தினமும் தலைக்குளிக்கலாமா?
சு.விக்னேஷ், திருவொற்றியூர், சென்னை.
'ஹைப்பர்ஹிட்ரோசிஸ்' என்ற வியர்வைப் பிரச்னை இருந்தால் தவிர, தலைமுடியை தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை. 'ஷாம்ப்'புகளில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அவை தலைமுடிகளிலும், மயிர்க் கால்களிலும் உள்ள எண்ணெய் பசைகளை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்து விடும்; இது நல்லதல்ல!
எனவே, வாரத்திற்கு மூன்று முறை, தலைமுடியை அலசினால் போதும். அதிலும், சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது. எண்ணெய் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை, 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்கு பின், சூடான நீரில் நனைத்த டவலை தலையில் சுற்றி, சிறிது நேரத்திற்குப் பின் முடியை அலச வேண்டும்.
ரா.ரத்தினமூர்த்தி, சரும நிபுணர், சென்னை.
எனக்கு, பித்த வெடிப்பு உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது?
தா.விசாலாட்சி, வானகரம், சென்னை.
வறட்சியும், அதிக குளிர்ச்சியும் தான் காரணம். குளிர் காலத்தில், சருமம் சுருங்க ஆரம்பிப்பதால், வெடிப்புகள் ஏற்படக்கூடும். அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதாலும், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. குதிகால் வெடிப்பை தடுக்க, உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டியதும் அவசியம். காலணி அணியாமல், வெறும் காலிலேயே கண்ட இடங்களில் சுற்றினால், பாத வெடிப்புகளில் கிருமிகள் நுழைந்து, வெடிப்புகளை மேலும் பெரிதாக்கி, நிலையை மோசமாக்கிவிடும்.
ச.மனோகரன், சரும நோய் நிபுணர், சென்னை.
என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது; சாப்பிட மறுக்கிறான். இதனால், மிகவும் ஒல்லியாக காட்சி அளிக்கிறான். எடையை கூட்ட என்ன செய்வது?
சி.ப்ரியா, கடையம், திருநெல்வேலி.
உங்கள் குழந்தைக்கு, முழு கொழுப்புள்ள, பாலாடை நீக்காத பால், தயிர் போன்றவற்றை கொடுங்கள். இது கூடுதலாக இருந்தாலும், குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கொஞ்சம் நெய், வெண்ணெய் போன்றவற்றை, குழந்தைக்கு கொடுக்கும் பருப்பு அல்லது காய்கறிகளில் சேர்த்துக் கொடுக்கலாம்.
சூப், ஜாம் சாண்ட்விச் மற்றும் மசித்த உருளைக் கிழங்குகளில், பாலாடையைச் சேர்த்துக் கொள்ளலாம். முழு கொழுப்பு பால், பாலாடையில் செய்யப்பட்ட, கீர் அல்லது கேரட் அல்வா போன்ற ஆரோக்கியமான உணவுகளையும் கொடுத்து வரலாம்.
குழந்தையின் உணவில், நட்ஸ், பாதாம், முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொடுங்கள். நொறுக்குத் தீனியாக, கிஸ்மிஸ் கொடுக்கலாம். இட்லி மற்றும் தோசைக்கு, கடலை பருப்பு அல்லது தேங்காய் சட்னி கொடுக்கலாம்.
நட்ஸ்களை பொடியாக்கி தான், கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அது அவர்களின் தொண்டையில் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
ஜெ.குமுதா, குழந்தைகள் நல நிபுணர், சென்னை.