கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் புரோகிராம் வடிவமைத்துத் தரும் பொறியாளர்கள், வல்லுநர்கள், சில வேடிக்கையான விஷயங்களை மறைவான இடத்தில் பதிந்து வைப்பார்கள். இவை பெரும்பாலும் அதனை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் இருக்கும். ஆனால், பயனாளர்களும் இவற்றை அறிந்து செயல்படுத்தலாம். இத்தகைய ஏற்பாட்டு உத்தியை ஆங்கிலத்தில் Easter Egg என அழைப்பார்கள்.
அண்மையில், கூகுள் நிறுவனம், புதியதொரு தலைமை நிறுவனமாக 'ஆல்பபெட்' என்னும் நிறுவனத்தை அமைப்பதாக அறிவிப்பு ஒன்றை வழங்கியது. இதன் தலைவர் லாரி பேஜ் தன் வலைமனைப் பதிவில், ஆகஸ்ட் 10 அன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு, உலகெங்கும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா, குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத் தலைவராக அறிவிக்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இது குறித்து அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின.
ஆனால், பலர் இந்த வலைமனைப் பதிவில் இருந்த இன்னொரு ஆச்சரியத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அதுஅந்த வலைமனைப் பதிவில் இருந்த ஓர் 'ஈஸ்டர் எக்'. இதனை நீங்களாகச் சென்று பார்த்தால், இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
முதலில் அந்த வலைமனைப் பதிவிற்குச் செல்லுங்கள். அதன் இணையதள முகவரி : http://googleblog.blogspot.in/2015/08/google-alphabet.html. இந்த வலைமனைப் பதிவினைப் பார்த்துப் படிக்கையில், அதில் ஈஸ்டர் எக் இருப்பது தெரியவராது. என்ன தேடினாலும் அறியக் கிடைக்காது. அறிவிப்பினை முதலில் இருந்து மேலோட்டமாகப் பார்க்கவும். அதில் "Sergey and I…" எனத் தொடங்கும் ஏழாவது பத்திக்குச் செல்லவும். இந்த பத்தியில் தான், அந்த ஈஸ்டர் எக் ஒளிந்து கொண்டிருக்கிறது. இப்போதும் நம் சாதாரணக் கண்களுக்கு, அல்லது படிக்கும் வேகத்திற்கு எதுவும் தெரியாது.
ஒவ்வொரு வரியாக, மவுஸ் கர்சரை நகர்த்திக் கொண்டு வந்தால், ஒரு வேளை உங்கள் கண்களுக்குப் புலப்படலாம். கர்சர், ஓரிடத்தில், புதிய தளத்தினை கிளிக் செய்வதற்கு ஏதுவாக, சிறிய மடக்கப்பட்ட உள்ளங்கையாக மாறும்.
இன்னும் தெரியவில்லை என்றால், "Alphabet will also include our X lab, which incubates new efforts like Wing, our drone delivery effort." என்றுள்ள வரிக்குச் செல்லவும். இந்த வரியின் இறுதியாக உள்ள முற்றுப் புள்ளி அருகே, மெதுவாக, மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். இங்கு கர்சர் அடையாளம் மாறும் இடத்தில், கிளிக் செய்திடவும்.
உடனே http://www.hooli.xyz/#transformation என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம். இங்கு பல பக்கங்கள் கிடைக்கும். ஒவ்வொன்றும், கூகுள் நிறுவனத்தின் கனவுத் திட்டங்களை எடுத்துக் கூறுவதாக அமைக்கப்பட்டிருக்கும். பொறுமையாக அனைத்தையும் படித்து ரசிக்கவும்.