சதீஷுக்கு நடுத்தர வயது தான். ஒருநாள் பின் மண்டை வலி, இடுப்புப் பகுதியின் பக்கவாட்டில் வலி மற்றும் வாய் எப்போதும் உப்புக் கரிக்கிறது என்று, என்னை சந்திக்க வந்தார்.
பரிசோதித்ததில், உயர் ரத்த அழுத்தம், 240 / 120 ஆக இருந்தது. அதனால், உடனே சிறுநீரக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதில், உப்பின் அளவு, 1.20 சதவீதத்திற்கு பதிலாக, 22 சதவீதம் இருந்தது. அதாவது சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது.
ஆனால் சதீஷுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியாக, கால் மற்றும் முகவீக்கம் எதுவுமே ஏற்படவில்லை. அந்த நேரத்தில், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரது சிறுநீரகம், தன் பணியை தொடர்ந்து செய்ய, போர்க்கால அவசரத்தில், 'டயாலிசிஸ்' எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க வழி செய்யப்பட்டது.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலில் உள்ள, திசுக்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை எப்போதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், ஓர் அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்பு தான், ரத்த ஓட்டம். இந்த ரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதற்குத் தான் ரத்த அழுத்தம் என்று பெயர்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதை
முதல் நிலை உயர் ரத்த அழுத்தம் என்கின்றனர், மருத்துவர்கள். இதில் பரம்பரை மரபணுக் கோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் ரத்த அழுத்தம் என்று பெயர்.
95 சதவீத உயர் ரத்த அழுத்தம் உள்ளோருக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், ரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இதய தமனி சுருங்குதல் போன்றவை ஏற்படுகிறது. கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல், வேண்டாத தீய பழக்கங்கள் (புகைப்பிடிப்பது, மது அருந்துவது) போன்றவற்றால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவற்றால் ரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு உட்கொள்வதால் அதிகமான உப்பு ரத்தத்தில் கலக்கிறது. இதனால் ரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க, உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக் கொண்டு, சிறுநீரகம் மூலம், அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் ரத்த அழுத்தம் கூடுகிறது.
சதீஷுக்கு ஏற்பட்ட நிலையும் இதுதான். தற்போது மருத்துவ கண்காணிப்பிலேயே இருக்கிறார். இதில், மற்றொரு சோகம் என்னவென்றால், அவருக்கு ஒரு மாதம் முன்தான் திருமணமும் நடந்தது. சதீஷின் மனைவி, கணவரின் நிலை கண்டு அழுது கொண்டே இருக்கிறார்.
நடுத்தர வயதில் இருப்போர், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றம் ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவத்தை பொறுத்தவரை, வந்த பின் குணப்படுத்துவதை விட, வரும்முன் காப்பதே மேலானது!
- தமிழ்ச்செல்வன்,
பொது மருத்துவர், சென்னை.
98401 60706