கழுத்து வலி காரணமாக, தலையை திருப்ப முடியாமலும், தூங்க முடியாமல் அவதிப்படுவோர் பலர். பாதிப்பு குறைய, எங்கு வலி ஏற்பட்டுள்ளதோ அங்கு, வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தர வேண்டும். படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக்கொள்ளவும். மேஜையில் அமர்ந்து பணிபுரியும் போது, நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையை தவிர்க்க வேண்டும்.
ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல், அடிக்கடி தலையை அசைக்க வேண்டும். இது, தசைகள் இறுக்கம் அடைவதை தவிர்க்கும். படுக்கும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு தரையில் படும்படி குப்புறப்படுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட உயரத்தை பார்ப்பதில், தொடர்ச்சியாக நெடுநேரம் ஈடுபடக்கூடாது. அதே போல், அதிகபாரம் தூக்குவதில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டாம். நீண்ட நேரம் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து, அவ்வப்போது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி அவசியம்: கழுத்தை, தவறான முறையில் திருப்பினால், கழுத்து தசைகள் உறுதியானதாக இல்லாமல் இருந்தால், கழுத்துக்கு மேலும் தொந்தரவு வரும். கழுத்துக்கான பயிற்சியின் மூலம், இத்தொந்தரவிலிருந்து மீண்டு வரலாம்.
மேலும், கழுத்தை பாதுகாக்கிற தசைகளை உறுதி பெற செய்யும். இருப்பினும், கழுத்து பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்தால், விரைவில் பலன் கிடைக்கும்.