இந்திய மொபைல் சந்தையில், முன்னணி இடத்தில் இயங்கி வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி மொபைல் சேவையினை, வரும் வாரங்களில் 300 நகரங்களுக்கு விரிவு படுத்துகிறது.
மொபைல் போன் சேவை சந்தையில், உலக அளவில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில், இயங்கும் மொபைல் போன் சேவை நிறுவனங்கள், இந்த வகையில், வாடிக்கையாளர்களின் பெருகி வரும் தேவைகளைச் சமாளிக்க, சேவைகளைத் தரும் அடிப்படைக் கட்டமைப்பில், பல நூறு கோடி டாலர்களை முதலீடு செய்து வருகின்றனர். இந்தப் பிரிவில் முன்னணி இடத்தில் இயங்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் டிசம்பரில் 4ஜி சேவையைத் தொடங்க இருக்கிறது. இதனால், நிறுவனங்களுக்கிடையே போட்டி அதிகரித்து வருகிறது.
சென்ற 2012 ஆம் ஆண்டில், கொல்கத்தா நகரத்தில், 4ஜி நெட்வொர்க் சேவையினை அறிமுகப்படுத்தியது. பின்னர், சோதனை முறையில், 51 நகரங்களில், இந்த நெட்வொர்க்கினை இயக்கிப் பார்த்தது. வரும் வாரத்தில், இந்தியாவில் இயங்கும் 22 தொலைதொடர்பு மண்டலங்களில், 14 மண்டலங்களில் உள்ள 296 நகரங்களில், 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை, ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி விட்டல் தெரிவித்தார். சென்ற ஆகஸ்ட் 6 அன்று, 4ஜி விரிவாக்கத்தினை அமல்படுத்திய விழாவில், இதனைக் குறிப்பிட்டு பேசினார்.
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ உட்பட பல நிறுவனங்கள், ஐந்தாண்டுகளுக்கு முன்பே, 4ஜி நெட்வொர்க் சேவையினை வழங்க உரிமம் பெற்றன. ஆனால், இதற்கான கட்டமைப்பினை அமைத்து சேவை வழங்குவதில் எந்தவித முயற்சியும் எடுக்காமல் தயக்கம் காட்டி வந்தன. தொழில் நுட்ப பிரச்னைகளுடன், 4ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடிய மொபைல் போன்களும், போதுமான அளவில், அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் அதிகம் இல்லாமல் இருந்தன.
தற்போது சீனாவிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில், மலிவான விலையில், 4ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடிய மொபைல் போன்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், பல இந்திய பயனாளர்கள், ஸ்மார்ட் போன் மூலம் இணையத்தைத் தொடர்பு கொள்வதனைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். டவுண்லோட் செய்வதற்கு அதிக பட்ச வேகம் கொண்ட இணைப்பினை எதிர்பார்க்கின்றனர். இந்த சூழ்நிலை, தற்போது தொலை தொடர்பு சேவை நிறுவனங்களை 4ஜி பக்கம் திரும்ப வைத்துள்ளன. மொபைல் போன், லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில், 3ஜி நெட்வொர்க்கில் கிடைக்கும் இணைய இணைப்பு வேகத்தினைக் காட்டிலும், 4ஜி இணைப்பு அதிக வேகத்தில் கிடைக்கும் என்பதால், மக்கள் 4ஜியையே எதிர்பார்க்கின்றனர்.
4ஜி நெட்வொர்க்கில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள், ரெளட்டர் மற்றும் இணைய இணைப்பினைத் தரும் 'டாங்கிள்' சாதனங்கள் வழியாக 4ஜி சேவையினைப் பயன்படுத்தலாம். மொபைல் போன் பயனாளர்கள் எண்ணிக்கை, இந்தியாவில், ஆண்டுதோறும் 38% அதிகரித்து வருகிறது. இந்த வகையில், வரும் 2017ஆம் ஆண்டில், பயனாளர்கள் எண்ணிக்கை 31 கோடியே 40 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 3ஜி சேவை வழங்கப்படும் கட்டணத்தையே, ஏர்டெல் நிறுவனம் புதியதாக வழங்கி வரும் 4ஜி சேவைக்கும் நிர்ணயித்துள்ளது. இந்த வகையில், அனைத்து 3ஜி வாடிக்கையாளர்களையும், 4ஜிக்கு மாற்ற முயற்சிக்கிறது. 4ஜி டேட்டா தொகுப்பு ரூ.25லிருந்து தொடங்குகிறது. வரையறையற்ற டேட்டா தொகுப்பு ரூ.999லிருந்து கிடைக்கின்றன. ஏர்டெல் நிறுவனம் Flexpage என்ற டூல் மூலம், 4ஜி பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் நேரம், டேட்டா ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளலாம். இதே டூலைப் பயன்படுத்தி, தங்கள் பயன்பாட்டை, கூடுதல் கட்டணம் செலுத்தி, நீட்டித்துக் கொள்ளலாம்.
இத்தகைய அமைப்பு, பயனாளர்களுக்கும், சேவை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே, ஒளிவுமறைவற்ற உறவை ஏற்படுத்தி, இணைய பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்கிறது என்றும் விட்டல் குறிப்பிட்டுள்ளார். மொபைல் போன்களை விற்பனை செய்திடும், இணைய வர்த்தக தள நிறுவனமான, ப்ளிப் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அத்தளத்தில் விற்பனையாகும் மொபைல் ஸ்மார்ட் போன்களில், தன் 4ஜி சிம்களை இணைத்து விற்பனை செய்திடுகிறது. இதே போன்ற ஓர் ஒப்பந்தத்தினை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடனும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.