1 கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எதனால் வருகிறது?
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தான் காரணம்.
2 அந்த பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே...?
உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளிகளில், 25 சதவீதம் பேர், இந்தியர்கள் தான். காரணம், சரியான இடைவெளியில், முறையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாததும். சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததும் ஆகும்.
3கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது?
இந்த நோய், ஆணிடமிருந்து பெண்ணுக்குத் தாம்பத்திய உறவின் மூலம் பரவுகிறது. இதற்கு மூல காரணியான வைரஸ், மனித உடலில் இருந்தாலும், எல்லாருக்கும், பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது உடலில் எதிர்ப்புச் சக்தி குறையும் போது, இந்த வைரஸ் வீரியத்துடன் மனிதனை தாக்குகிறது.
4கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கியுள்ளதா என்பதை எவ்வளவு நாட்களில் கண்டறியலாம்?
இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள், உடலில் நுழைந்து, திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல ஆண்டுகள் கழித்தே, புற்றுநோயாக வெளிப்படும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்.
5 கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
ஏதேனும் நோய் தொற்று இருந்து, அதைச் சரிசெய்யாமல் விட்டாலும், நோய்க்கு காரணியான வைரசுக்கு சாதகமான சூழல் அமைந்து விடும். கர்ப்பப்பை வாயினுள் நுழையும் வைரஸ், உடலின் திசுக்களில் மாறுதல்களை உண்டாக்கும். அவை தான், புற்றுநோய் வருவதற்கு முன் வரும் அறிகுறிகள். அந்த மாறுதல்கள் ஏற்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து தான், அது புற்றுநோயாக மாறுகிறது. இந்த நீண்ட காலத்தில், தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டே இருந்தால், நோய் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம்.
6 புற்றுநோய்களில் எந்த நோயை ஆரம்பிக்கும் முன்பே கண்டறிய முடியும்?
சினைப்பை புற்று, மார்பகப் புற்று, எலும்பு புற்று, ரத்தப் புற்று போன்றவை எல்லாம் குறிப்பிட்ட சில நிலைகளை அடைந்த பின்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை, பரிசோதனை மூலம் ஆரம்பிக்கும் முன்பே கண்டுபிடித்து, அது வராமல் தடுக்க முடியும்.
7 கர்ப்பப்பை வாய் புற்றுக்கான பரிசோதனைகள் என்னென்ன?
'பாப்ஸ்மியர், வயா, வில்லி' பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின், 'க்ரையோ' என்ற எளிதான முறையில், அதை சரிசெய்து விடலாம். அல்லது அந்த இடத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடலாம். சிகிச்சைக்குப் பின்னும் கூட, குறிப்பிட்ட கால இடைவெளியில், 'பாப்ஸ்மியர்' பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
8 கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மரபணு குறைபாடுகளால் ஏற்படக் கூடியதா?
அப்படி வருவதற்கு வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு, கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
9 கர்ப்பப்பை வாய் புற்று வராமல் தடுக்க, தடுப்பூசிகள் உள்ளனவா?
ஆம்! பெண் குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள், அதற்கான தடுப்பூசியை போட வேண்டும். ஆறு மாதங்களுக்குள், மூன்று முறை போட வேண்டும். இந்த வயதை தவறவிட்டால், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
10 எப்போதெல்லாம் கர்ப்பப்பை வாய் புற்றுக்கான பரிசோதனைகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்?
அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. திருமணமான பெண்கள் அனைவரும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கட்டாயம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 35 வயது முதல் 45 வயதுக்குள், ஒரு முறையேனும், பெண்கள் 'பாப்ஸ்மியர்' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- கி.ஜெயகுமார்,
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்
மதுராந்தகம்