அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஆட்சி செய்திடும் இந்தியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2015
00:00

கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டவுடன், அனைத்து மக்களின் கவனமும், அமெரிக்காவில் டிஜிட்டல் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இயங்கும் இந்திய வம்சாவளியினர் பக்கம் திரும்பி உள்ளன. சதர்ன் நியூ ஹேம்ப்ஷயர் பல்கலைக் கழகத்தில் அமெரிக்காவில் பணியாற்றும், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், இந்திய தலைமை நிர்வாகிகள், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையை முதன்மையாகக் கொண்டவர்களாக உள்ளனர். மிகுந்த தன்னடக்கமும் மிகத் தீவிரமான தொழில் நுட்ப அறிவும் ஆய்வும் இணைந்தவர்களாக இருப்பது இவர்களின் சிறப்பு என அறிவித்துள்ளது. இந்த தலைவர்கள், மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முடிவுகளை ஈட்டியவர்கள். ஆனால், அதே நேரத்தில், அந்த முடிவுகள் குறித்து சிறிதும் ஆரவாரம் செய்ததில்லை என்றும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொழில் நுட்ப தலைவர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. சுந்தர் பிச்சை: கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை. இவர் கூகுள் தற்போது ஒரு பிரிவாக இணைக்கப்பட்டிருக்கும் 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லாரி பேஜ் தலைமையின் கீழ் இயங்குவார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமாக ஆல்பபெட் இயங்கும். செர்ஜே பிரின், ஆல்பபெட் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
2. சத்ய நாதெள்ளா: 47 வயதாகும் சத்ய நாதெள்ளா, 2014 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்நிறுவனத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இந்த தலைமைப் பொறுப்பிற்கு உயர்ந்தார். அதுவரை, ஆபீஸ் சாதனங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய நிறுவனத்தின் செயல்பாட்டினை மொபைல் மற்றும் க்ளவ்ட் மைய செயல்பாடுகளிலும் திருப்பியுள்ளார். நாதெள்ளா, ஹைதராபாத் நகரில் வாழ்ந்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகனாவார். 1988ல் மணிபால் பல்கலையில் தன் பொறியியல் பட்டத்தினைப் பெற்றார். பின்னர், விஸ்கான்சின் பல்கலையில், கம்ப்யூட்டர் அறிவியலில், தன் முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார். சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தில் தொடக்கத்தில் பணியாற்றினார். பின்னர், சிகாகோ பிசினஸ் ஸ்கூல் என்னும் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
3. ஷாந்தனு நாராயென்: 52 வயதாகும் நாராயென், அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, 2005ல் பொறுப்பேற்றார். அப்போது அந்நிறுவனத்தில் ஏழாண்டு பணியை முடித்திருந்தார். இணையத்தில் போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட Pictra என்னும் நிறுவனத்தினை இவரும் இணைந்தே தொடங்கினார். அடோப் நிறுவனத்தில் இணைந்த பின்னர், போட்டோஷாப் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் போன்ற டிஜிட்டல் புரோகிராம்களுக்கு உரிமம் கொண்டு வழங்கி வந்த அடோப் நிறுவனத்தை, க்ளவ்ட் அமைப்பில், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் முறைக்கு மாற்றினார். இவரும், நாதெள்ளா போல, ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணுவியல் பொறியியல் பட்டத்தினைப் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் பெர்க்லீ நகரில் இயங்கும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கு எம்.பி.ஏ. படிக்கச் சென்றார். சிலிக்கான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் டிஜிட்டல் நகரில், தன் பணியை முதலில், ஆப்பிள் நிறுவனத்தில் தொடங்கினார். பின்னர் சிலிகான் கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணி சேர்ந்தார். அடுத்து Pictra நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அடோப் நிறுவனத்தில் இணைந்தார்.
4. பத்மஸ்ரீ வாரியர்: சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அதிகாரியாகப் பணியாற்றும் பெண்மணி 1961 ஆம் ஆண்டு, விஜயவாடாவில் பிறந்த இவர், புகழ் பெற்ற, டில்லி இந்திய தொழில் நுட்பக் கழகத்தில், 1982ல் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் கார்னெல் பல்கலையில், கெமிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர், மோட்டாரோலா நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணி புரிந்து, அதன் தலைமை நிர்வாகக் குழுவில் இடம் பெற்றார். ஆண்களே அதிகம் காணப்பட்ட சிலிக்கான் பள்ளத்தாக்கில், உயர் பதவியில் இடம் பெற்ற ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர் என அனைவரும் அப்போது இவரைப் பாராட்டினர். 2007 ஆம் ஆண்டில், வாரியர், இந்நிறுவனத்திலிருந்து விலகி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில் நுட்ப அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
5. வினோத் கோஸ்லா: சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். முதன் முதலில், இந்தியர்களும், சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பேற்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். 1955ல் டில்லியில் பிறந்த வினோத் கோஸ்லா, டில்லி, இந்திய தொழில் நுட்ப கழகத்தில், எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் பாடப்பிரிவில் தன் இளங்கலைப் பட்டத்தினைப் பெற்றார். பின்னர், அமெரிக்காவில், கார்னீகி மெலன் பல்கலையில் பயோ மெடிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் பட்டமும், அதன் பின்னர், ஸ்டான்போர்ட் பல்கலையில், 1980ல், எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்காட் மக்னிலீ மற்றும் ஆண்டி பெக்டோல்ஷீம் (Scott McNealy and Andy Bechtolsheim) ஆகியவர்களுடன் இணைந்து சன் மைக்ரோ சிஸ்டத்தினை நிறுவினார். 1984 ஆம் ஆண்டு வரை இதன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார். ஆனால், சிலிக்கான் பள்ளத்தாக்கில், இவருடைய சிறந்த நிர்வாகச் செயல்பாடுகள், தொழில் முனைவோருக்கான முதலீட்டுப் பிரிவில் காணப்பட்டன. Kleiner Perkins Caufield & Byers என்ற முதலீட்டு நிறுவனத்தில் இவர் ஒரு பங்காளராகச் சேர்ந்தார். பல புதிய தொழில் முனைவு முயற்சிகளுக்கு வித்திட்டார். 2004ல், இவர் தன் சொந்த நிறுவனமாக, கோஸ்லா வென்ச்சர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் தற்போது நூறு கோடி டாலர் அளவில், பல நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ந்து வருகிறது. இவை யாவும், தகவல் தொழில் நுட்ப பிரிவில் இயங்கும் நிறுவனங்களாகும்.
6. அமித் சிங்கால்: கூகுள் நிறுவனத்தை உலகெங்கும் எடுத்துச் சென்ற கூகுள் தேடல் சாதனத்தை வடிவமைத்தவர் இவரே. கூகுள் நிறுவனத்திற்கு அதிகமான அளவில் வருமானத்தை ஈட்டித் தரும் கூகுள் சர்ச் இஞ்சினுடைய அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி, அவ்வளவாக, இந்த சிறப்பிற்கு என வெளியே அறியப்படாதவர். 1968ல் ஜான்சி நகரில் பிறந்த இவர், ஓர் அரசு அதிகாரியின் மகனாவார். ரூர்கி இந்திய தொழில் நுட்ப கழகத்தில் 1989ல் தன்னுடைய இளங்கலைப் பொறியியல் பட்டத்தினைப் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் இயங்கும் மின்னோஸ்டா பல்கலையில் தன் முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார். பின்னர், டிஜிட்டல் தேடல் கலையின் பிதாமகர் என அழைக்கப்படும் ஜெராட் சால்டன் (Gerad Salton) என்ற விஞ்ஞானியின் தலைமையில் தன் டாக்டர் பட்ட ஆய்வினை, கார்னெல் பல்கலையில் மேற்கொண்டு முடித்தார். 1996ல் ஏ.டி. அண்ட் டி லேப் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர், கூகுள் நியூஸ் நிறுவனப் பிரிவில் அப்போது பணியாற்றிய கிருஷ்ணா பரத் மூலம், கூகுள் நிறுவனத்தில் 2000 ஆவது ஆண்டில் சேர்ந்தார்.
7. ருச்சி சங்கவி: பேஸ்புக் நிறுவனம் பணியில் அமர்த்திய முதல் பொறியாளர் பெண்மணி 33 வயதாகும் ருச்சி சங்கவி. செய்திகளை பேஸ்புக் தளத்தில் காட்டுவதற்கான அமைப்பினை உருவாக்கியவர். பேஸ்புக் செயல்பாட்டில், இது ஓர் அதி முக்கியம் கொண்ட பணியாகும். பயனாளர்களுக்கு செய்திகளை அவ்வப்போது, பேஸ்புக் தளத்தில் ஓடவிடும் தொழில் நுட்பத்தினை மிகத் திறமையாக உருவாக்கியவர் ருச்சி சங்கவி. 2011 ஆம் ஆண்டில், சங்கவி பேஸ்புக் நிறுவனத்தை விட்டு விலகி, Cove என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனை கார்னீகி மெலன் பல்கலையில் தன்னுடன் பயின்ற ஆதித்யா அகர்வால் என்பவருடன் இணைந்து தொடங்கினார். ஓராண்டுக்குப் பின்னர், இந்நிறுவனத்தை ட்ராப் பாக்ஸ் வாங்கியது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டு வரை இதன் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
8. தீபக் அஹூஜா: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவிய எலன் மஸ்க், சிலிக்கான் பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான நிறுவன அதிபர் என மதிக்கப்படுபவர். இவர் முழு நம்பிக்கை வைத்து, டெஸ்லா நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்து தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பவர் தீபக் அஹூஜா. 1985ல் வாரணாசியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் செராமிக்ஸ் பொறியியலில் பட்டம் பெற்றார் தீபக். பின் அமெரிக்கா சென்று, கார்னீகி மெலன் பல்கலையில், 1993ல், எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். போர்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2008ல் அஹூஜா டெஸ்லா நிறுவனத்தில் சேர்ந்தார். இந்நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் பிரிவில் பல புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தியது. மற்ற துறைகளில் அனுபவம் பெறுவதற்காக, டெஸ்லா நிறுவனத்தை விட்டு விலக இருப்பதாக அஹூஜா அறிவித்துள்ளார்.
9. பூஜா சங்கர்: ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்பட, ஆய்வு மேற்கொள்ள Piazza என்னும் இணைய தள நிறுவனத்தைத் தொடங்கிய வகையில் பூஜா சங்கர், சிலிக்கான் பள்ளத்தாக்கில் பெயர் பெற்றவர். ஸ்டான் போர்ட் பல்கலையில், எம்.பி.ஏ. படிக்கும்போது, இந்த இணையதளத்தைத் தொடங்க எண்ணி, வடிவமைத்து வெற்றிகரமாக நடத்தி வருபவர் பூஜா சங்கர். 2009ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், பல நிறுவனங்கள் ஏறத்தாழ 80 லட்சம் டாலர் நிதி முதலீடு செய்துள்ளன.
10. ராம் ஸ்ரீராம்: Sherpalo Ventures என்னும் முதலீட்டு நிறுவனத்தை வடிவமைத்து நிறுவி, கூகுள் நிறுவனத்தில் முதல் முதலாக முதலீடு செய்தவர் இவர். Khosla புகழ் பெற்றதைப் போல, தேர்ந்தெடுத்து முதலீடு செய்த நிறுவனங்களுக்காகப் பெயர் பெற்றவர்.
கூகுள் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்ட போது, தன் 40 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து, 106 கோடி டாலர் பெற்றார். உலக அளவில் செயல்படும் மொபைல் விளம்பர நிறுவனமான InMobi நிறுவனத்தில் இவர் முதலீடு செய்துள்ளார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் தன் பட்ட வகுப்பினை முடித்தவர். சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதல் பிரவுசரைத் தந்த நெட்ஸ்கேப் நிறுவனத்தில் தன் பணியைத் தொடங்கினார். பின்னர், Junglee, என்ற இணைய விளம்பர நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனத்தை, 1998ல், அமேஸான் நிறுவனம் 18.5 கோடி டாலர் விலை கொடுத்து வாங்கிக் கொண்டது. அந்த பணத்தை, அப்போதுதான் மிக எளிய நிலையில் இயங்கி வந்த கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X