பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி. சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பப்பாளியை காயாகவும், பழமாகவும் உண்ணலாம். பப்பாளி பழத்தை சாப்பிட்டால் ஜீரணக்கோளாறு நீங்கும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வயிற்றுத் தொல்லைகளும் படிப்படியாக நீங்கும்.
பப்பாளிக்காயில் சத்துநீர் அதிக அளவில் உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் பாப்பெய்ன், மருந்து தயாரிப்பு தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படும்.
முதுமையடைகிறபோது நம் உடம்பில் உள்ள, இயற்கையான ரசங்கள் குறைந்த அளவே சுரக்கும். அதனால் முழுமையாக ஜீரணிக்க முடிவதில்லை. இதனால் வாயுத்தொல்லை, நெஞ்சு எரிச்சல், உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். அப்போது பப்பாளியிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடலாம். பாப்பெய்ன் ரத்தத்தின் உறைவுத்தன்மையை உண்டாக்கும். ரத்தம் வெளியேறும் நிலையில், இழப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டது. ஈரல் வீக்கம், மூலஉபாதைகளுக்கு பப்பாளி மிக சிறந்த மருந்தாகும். இது தவிர வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி கை கொடுக்கும்.
கால் ஆணி, மரு போன்ற சரும நோய்களையும், பப்பாளிப்பழம் குணப்படுத்தும். பப்பாளியை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், பிரசவமான பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பப்பாளியை படர்தாமரை உள்ள இடத்தில் தேய்த்தால், நல்ல பலன் கிடைக்கும். பப்பாளி ஒரு முழுமையான பழம். நமது அன்றாட தேவைகளான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் இந்த பழத்திலிருந்து கிடைக்கிறது. பப்பாளிப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. வளரும் குழந்தைகளுக்கு இது டானிக் மாதிரி செயல்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கும், இளம் தாய்மார்களுக்கும் சக்தி அளிக்கும் உணவு. அஜீரணம், குடல் உபாதைகளுக்கும் பப்பாளி மிக சிறந்த மருந்தாகும். வயிற்றுப்போக்கு, பித்தப்பையில் ரத்தக்கசிவு ஆகியவற்றை பப்பாளி குணப்படுத்தும். பெண்களுக்கு கருப்பைத்தசை
நார்கள் சுருங்க, பப்பாளிக்காய் உதவும். முறையாக மாதவிடாய் போக்கை நிகழ்த்தும். கன்னிப்பெண்களுக்கும் அச்சம் அல்லது குளிரில் மாதவிடாய் தடைபடும் சமயங்களில் பப்பாளி உதவியாக இருக்கும்.
சத்துக்குறைவான உணவு, மதுபான பழக்கம் காரணமாக ஏற்படும் ஈரல் வீக்கத்தை, பப்பாளி விதைகளை கொண்டு குணப்படுத்தலாம். பப்பாளி சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால், டிப்தீரியா, தொண்டை அழற்சி போன்றவை குணமாகும். ஜாம், ஜஸ்கிரீமில் மணமூட்டியாகவும் பப்பாளியை பயன்படுத்தலாம்.
இதன் சிறந்த மருத்துவ பயன்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கு அளிக்கும் பலன்களை விட, முதியவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கின்றன. முதியோர் தினமும் அனுபவிக்கும் மலச்சிக்கல் பிரச்னைக்கு, பப்பாளியை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது
என்பதே உண்மை.