
சிகிச்சை: காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் மட்டுமின்றி, காசநோய் முற்றும்போது, அது எலும்பு, சிறுநீரகங்கள், முதுகுத் தண்டையும், மூளையையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தையும் தாக்கவல்லது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. சாதாரணமாக ஒருவர், காசநோய் கிருமியால் தாக்கப்பட்டிருந்தாலும், அது முற்றாத நிலையில், அது மற்றவரை பாதிப்பதில்லை. ஆனால், மேற்கண்ட அறிகுறிகள் வெளிப்படும் நிலையில், அது தொற்று நோயாகிறது. இதை ஆக்டிவ் டிபி என்றழைக்கிறது மருத்துவம். இது, உடலில் உள்ளிருந்தே உடற்பாகங்களை அழிக்க வல்லமை பெற்றதால், இதை, உடல் திண்ணும் நோய் என்றும் அயல் நாடுகளில் அழைக்கின்றனர்.
காசநோய் இந்தியாவில் ஏறக்குறைய, 20 லட்சம் பேரை பாதித்துள்ளது என்பது சாதாரணமானது அல்ல. உலகில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் உள்ளனர் என்று மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காசநோய்க்கு, 20 லட்சம் பேர் பலியாகின்றனர் என்கிற புள்ளி விவரம் நம்மை மிரட்டுவதாக உள்ளது.
காசநோய் முற்றிக்கொண்டிருக்கிற நிலையில், அதன் பாதிப்புள்ளவருக்கு, காரணமற்ற உடல் எடை குறைவு, களைப்பு, சோர்வு, லேசான மூச்சுத் திணறல், காய்ச்சல், இரவில் வியர்த்தல் அல்லது குளிர் காய்ச்சல், பசி இல்லாமை ஆகியனவாகும். மிகவும் குறிப்பாக, அறிகுறி, இடைவெளியின்றி இருமல் மூன்று வாரங்களுக்குத் தொடர்தல், இருமலில் ரத்தம் வெளியேறுதல் ஆகியனவாகும்.
காசநோய் வராமல் தடுக்க...
* உடலில் எதிர்ப்பு சக்தியை குறையாமல் வைக்கக்கூடிய சிறந்த உணவுகளைச் சாப்பிடுவது.
* மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் விடுபடுதல். உடற்பயிற்சியின் மூலம் உடலை எப்போதும் துடிப்போடு வைத்துக் கொள்ளல்.